திட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 மார்ச், 2013

9. சில புரட்சித் திட்டங்கள்

(இந்தப் பதிவைப் படித்து யாரும் பீதியடையவேண்டாம். எல்லாம் என் கனவில் நடந்தவை)


அடுத்த வாரம் அதே நாள் சரியாகப் பத்து மணிக்கு மூவரும் வந்தனர். நிதி அமைச்சர் நான் செய்த நிதி உதவிக்கு நன்றி தெரிவித்தார். நான் சொன்னேன், "என் தாய் நாட்டிற்கு இது கூடச் செய்யாவிட்டால் நான் என்ன மனிதன்? இதற்கெல்லாம் நன்றி எதற்கு" என்று சொன்னேன். நிதி அமைச்சர், "இருந்தாலும் இவ்வளவு பெரிய உதவி செய்ய ரொம்பப் பெரிய மனது வேண்டும்" என்றார்.

அது இருக்கட்டும், மேற்கொண்டு இந்தியாவை முன்னேற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றேன். நிதி அமைச்சர் சொன்னார், நாம் எவ்வளவு நல்ல திட்டங்களைப் போட்டாலும் அவைகள் மக்களைப் போய் சேருவதில்லை. போகும் வழியில் பல ஓட்டைகள். அவைகளை எப்படியாவது அடைக்கவேண்டும் என்றார்.

நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் ஒரு ஐடியா சொல்லுகிறேன். இந்திய நாட்டை இப்போது முன்னேற விடாமல் தடுப்பது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று லஞ்சம், இரண்டு கருப்புப் பணம். இந்த இரண்டையும் ஒழித்தால் நாடு வேகமாக முன்னேறும் என்றேன். மூவரும் இதை ஒத்துக்கொண்டு, "இந்த இரண்டையும் ஒழிக்க நீங்கள் என்ன திட்டம் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்கள்.

அப்படியானால் நான் சொல்வதைச் செய்யுங்கள். நமது நாட்டில் கருப்புப் பணம் புழங்குவதற்கு முதல் காரணம் வரிகள்தான். அதிலும் குறிப்பாக வருமான வரிதான் கருப்புப் பணத்தை உண்டாக்குகிறது. ஆனால் உலகெங்கிலும் வருமான வரிகள்தான் அரசை நடத்துவதற்கான பணத்தைக் கொடுக்கிறது. நாம் என்ன செய்யவேண்டுமென்றால், வரி ஏய்ப்பைத் தடுக்கவேண்டும்.

அதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். என்னிடம் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இருக்கிறது. அது என்னுடைய கன்ட்ரோல் ரூமில் இருக்கும். அதில் இந்திய நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருடைய வரவு செலவு கணக்குகளும் தெரியும். எல்லோருக்கும் அடையாள எண்கள் கொடுக்கப்பட்டு விட்டதல்லவா? அதை வைத்து அந்த கம்ப்யூட்டர் அதுவாகவே ஒவ்வொருவருடைய வருமான வரியையும் கணக்குப் போட்டு அவர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும். வருட முடிவில் அவர்களுக்கு ஸ்டேட்மென்ட் போய்விடும்.

அது தவிர லஞ்சமாக வாங்கும் பணத்தை கணக்கில் காட்ட முடிவதில்லை. ஏனெனில் இப்பொழுது லஞ்சம் சட்ட விரோதமாக இருக்கிறது. இதனாலும் கருப்பு பணம் அதிகமாகிறது. நீங்கள் என்ன செய்யுங்கள், லஞ்சத்தை சட்டபூர்வமானது என்று அறிவித்து விடுங்கள்.

"ஐயையோ, அப்புறம் கவர்ன்மென்டை எப்படி நடத்த முடியும்? ஊழலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்" என்று மூன்று பேரும் ஒரே குரலில் அரற்றினார்கள். கவலைப் படாதீர்கள், அதற்கு வழி வைத்திருக்கிறேன். இனிமேல் லஞ்ச வரி என்று புதிதாக ஒரு வரி போட்டுவிடுங்கள். லஞ்சம் வாங்குவதைப் போல் ஐந்து மடங்கு வரி கட்டினால் போதும் என்று சட்டம் போட்டு விடுங்கள், என்றேன்.

நிதி மந்திரி திருதிருவென்று விழித்தார். பிரதம மந்திரிதான் முதலில் சுதாரித்தார்.  இது நல்ல திட்டமாக இருக்கிறது. ஆனால் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரி வசூலை எங்கள் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றேன். எப்படி என்றார்?

இதற்காக தனியாக ஒரு கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்துவோம். அதில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மாதிரி இன்னொன்று நிறுவப்படும். அதில் இந்தியாவில் யார் எங்கு லஞ்சம் வாங்கினாலும் ஸ்கிரீனில் தெரிந்துவிடும். அந்த நபர் பணம் எங்கு வைத்திருந்தாலும் அந்த லஞ்சப்பணத்தைப் போல் ஐந்து மடங்கு எங்கள் பேங்கிற்கு வந்து விடும். அதை அப்படியே அவ்வப்போது அரசு கஜானாவில் போட்டு விடுகிறோம் என்றேன். அவர்களுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. குதித்து கூத்தாடினார்கள்.

