ஆல்ப்ஸ் மலையில் பனிப்புயலில் சிக்கிய பலரை அங்குள்ள பனி நாய்கள் கண்டுபிடித்து காப்பாற்றினதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வீட்டில் எஜமானர் இல்லாதபோது, அவர்களின் குழந்தைகளை பல விபத்துகளிலிருந்து காப்பாற்றிய நாய்களைப் பற்றியும், பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம்.
எங்கள் வீட்டில் நான் கண்ட ஒரு காட்சியை இங்கு கூறுகிறேன், கேளுங்கள்.
வீடுகளில் பூனைகள், அவைகளை யாரும் தனிப்பட வளர்க்காவிட்டாலும், எங்கிருந்தோ வந்து சுற்றிக்கொண்டு இருக்கும். அப்படி ஒரு பூனை எங்கள் வீட்டு வளாகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும். சமீபத்தில் அது குட்டிகளை ஈன்றது. அதற்கடுத்த நாள் எங்கள் வீட்டு சமையலறையின் வாசலில் என் மனைவி நின்று கொண்டிருக்கும்போது வந்து, மனைவியின் முகத்தைப் பார்த்து, மியா, மியாவென்று கத்தியது. அதற்குப் பசி போலும். ஏதாவது உணவு கிடைக்காதாவென்று அப்படிக் கத்தியிருக்கிறது. என் மனவி வழக்கம்போல் அதை விரட்டி விட்டாள். அது போய்விட்டது.
நான் என் ரூமிலிருந்து பூனையின் சத்தத்தைக் கேட்டு, அந்தப் பூனைக்கு ஏதாவது போடுங்களேன் என்று சொன்னேன். அதற்குள் அந்தப் பூனை போய்விட்டது.
அடுத்த நாள் அந்தப் பூனை அந்தப் பக்கமாக வந்த போது மனைவி ஒரு தட்டில் பால் சாதம் வைத்து அதைக் கூப்பிட்டிருக்கிறாள். அந்தப் பூனை மனைவியைச் சட்டை செய்யாமல் போய்விட்டது. இதைக் கேட்ட நான் அந்தப் பூனையின் தன்மானத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
முதல்நாள் அதற்கு ஒன்றும் கொடுக்காமல் விரட்டியடித்த சம்பவம் என் மனதை விட்டு நீங்காமல் உறுத்துகிறது.