தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 மார்ச், 2012

என் தன்னம்பிக்கை வளர்ந்த விதம்


அனுபவங்கள் இரு வகைப்படும். ஒருவகை நேர்மறை வழி. இந்த வழியில் போ, இந்த மாதிரி செய், இப்படிப் பேசு என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பது நேர் மறை வழி.

இன்னொரு வழி எதிர்மறை வழி. இப்படிப்போகாதே, இப்படி செய்யாதே, நீ செய்வது தப்பு, இப்படியெல்லாம் சொல்வது எதிர்மறை வழி.
இரண்டு வழிகளிலும் நன்மை-தீமை இரண்டும் உண்டு. இதுதான் சிறந்த வழி என்று எதையும் கூற முடியாது.

நான் இரண்டாவது வழியில் வளர்ந்தவன். எந்த காரியத்தையும் செய்து முடித்தபின் என் பெற்றோர்கள் குறை கூறுவார்களே தவிர, எந்தக் காரியத்தையும் முன்கூட்டியே இப்படி செய் என்று கூற மாட்டார்கள். ஆகவே நான் தனிக்காட்டு ராஜாவாகவே வளர்ந்தேன். எப்படி என்றால் எந்தக் காரியத்தையும் சொல்வதில்லை. நானாகவே செய்து கொள்வேன். அதனால் வரும் நன்மை தீமைகளை நானே ஏற்றுக் கொள்வேன்.

இப்படி வளர்ந்து கொண்டிருந்தபோது நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும்போது எனக்கென்று சிலபல அபிலாக்ஷைகள் தோன்ற ஆரம்பித்தன. பெரியதாக ஒன்றுமில்லை. ஒரு பென்சில் வாங்கவேண்டும் என்ற ஆசை வந்தது. சாதாரண பென்சிலாக இருந்தால் வீட்டில் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் புது பென்சிலை முழுதாகத் தரமாட்டார்கள். நான் தொலைத்து விடுவேனாம். அதனால் அந்தப் பென்சிலை இரண்டாகத் துண்டு பண்ணி ஒவ்வொரு துண்டாகத்தான் கொடுப்பார்கள்.

நான் ஆசைப்பட்டது இந்தப் பென்சில் அல்ல. அப்போது புதிதாக கடைகளில் ஒரு பென்சில் விற்பனைக்கு வந்திருந்தது. அது எப்படி என்றால், பென்சிலின் எழுதும் பகுதியான கருப்பு "லெட்" மட்டும், ஒரு பென்சில் சைசில், ஐந்து அங்குல நீளத்தில், வெளியில் பெயின்ட் அடித்து, பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வசதியாக ஒரு கிளிப்பும் சேர்த்து வந்திருந்தது. இதைப் பார்த்ததும் அதை நான் வாங்கி ஸ்டைலாக பாக்கெட்டில் குத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது.

ஆனால் அதன் விலையோ என் சக்திக்கு மீறியதாக இருந்தது. என் சக்தி அந்தக் காலத்தில் காலணாதான். அதாவது இந்தக் காலத்திய ஒன்றரை பைசா. அந்தப் பென்சிலின் விலை இரண்டணா அதாவது பனிரெண்டு பைசா. என்ன செய்வது என்று பல நாட்கள் இரவும் பகலும் யோசித்தேன். ஒரு வழியும் சிக்கவில்லை. வீட்டில் அம்மா வைத்திருக்கும் பணத்தில் திருடினால் அப்பா என் முதுகில் டின் கட்டி விடுவார். அது தவிர இதற்கு முன் அவ்வாறு காசு திருடிப் பழக்கமுமில்லை.