ஏற்கெனவே இந்த முறையை உபயோகித்து ஸ்விஸ் பேங்கில் இந்தியர்கள் வைத்திருந்த கறுப்புப் பணம் முழுவதையும் எடுத்துவிட்டோம். நேற்று உங்களுக்குக் கொடுத்தது முழுவதும் அந்தப் பணம்தான். இன்னும் கூட மிச்சம் இருக்கிறது. எப்போது தேவைப்பட்டாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றேன்.

அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. இப்போது நான் சொல்லும் திட்டங்களை கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்போது அயல்நாட்டு உள்நாட்டுக் கடன்களை எல்லாம் தீர்த்து விட்டபடியால் இனி மேல் நாம் யாருக்கும் தலை வணங்க வேண்டியதில்லை. வெளிநாட்டு மூலதனம் இனி நம் நாட்டுக்குள் எவ்வகையிலும் நுழையக்கூடாது. எந்த விதப் பொருட்களும் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது. நம் தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருட்களை மட்டும்தான் இறக்குமதி பண்ணலாம். இங்கு இருக்கும் அயல்நாட்டுக் கம்பெனிகளை எல்லாம் (குறிப்பாக கோக்கோ கோலா, பெப்சி, KFC, McDonald) மூட்டை முடிச்சுடன் அவரவர்கள் ஊருக்கு திருப்பியனுப்புங்கள்.

பெரிய பெரிய கம்பெனிகள், பணக்காரர்கள் எல்லாம் பேங்குகளில் கோடிக்கணக்காக கடன் வாங்கிக்கொண்டு, பல ஏமாற்று வேலைகள் செய்து அந்தக் கடன்களை கட்டுவது இல்லை என்று கேள்விப்பட்டேன், அது உண்மையா? என்று கேட்டேன். நிதி மந்திரி, அது உண்மைதான், என்றார். அந்த கடன்கள் எவ்வளவு இருக்கும் என்றேன். அந்தக் கடன்கள் எல்லாம் வசூலானால் ஒரு ஐந்து வருட இந்திய பட்ஜெட்டுக்குப் போதும் என்றார். அப்படியா, இன்று இரவு அந்தக் கடன்கள் மொத்தமாக வசூலாகி ரிசர்வ் பேங்கில் சேர்க்கப்படும், என்றேன். அது மாதிரியே அன்று இரவு செய்தேன்.

தவிர இந்தியா முழுவதிலும் இலவசம் என்பது எங்கும் எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. வேலையில்லாமல் ஒருவரும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கக் கூடாது. தகுதிக்கு மீறி சொத்து வைத்திருப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு விடுங்கள். அவர்கள் பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுங்கள். இதற்காக நான் இங்கு ஒரு கன்ட்ரோல் ரூம் வைத்திருக்கிறேன். அதில் எல்லா விவரங்களும் பதிவு ஆகியிருக்கின்றன. நீங்கள் ஏதாவது தில்லு முல்லு செய்தால் அப்புறம் விளைவுகள் மோசமாக இருக்கும். ஜாக்கிரதை.

மாநிலத்திற்கு மூன்று டி.வி.ஸ்டேஷன்கள் தவிர மற்ற எல்லா டி.வி.ஸடேஷன்களையும் மூடிவிடுங்கள். இவைகளில் விளம்பரத்திற்காக பல கம்பெனிகள் செலவு செய்து விட்டு. அந்தச் செலவை மக்கள் மீது திணிக்கிறார்கள். இப்படி மூடப்பட்ட டி.வி.க்காரர்களின் சொத்துக்களை-  யெல்லாம் அரசு எடுத்துக் கொள்ளட்டும். நடந்து கொண்டிருக்கிற டி.வி.க்கம்பெனிகளின் அளவுக்கு மீறின சொத்துக்களையும் பறிமுதல் செய்யுங்கள்.

தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தங்களை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள்,  அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. மோட்டார் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தனியார்மயமாகிறது. பெட்ரோல, டீசல் விலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு மாறக்கூடாது. ஆட்டோக்கள், டாக்சிகள் மீட்டர் கட்டணத்திற்கு மேல் வாங்கினால் அப்போதே யமகிங்கரர்களால் தண்டிக்கப்படுவார்கள்.

இந்தியா முழுவதும், குறிப்பாக மும்பய்யில் உள்ள அனைத்து தாதாக்களும் கட்டைப் பஞ்சாயத்துதாரர்களும், புரோக்கர்களும் இப்போதிலிருந்து யமகிங்கரர்களால் நீக்கப்படுவார்கள். பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் இந்த விநாடியிலிருந்து மூடப்படுகிறது. அனைத்துக் கம்பெனிகளின் அனைத்து ஷேர்களும் கேன்சல் செய்யப்படுகின்றன.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு உடனடியாக அமுலுக்கு வருகிறது. அதற்கு உபயோகமான எத்தனாலை எவ்வளவு சதம் பெட்ரோலில் கலக்க முடியுமோ அத்தனை சதம் கலந்து விற்பனையாகட்டும். குடிமகன்கள், தனியாக கவுன்சிலிங்க் மூலம் நல்ல குடிமகன்களாக மாற்றப்படுவார்கள்.

