திதி கொடுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திதி கொடுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 நவம்பர், 2012

என் தகப்பனாரின் திதி



நேற்று என் தகப்பனாருக்கு திதி கொடுத்தேன்.

பிராமணல்லாதவர்கள் வருடத்தில் மூன்று அமாவாசை (ஆடி, புரட்டாசி, தை) மற்றும் தாயார், தகப்பனார் திதி அதாவது திவசம் இவைகளை அனுஷ்டிப்பது வழக்கம். ரொம்ப நாளைக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திற்கும் அல்லது இரண்டு மூன்று கிராமங்களுக்கு சேர்த்து ஒரு பஞ்சாங்க அய்யர் இருப்பார். அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுப்பது வசதியானவர்கள் மட்டும் செய்வார்கள். ஆனால் எல்லோரும் திதி கொடுக்கத் தவறமாட்டார்கள். திதி எப்பொழுது வருகிறது என்று இவர் சில தினங்களுக்கு முன்பே வந்து சொல்லுவார். திதியன்று வீட்டிற்கு வந்து திதியை நடத்தி வைத்துவிட்டுப் போவார். ஆனால் இப்போது அந்த மாதிரி பஞ்சாங்க ஐயர்கள் இல்லை.

திதியன்று பேரூர் போனால் அங்கு ஆற்றங்கரையில் கொட்டகை போட்டுக்கொண்டு ஏகப்பட்ட அய்யர்கள் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு அய்யருக்கும் ஒவ்வொரு ஏஜென்ட் உண்டு. இந்த மாதிரி திதி மற்றும் அந்திமக் காரியங்கள் செய்ய வருபவர்களை அவர்கள் கரெக்ட்டாக மோப்பம் பிடித்து, அமுக்கி, அவர்களின் கொட்டகைக்கு தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். அந்த மெயின் அய்யர் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருப்பார். பார்ட்டியைப் பார்த்ததுமே எவ்வளவு தேறும் என்று கணித்து விடுவார்.

அவர் தரத்திற்கு இல்லையென்றால் பக்கத்து கொட்டகைக்கு தள்ளிவிடுவார். தன்னுடைய தரத்திற்கு ஏற்றவர்களை மட்டும் நிறுத்திக்கொள்வார். நமக்குப் புரியாத வார்த்தைகளை உச்சரித்து ஐந்து நிமிடத்தில் காரியத்தை முடித்து விடுவார். கடைசியில் இறந்தவர் பெயரைக்கேட்டு அவரும், அதற்கு முந்தின ஏழேழு தலைமுறையினரும் சொர்க்கத்தில் க்ஷேமமாக வாழட்டும் என்று சொல்லி, தக்ஷிணையை வாங்கிக்கொண்டு அடுத்த கிராக்கியை கவனிக்க ஆரம்பித்து விடுவார்.
கொஞ்சம் அரிசியைக் கொடுத்து அதை அன்றைய சமையலில் சேர்த்துக்கொள்ளச் சொல்லுவார். அவ்வளவுதான். நாம் நம் முன்னோர்களைக் கடைத்தேற்றி விட்டாயிற்று என்ற திருப்தியுடன் வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளைக் கவனிக்கவேண்டியதுதான்.
மற்ற வேலைகள் என்னவென்றால், அன்றைக்கு விரதம் இருந்து விதிப்பிரகாரம் உண்டான சமையல் செய்யவேண்டும். விதிகள் என்னென்னவென்றால்:

கீழ்க்கண்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
வெங்காயம்
கத்தரிக்காய்
இங்கிலீஷ் காய்கறிகள்.

சேர்த்துக்கொள்ளவேண்டிய காய்கறிகள்.
வாழைக்காய்
பாவற்காய்
சேனைக்கிழங்கு
அரசாணிக்காய்
கொத்தவரங்காய்
அவரைக்காய்
பிரண்டை
அகத்திக்கீரை
வெண்டைக்காய்
வாழைப்பூ
வாழைத்தண்டு

இதெல்லாம் அய்யர் சொல்லிக் கொடுத்ததுதான்.
அன்றைய சமையல் கொஞ்சம் தடபுடலாக இருக்கும். வடை, பாயசம் கண்டிப்பாக உண்டு.

