தள்ளிப் போடுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தள்ளிப் போடுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜூன், 2015

தள்ளிப்போடுதல்

                                           Image result for thinking man image
தள்ளிப் போடுதல் - ஆங்கிலத்தில் சொன்னால் தமிழர்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். அதாவது Procrastination. ஒரு வேலையை உடனே செய்து முடிக்காமல் அப்புறம் செய்யலாம் என்று ஒத்திப்போடுவது. இது எல்லோருக்கும் பொதுவான இயல்பு. அதனால்தான் அனைத்து மேலாண்மைப் படிப்புகளிலும் இந்தக் குணத்தை மாற்றுவதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இன்று செய்யவேண்டியதை நாளைக்கு என்று ஒத்திப்போடாதே என்பதுதான் இந்த மேலாண்மை நிபுணர்களின் தாரக மந்திரம். இது மகாத் தவறு. மேலே படியுங்கள்.

ஆனால் இது அரசுத் துறைகளுக்குப் பொருந்தாது. இன்றைக்கு இருக்கும் வேலைகளை இன்றே முடித்து விட்டால் நாளைக்கு என்ன செய்வது என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிடும். தவிர ஒவ்வொரு அரசு ஊழியனும் நினைப்பது என்னவென்றால், இன்றைக்கு உண்டான வேலைகளை எல்லாம் இன்றே முடித்து விட்டால், நாளைக்கு இதைவிடக் கடினமாக வேலைகளை நம் மீது சுமத்துவார்கள். அப்படியே கொடுக்கும் வேலைகளை எல்லாம் அன்றன்றே முடித்துக் கொண்டிருந்தால் நாளாவட்டத்தில் நம்மை இந்த ஆபீசின் சுமைதாங்கியாக்கி விடுவார்கள். அப்புறம் நாம்தான் இந்த ஆபீசின் முதன்மை இளிச்சவாயனாகி விடுவோம், என்று சிந்தனைகள் ஓடும். இதுதான் அரசு ஆபீஸ்களில் வேலைகள் தாமதமாக நடப்பதற்கு முக்கிய காரணம்.

இவர்கள் கடைப்பிடிப்பது நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிப் போன மேலாண்மைத் தத்துவத்தையே.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை - குறள் (672)

இந்தக் குறளுக்கு பதவுரை, பொருளுரை எல்லாம் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

இந்த தள்ளிப் போடும் குணத்தினால் பல நன்மைகள் உண்டு என்பது பலர் அறியாத ஒன்று. பல சமயங்களில் அந்த வேலைக்கே அவசியமில்லாமல் போகும். உதாரணத்திற்கு, ஒருவரைப் பார்க்க தூரத்து ஊருக்குப் போகவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலையைத் தள்ளிப் போட்டால் நீங்கள் பார்க்கவேண்டியவரே உங்களைத் தேடி வரலாம். அலைச்சலும் பணமும் மிச்சம்.

அரசு அலுவலகங்களில் நீங்கள் தள்ளிப் போடுபவராக இருந்தால் இவனிடம் எந்த வேலை கொடுத்தாலும் தள்ளிப் போடுவான். ஆகவே இவனிடம் இந்த வேலையைக் கொடுக்கவேண்டாம் என்று பல வேலைகள் அடுத்தவர்களுக்குப் போய்விடும். ஆனால் நீங்கள் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பிரமோஷன் பாதிக்காதபடி மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும்.  இதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள என்னிடம் தனியாக ட்யூஷன் எடுத்துக் கொள்ளலாம். பதிவர்களுக்கு கட்டண சலுகை உண்டு.

வீட்டில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் உடனே டாக்டரிடம் போய் விடக்கூடாது. இரண்டு நாள் தள்ளிப்போட்டால் அந்த சீக்கு தானாகவே சரியாகி விடக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படியும் சரியாகவில்லை என்றால் மட்டும் டாக்டரிடம் போனால் போதும். அப்போதுதான் டாக்டருக்கும் சீக்கின் தன்மை நன்றாகப் புரிந்து ஒழுங்கான வைத்தியம் செய்வார். சீக்கின் முதல் அறிகுறிகள் தெரிந்தவுடனேயே டாக்டரிடம் ஓடியிருந்தால் டாக்டரால் என்ன சீக்கு என்று சரியாகக் கண்டு பிடிக்க முடியாமல் பொதுவாக ஏதோ மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி விடுவார். நமக்கு அனாவசியச் செலவு.

நமது தேச ரயில்கள் ஏன் எப்போதும் லேட்டாகவே ஓடுகின்றன என்பதின் ரகசியம் என்ன தெரியுமா? மக்களின் இந்தத் தள்ளிப்போடும் குணத்தினால்தான். ரயில்கள் அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்திற்கே புறப்பட்டு விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் மாதிரி மக்களின் கதி என்ன ஆவது? ரயில் எப்படியும் அரை மணி நேரம் தாமதமாகத்தான் புறப்படும் என்று நாம் அரை மணி நேரம் கழித்து ஸ்டேஷனுக்கு வந்தால் ரயில் புறப்பட்டுப் போயிருந்தால் நம் கதி என்னாவது?

நம்மை விடுங்கள். ரயில்வே துறைக்கு எவ்வளவு நஷ்டம்? இதே மாதிரி பிளேன்கள், பஸ்கள் எல்லாம் சரியான நேரத்திற்கு புறப்பட்டு விட்டால் இந்தத் துறைகளுக்கெல்லாம் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று யோசியுங்கள்? அதனால்தான் "இண்டியன் பங்க்சுவாலிடி" என்று ஒரு புது வார்த்தையையே இங்கிலீஷ்காரன் உருவாக்கினான்.

இந்த தள்ளிப்போடும் குணத்தினால் உங்கள் பொருளாதார நிலமை முன்னேறும். எப்படியென்றால், உங்கள் மனைவி ஒரு புதுப்புடவை கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே வாங்கிக்கொடுத்து விட்டீர்களானால் அடுத்த புடவைக்கான கோரிக்கை சீக்கிரமே வந்து விடும். முதல் புடவைக்கே நீங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டு இருந்தீர்களானால் அடுத்த புடவைக்கான கோரிக்கையைத் தவிர்க்கலாம். ஆனால் வீட்டிலிருக்கும்போதே தலைக்கு ஹெல்மெட் போடுவது அவசியம். பூரிக்கட்டைக்கு தப்பிக்கவேண்டுமல்லவா?

அதே மாதிரி பிறந்த வீட்டுக்குப் போக மனைவி போடும் திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் என்ன நடக்கும் என்று சம்சாரிகளுக்கு நன்கு தெரியும். உங்கள் கையிருப்பு முழுவதும் காலியாகி, அடுத்த சில மாதங்களுக்கான் சேமிப்பும் காலியாகும். இந்த மாதிரி திட்டங்களுக்கு சாமர்த்தியமாக, ஆபீசில் இன்ஸ்பெக்ஷ்ன், ஆடிட், இந்த மாதிரி ஏதாவது சால்ஜாப்பு சொல்லி தள்ளுப்போடுங்கள். இதற்கும் என்னிடம் ட்யூஷன் கிளாஸ் உண்டு. சம்சாரிகளுக்கு கட்டணம் இல்லை.

ஆக மொத்தம் தள்ளிப்போடுதலில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டீர்கள் அல்லவா? நான் சொன்னவைகளை நன்கு மனதில் பதித்து புத்தியாய் பிழைத்துக் கொள்ளுங்கள்.