ரயில்கள் நேரத்திற்கு ஓடவேண்டும். எல்லா இலவச பாஸ்களும் இந்த நிமிடம் முதல் ரத்து செய்யப்படுகின்றன. எந்த ரயிலிலும் டிக்கட் வாங்காமல் ஒருவரும் பயணம் செய்யக்கூடாது. அப்படி பயணம் செய்பவர்களையும் அவர்களை அனுமதிக்கும் டிடிஆர் களையும் உடனடியாக தண்டிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். டிடிஆர் களுடன் சண்டைக்குப் போகும் பயணிகள் அப்போதைக்கப்போது என்னுடைய யமகிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

விமானப் போக்குவரத்தில் யாருக்கும் இலவசப் பாஸ்கள் கூடாது. யாருக்கும் தனி விமானங்கள் கிடையாது. விமான ஊழியர்களின் சம்பளம் தவிர அனைத்து இதர சலுகைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அரசு சம்பந்தப்பட்ட யாரும் வெளிநாடு செல்லவேண்டாம். உள்நாட்டிலும் அவசியமில்லாமல் பயணம் செய்யக்கூடாது.

இங்கிருந்து போனவுடன் வெடிகுண்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு அறிக்கை விடுங்கள். இந்தியாவில் எந்த இடத்துல் யார் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டாலும் அந்த குண்டுகள் அங்கேயே வெடித்து அந்த குண்டுகள் தயார் செய்பவர்கள் மட்டும் இறந்து போவார்கள். இந்த டிபார்ட்மென்டை நான் நேரடியாக கன்ட்ரோல் செய்து கொள்கிறேன்.

தவிர கொலை, கொள்ளை, வழிப்பறி, ஏமாற்றுகள், பாலியல் பலாத்காரங்கள் யாவும் இந்த விநாடியிலிருந்து தடை செய்யப்படுகின்றன. அப்படி இந்தக் குற்றங்களில் யார் ஈடுபட நினைத்தாலும் அந்த விநாடியே அவர்கள் யம- கிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

அரசு வேலைகள் அனைத்தும் ஜரூராக நடக்கவேண்டும் எதிலும் சுணக்கம் இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சுற்ற்றிக்கை அனுப்பிவிடுங்கள். அப்புறம் இன்னொரு விஷயம். அரசு அதிகாரிகள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்திருக்கும் அனைத்து சொத்துக்களும் இன்றிரவு அரசு கஜானாவிற்கு வந்து விடும்.

டில்லி, கொல்கத்தா, மும்பாய், சென்னை ஆகிய நகரங்களில் இன்று இரவு, 50 கி.மீ. தூரத்தில் சேடலைட் நகரங்கள் உருவாகிவிடும். மயனைக் கூப்பிட்டு இதைச் செய்யுமாறு சொன்னேன். அவன் தலையை ஆட்டிவிட்டுச் சென்று விட்டான். அனைத்து அரசு அலுவலகங்களும் அங்கு சென்று விடவேண்டும். நகர மையத்தில் எந்த விதமான டிராபிக் இடையூறுகளும் இருக்கக் கூடாது.

எல்லா மெட்ரோ நகரங்களிலும் மெட்ரோ ரயில் உடனடியாக அமைக்கப்பட்டு உபயோகத்திற்கு வருகிறது. இன்றிரவு மயன் அந்த வேலையை முடித்துவிடுவான்.

இந்தியாவில் உள்ள கார்பரேட் சாமியார்களின் அனைத்துச் சொத்துகளும் இன்றிரவு பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். அவர்களின் ஆசிரமங்கள் கல்லூரிகளாக செயல்படும். அந்த சாமியார்கள் எல்லோருக்கும் இமய மலையில் ஒரு ரிசார்ட் உருவாக்கப்பட்டு அங்கு எல்லா வசதிகளுடனும் வசிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் பணிவிடை செய்யத் தேவையான தேவலோக அப்ஸரஸ் மங்கையர்கள் ஏற்பாடு செய்யப்படுவார்கள்.

அதேபோல் அனைத்து கோவில் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். கோவில்களை நடத்த தேவையான பணம் தனி பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும்.

இந்த மாறுதல்களுக்குத் தேவையான அனைத்து நடைமுறை உத்திரவுகளையும் இன்றிரவே பிறப்பித்து இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று பிரதம மந்திரியிடம் சொன்னேன். அவர் சரி என்றார்.

அப்புறம் ஒரு விஷயம் என்றேன், என்ன? என்று கேட்டார்கள்.

என்னைக் கேட்காமல் எந்த புது திட்டத்தையோ பாலிசி மேட்டரையோ அமல்படுத்தக்கூடாது. என்னுடைய திட்டங்களையெல்லாம் மறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் எந்த மாற்றமும் கூடாது என்றேன். அடுத்த வாரம் சந்திப்போம். சரியென்று ஒப்புக்கொண்டு டில்லி கிளம்பினார்கள்.