சமையல் முடிந்ததும் ஒரு கிழக்குப்பார்த்த சுவரில் பக்கம் பக்கமாக, மூன்று இடத்தில் விபூதியை தண்ணீரில் குழைத்து முப்பட்டை போடவேண்டும். இவைகள் காலம் சென்ற மூன்று தலைமுறைகளைக் குறிக்கும். அவற்றிற்கு சந்தனப்போட்டு வைத்து குங்குமம் வைத்தால் மூன்று தலைமுறையினரை வீட்டில் எழுந்தருளச் செய்தாகி விட்டது.
இதற்கு முன்னால் ஒரு தலைவாழை இலை போட்டு அதில் அன்று செய்த உணவு வகைகள் எல்லாவற்றையும் பரிமாற வேண்டும். பக்கத்தில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கவேண்டும். ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, இரண்டு பழம், ஒரு தேங்காயை உடைத்து இரண்டு மூடியையும் வைக்கவேண்டும்.

ஊதுபத்தி கொளுத்தி, அதற்கு ஸ்டேண்ட் இருந்தால் அதில் வைக்கலாம், இல்லாவிட்டால் அந்த வாழைப் பழத்தில் செருகி வைத்துவிடலாம். ஒரு சின்ன சொம்பில் சுத்தமான தண்ணீர் வைக்கவேண்டும். தேங்காய் உடைக்கும்போது வரும் இளநீரை இந்தச் சொம்பில் பிடித்து வைக்கவேண்டும்.

எல்லாம் ரெடி. இனி சாமி கும்பிடவேண்டியதுதான். முதலில் தண்ணீர் சுற்றிப்போடவேண்டும். பிறகு ஊதுபத்தி சுற்றவேண்டும். முன்னொரு காலத்தில் விறகு அடுப்புகள் இருந்த காலத்தில், சாம்பிராணி வைத்திருப்பார்கள். கேஸ் வந்த பிறகு அந்த வழக்கங்கள் வழக்கொழிந்து போயின. பிறகு கற்பூரம் பற்றவைத்து தீபாராதனை காட்டவேண்டும். பிறகு இன்னொரு முறை தண்ணீர் சுற்றிப்போட்டால் பூஜை முடிந்தது. எல்லாரும் கும்பிட்ட பிறகு, அந்த தலைவாழை இலையில் இருக்கும் உணவுகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, வேறு ஒரு இலையில் எடுத்து வைக்கவேண்டும்.

குடும்பத்தினர் அனைவரும் இதைச் செய்யவேண்டும். படையல் இலையில் கொஞ்சம் உணவு மீதி இருக்கவேண்டும். இப்படி தனியாக எடுத்த உணவைக் கொண்டு போய் காகத்திற்கு வைக்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இதற்கென்று ஒரு இடம் இருக்கும். அங்கு வைத்தால்தான் காகம் வரும். நம் முன்னோர்கள் காக ரூபத்தில் வந்து நாம் வைக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டுப் போவதாக ஐதீகம். இதுவும் அய்யர் சொல்லிக் கொடுத்ததுதான். மாடு மேய்ப்பவனுக்கு இதெல்லாம் வேற எப்படித்தெரியும்?

காகம் வந்து சாப்பாடு எடுத்த பிறகுதான் குடும்பத்தினர் சாப்பிடலாம். படையல் போட்ட இலையில், அன்றைய திதி கொடுத்தவன் சாப்பிடவேண்டும். மற்றவர்கள் எல்லோருமே அன்று வாழை இலையில்தான் சாப்பிடவேண்டும். இலையில் மிச்சம் வைக்கக் கூடாது.
தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும். நான் வருடத்தில் ஐந்து நாட்கள் இப்படி தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறேன். அதாவது மூன்று அமாவாசை, இரண்டு திதிகள், ஆகியவற்றுக்காக.

அன்று இரவு சாப்பாடு சாப்பிடக்கூடாது. வடை பாயசம் மிச்சம் இருப்பதை சாப்பிடலாம்.

கடவுள், மறுபிறவி இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சி இது. ஏதோ ஒரு வகையில் நம் முன்னோர்களை வழிபட உண்டான ஒரு முறை. அந்த வகையில் இதை நான் வருடா வருடம் கடைப்பிடிக்கிறேன். ஆனால் பேரூர் போய் அய்யருக்கு காணிக்கை கொடுப்பதில்லை. வீட்டில் சாமி கும்பிடுவதோடு சரி.

கடந்த 45 வருடங்களாக இந்த திதி கொடுப்பதைச் செய்து வருகிறேன். முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்த ஆத்ம திருப்தி கிடைக்கிறது.