இப்படி இருக்கையில் ஆபத்பாந்தவனாக ஒரு நண்பன் காசு சம்பாதிக்க ஒரு வழி காட்டினான். அந்தக் காலத்தில் கடைக்காரர்கள் தாங்களே  காப்பிக் கொட்டையை வறுத்து பொடி பண்ணித்தான் விற்பார்கள். அந்தக் காலத்தில் காப்பிக்கொட்டையை வறுக்க ஒரு உபகரணம் உபயோகப்படுத்துவார்கள். இந்தக் காலத்தில் தார் ரோடு போடும்போது தாரையும் ஜல்லியையும் சேர்த்து ஒரு டிரம்மில் போட்டு கீழே தீ மூட்டி கலக்குவதற்கு ஒரு உபகரணம் இருக்கிறதல்லவா? அதை ஒரு ஆள் ஒரு கைப்பிடியினால் சுத்திக்கொண்டே இருப்பானல்லவா? அதே மாதிரி சிறிய அளவில் காப்பிக்கொட்டை வறுப்பதற்கு ஒரு உபகரணம் இருந்தது. இதை 40 நிமிடம் சுற்றினால் காப்பிக்கொட்டை வறுபட்டுவிடும்.

இந்த வேலைக்கு தினக்கூலியில் ஆள் போட்டால் கட்டுப்படியாகாது. ஆகவே கான்ட்டிராக்ட் முறையில் இந்த வேலையைக் கொடுப்பார்கள். ஒரு பேட்ச் காப்பிக்கொட்டையை வறுப்பதற்கு ஐந்து அணா கூலி. அதாவது முப்பத்தியொரு பைசா. இந்த வேலை சரியான போர் வேலை. இடைவிடாமல் அந்த டிரம்மை சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும். சற்று நேரம் சுற்றாமல் விட்டால் கீழ்ப்பகுதி கொட்டைகள் கறுகிவிடும். ஆகவே இந்த வேலைக்குப் பெரிய ஆட்கள் வரமாட்டார்கள். சிறுவர்களைத்தான் இந்த வேலைக்கு உபயோகப்படுத்துவார்கள். ஸ்கூல் லீவு தினங்களில் ஸ்கூல் சிறுவர்கள் இந்த வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பாக்கெட் மணி (Money)  கிடைக்கும்.

இந்த வாய்ப்பைப் பற்றி என் நண்பன் சொன்னான். உடனே என் மூளை ஆஹா, நம் ஆசை நிறைவேறும் நாள் வந்து விட்டது என்று அங்கே போனேன். ஒரு பேட்ச் காப்பிக்கொட்டை வறுக்கும் வேலை கொடுத்தார்கள். வறுத்து முடித்ததும் கையில் ஐந்தணா கொடுத்தார்கள். உடனே நான் என்ன செய்திருப்பேனென்று நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஆம், உடனே ஓடிப்போய் அந்தப் பென்சிலை வாங்கி சட்டைப் பையில் குத்தி அழகு பார்த்தேன். தலை நிமிர்ந்து விட்டது. 

இப்படியெல்லாம் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தால் வீட்டில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்களா என்று கேட்கிறீர்களா? அதுதான் முதலிலேயே சொன்னேன் அல்லவா? என் காரியங்களுக்கு நானே பொறுப்பு. சாப்பாட்டு நேரத்திலும் தூங்கும் நேரத்திலும் வீட்டில் இருந்தால் போதும். மற்ற நேரத்தில் எங்கு போனாலும் யாரும் கவலைப்படமாட்டார்கள். அப்படி ஒரு சுதந்திரத்தை அந்தக் காலத்தில் அனுபவித்தேன். பையன் எங்கே என்று யாராவது வீட்டிற்கு வருபவர்கள் கேட்டால், "கழுத, எங்கயாவது ஊர் சுத்திக்கிட்டு இருக்கும், சோத்து நேரத்துக்கு வந்துடும்" என்று சொல்வார்கள்.

இப்படியாக நான் முதன் முதலில் தனியாக என் உழைப்பில் பணம் சம்பாதித்ததில் என் தன்னம்பிக்கை வளர ஆரம்பித்தது. நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு (ஹைஸ்கூல் படிக்கும்போது) இன்னும் பல வகைகளில் பணம் சம்பாதித்தேன். அதைப் பற்றி தனியாக பதிவு போடுகிறேன்.