ஜெயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 மார்ச், 2013

நான் ஜெயிலுக்குப் போனேன்.


நான் ஏதோ கொலைக்குற்றம், வழிப்பறி அல்லது பாலியற்குற்றம் புரிந்து விட்டு ஜெயிலுக்குப் போனதாக கற்பனை செய்யவேண்டாம். அதற்குத் தேவையான உடல், மன தைரியம் எனக்கில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பையன் ஒரு சிறு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசரணைக் கைதியாக சிறைக்கு அனுப்ப்பபட்டான். ஜாமீன் வாங்குவதில் பல சிக்கல்கள். போலீஸ், கோர்ட்டு, சிறைச்சாலை, வக்கீல்கள் இவர்கள் பக்கம் போகாமல் இருந்தால் நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் பெரும்பாலானோருக்கு இது தெரியாது.

ஆனால் நரகத்தைப் பார்த்தால்தான் சொர்க்கம் என்றால் என்ன என்று புரியும்.  இந்த நான்கு இடங்களையும் பார்த்தால் நரகம் என்றால் என்ன என்பது தெளிவாகப் புரியும்.

அந்தப் பையனின் பெற்றோர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லலாமென்று அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர்கள் வெளியில் புறப்படுவதற்கான ஆயத்தத்தில் இருந்தார்கள். வெளியில் புறப்படுகிறமாதிரி இருக்கிறதே என்றேன். ஆமாங்க, பையனைப் பார்த்து விட்டு வரலாமென்று புறப்படுகிறோம் என்றார்கள். அந்தப்பையனை நன்றாகத் தெரியுமாதலால் நானும் வரட்டுமா என்றேன். அவர்கள் வாங்களேன் என்று சொன்னார்கள். நாங்கள் மூவரும் அவர்கள் காரில் சென்றோம்.

கார் முதலில் ஒரு பழக்கடைக்கு சென்றது. இங்கு எதற்கு செல்கிறார்கள் என்று யோசிக்கும்போது, பையனுக்கு கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதற்காக இங்கே வந்தோம் என்றார்கள். அப்படியா என்று நினைத்துக்கொண்டேன். எனக்கும் ஒரு பழஜூஸ் வந்தது. அவர்கள் ஏதேதோ வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

பிறகு எல்லோரும் சிறைச்சாலைக்குப் போனோம். அங்கு முதல் கேட்டில் ஒரு விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்தோம். அதை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து எங்கள் மூவருடமும் கைரேகை வாங்கினார்கள். ஒருவன் என்ன படித்திருந்தாலும் அவர்களைப் பொருத்தவரையில் அவன் கைநாட்டுதான்.

அங்கே இருக்கும் இன்னொரு ரூமில் நாம் வாங்கிக்கொண்டு போயிருக்கும் தின்பண்டங்களைப் பரிசோதித்து, சிலவற்றை ஏற்றுக்கொள்ளாமல், மீதி இருப்பவற்றை ஒரு ஜெயில் பையில் போட்டு, அதற்கு ஒரு நெம்பர் கொடுத்து, நம்மிடம் ஒரு டோகன் கொடுக்கிறார்கள்.

பிறகு அங்கே இருக்கும் இன்னொரு ரூமில் நம்மிடம் ஏதாவது வெடிகுண்டு இருக்கிறதா என்று தடவித்தடவி பரிசோதிக்கிறார்கள். அவர்கள் சந்தேகம் தீர்ந்தவுடன் நம்மைப் போக அனுமதிக்கிறார்கள். பணம் 50 ரூபாய் மட்டுமே கொண்டு செல்லலாம். இந்தப் பணத்தை நாம் பார்க்கப் போகிறவர்களுக்கு கொடுத்துவிட்டு வரலாம். இதற்கென்று ஒருவர் இருக்கிறார். அவர் அந்தப் பணத்தை இந்தப் பக்கம் இருந்து வாங்கி அந்தப் பக்கம் கொடுப்பதற்கு சிரம பரிகாரமாக 20 ரூபாய் எடுத்துக்கொள்வார்.

