மந்திரவாதிகளின் ஜாலங்களில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை அந்த ஜாலவித்தைகள் மகிழ்ச்சியையே தருகின்றன. தொப்பியிலிருந்து முயலை வரவழைப்பது இன்றும் ஆச்சரியமே. அதே போல் நின்றுகொண்டிருக்கும் ஒரு மனிதனை மந்திரவாதி அவனுடைய மந்திரக்கோலால் ஒரு தட்டு தட்டி "ஜீபூம்பா, மறைந்து போ" என்றவுடன் அந்த மனிதன் மறைந்து போவான்.
ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இந்த மறைந்து போகச் செய்யும் வித்தையே. சிறுகுழந்தைகளுக்கு நாமும் சில சமயம் இந்த வித்தையைக் காட்டி அதை அழவைத்திருக்கிறோம். ஆனால் அது நம் கைத்திறன். ஒரு பொருளை வேகமாக மறைத்தால் குழந்தையினால் அதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.
அது போல் கணிணியில் ஒரு பைலை மவுசினால் தொட்டு "ஜீபூம்பா, மறைந்து போ" என்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடுவதைப் பார்க்கிறோம். தினமும் நாம் இதைப் பல தடவை செய்கிறோம். ஆனால் இந்த வித்தையை நான் சமீபத்தில் புதிதாகப் பயில நேர்ந்தது. மிகவும் தெரிந்த வித்தையானாலும் அந்த சமயத்தில் அது என் புத்திக்கு உரைக்கவில்லை. இன்னொருவர் சுட்டிக்காட்டிய பிறகுதான் அது எனக்குப் புலனாகியது.
சமீபத்தில் நான் அநாமதேயங்களைப் பற்றி ஒரு பதிவு போட்டது நண்பர்களுக்கு நன்றாக நினைவு இருக்கும். ஏனெனில் அந்தப் பதிவு கிளப்பிய நாற்றம் உலகமே பரவியது. சிலர் செய்த அக்கிரமங்களால் நான் என் சமநிலையையை இழந்தேன். கடுங்கோபம் என்னைப் பீடித்தது. அந்தப்பதிவில் என் கோபத்தை எல்லாம் கொட்டினேன். புலவர் ஐயா கூட சாந்தமடையுங்கள் என்று ஆறுதல் கூறினார்.
ஆனாலும் இரண்டு நாள் கழித்துத்தான் சமநிலை வந்தது. அந்த நாற்றம் பிடித்த பதிவை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முத்து நிலவன் என்ற பதிவர் ஒரு எளிமையான யோசனை சொன்னார். அந்தப் பதிவை முழுமையாக "டெலீட்" செய்து விடுங்களேன் என்று கூறினார். எனக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது. அடுத்த விநாடி அந்தப்பதிவில் இருக்கும் "டெலீட்" பட்டனை மவுசினால் ஒரு சின்ன சொடுக்கு சொடுக்கினேன்.
அவ்வளவுதான். அடுத்த விநாடி மந்திரவாதி ஜீபூம்பா சொன்னவுடன் பொருட்கள் மறைவது மாதிரி இந்தப் பதிவு முற்றிலுமாக மறைந்து விட்டது. எங்கு போனது, எப்படிப் போனது என்ற தடயம் ஒன்று கூட இல்லை. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வீட்டின் தரையை சுத்தமாக டெட்டால் போட்டுத் துடைத்தது போல் உணர்ந்தேன்.
இதில் என்ன விசேஷம் என்னவென்றால் இந்த தீர்வு எனக்குத் தெரிந்திருந்தும் அதை இந்த சமயத்தில் உபயோகிக்கலாம் என்று என் புத்திக்கு உரைக்கவில்லை. அப்போதுதான் ஒரு உண்மையை உணர்ந்தேன். ஒரு பெரும் சிக்கலில் ஒருவன் சிக்கி இருந்தால் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு அவன் கண் முன்னால் இருந்தால் கூட அது அவனுக்குத் தெரியாது. வேறு ஒருவர் அதைச் சொன்னால்தான் அவன் அதை உணர்வான்.
ஆகவே பிரச்சினைகளில் சிக்கும்போது இன்னொருவரிடம் யோசனை கேட்டால்தான் அந்தப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இது நான் கற்ற பாடம்.
நண்பர்கள் அறிவுரையை ஏற்று என் தளத்தில் அனானி பின்னூட்டங்களை தடை செய்து விட்டேன். மேலும் பதிவிற்குப் பொருந்தாத பின்னூட்டங்களை பிரசுரிப்பது இல்லை என்ற முடிவும் மேற்கொண்டிருக்கிறேன்.