அங்கிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் இன்னொருவர் மேஜை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் போய் நம் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அவர் இன்னொரு ரிஜிஸ்டரில் எழுதி நம்மிடம் இன்னொரு முறை கைநாட்டு வாங்குவார்.

எந்த இடத்திலும் ஜனங்கள் உட்காருவதற்கு பெஞ்ச் அல்லது வேறு இருக்கைகளோ இல்லை. ஒரு வேப்பமரமும் ஒரு புளியமரமும் இருக்கின்றன. அதன் நிழலில் மண் தரையில் உட்கார்ந்து கொண்டு நம் விதியை நொந்தபடி இருக்கவேண்டியதுதான்.

அந்த விண்ணப்பங்களை எல்லாம் அவர் உள்ளே இருக்கும் காவலருக்கு அனுப்புகிறார். அவர் நாம் பார்க்கப்போகும் நபர் அந்த இன்டர்வியூ ஹாலுக்கு வந்து விட்டாரா என்று செக்கப் செய்வார். இதற்கு எப்படியும் அரை அல்லது ஒரு மணி நேரம் ஆகின்றது. நாம் பார்க்கப்போகும் நபர் ரெடியானவுடன் நம்மைக் கூப்பிடுகிறார்கள்.

இன்னொரு முறை வெடிகுண்டு சோதனை நடைபெறுகின்றது. பிறகு ஒரு நடைபாதை வழியே போனால் இன்டர்வியூ ஹால் வருகிறது. மீன்கடை இரைச்சல் என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி இரைச்சல் அந்த ஹாலில் இருக்கிறது.


ஏனென்றால், அந்த ஹாலில் இரண்டு இரும்புத் தடுப்புகள் போட்டிருக்கிறார்கள். இரண்டுக்கும் இடையே நான்கு அடி இடைவெளி. விசாரணைக் கைதிகள் ஒரு பக்கம். பார்க்கப்போகிறவர்கள் இந்தப் பக்கம். நாங்கள் போகும்போது கைதிகள் பக்கம் ஒரு நூறு பேரும் பார்வையாளர்கள் பக்கம் ஒரு இருநூறு பேர்களும் இருந்தார்கள். அவர்கள ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த இரைச்சலில் ஒருவர் பேசுவதும் அடுத்தவர்களுக்கு சரியாக காதில் விழுவதில்லை. ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் குரலை உயர்த்திப் பேசுகிறார்கள். மொத்தத்தில் சந்தைக்கடைதான். என்னால் எதுவும் பேட முடியவில்லை. நான் பார்க்கப்போன பையனைப் பார்த்து கையசைத்ததோடு சரி. ஒரு ஓரமாக நின்றுகொண்டு வேடுக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை. புருஷனைப் பார்க்க வந்திருக்கும் கைக் குழந்தைக்காரி. மகனைப் பார்க்க வந்திருக்கும் நடக்கமுடியாத பாட்டி. அரசியல்வாதியைப் பார்க்க வந்திருக்கும் கட்சிக்காரர்கள். இப்படி பலதரப்பட்ட மக்கள். எல்லோர் முகங்களிலும் சோகம். ஒருவர் முகத்திலாவது மலர்ச்சி என்பது மருந்துக்குக் கூட இல்லை.

வாழ்கையின் மறு பக்கத்தை இங்கே பார்த்தேன். மனது மிகவும் கனமாகிப்போனது. இவர்களுக்கெல்லாம் எப்போது விசரணை நடந்து முடிந்து எந்த விதமான தண்டனை கிடைக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. அப்படி தண்டனை பெற்றவர்கள் தண்டனைக் காலம் முடிந்து சிறையை விட்டு வெளியில் வரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?உலகம் அவர்களுக்கு எந்த விதமான வரவேற்பு கொடுக்கும்? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

பதில் சொல்ல முடியாத கேள்விகள்.