தீண்டாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீண்டாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஜூன், 2015

தீண்டாமையை வளர்ப்பது யார்?

                                 Image result for dalit colony
இந்தப் பொருளில் எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கருத்துகளையும் வார்த்தைகளையும் பல முறை யோசித்து எழுத வேண்டும். இல்லாவிட்டால் கத்தி கழுத்தின் மேல் விழும். இதற்கு முன்னால் பல முறை என் கழுத்தின் மேல் கத்தி விழுந்திருக்கிறது. சாதாரணக் காயத்துடன் போய்விட்டது. அந்தக் காயங்கள் ஆறிவிட்டபடியால் இப்போது மீண்டும் கழுத்தை நீட்டுகிறேன். எத்தனை பட்டாலும் இந்த ஆளுக்கு புத்தி வர மாட்டேங்குதே என்று ஆதங்கப் படுபவர்களுக்கு ஒரு இனிமையான செய்தி. இந்த டாபிக்கில் இதுதான் என் கடைசிப் பதிவு. இனிமேல் இந்த டாபிக்கில் எழுத மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

சமீபத்தில் சென்னை ஐஐடியில் ஏற்பட்டுள்ள ஒரு நிகழ்வைப் பற்றி ஏறக்குறைய அனைத்து முன்னணிப் பதிவர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு விட்டார்கள். இந்த நிலையில் முன்னணி முதல் வரிசைப் பதிவரான நான் (சுயப் பிரதாபத்தை பொறுத்தருளவும்) என் கருத்துகளை இங்கு பதிவு செய்யாவிடில் எதிர்காலம் என்னை மன்னிக்காது. அது காரணம் பற்றியே இந்தப் பதிவு போடுகிறேன்.

தீண்டாமையைத் தோற்றுவித்தவர்கள் யார்? அதை மறையாமல் வளர்த்துக் கொண்டிருப்பவர் யார்? இவைகள் முக்கியமான கேள்விகள். இங்கு நான் என் அனுபவங்களின் மூலமாகத் தெரிந்து கொண்டவைகளை மட்டுமே பதிகிறேன். அவை என் சொந்தக் கருத்துகள். இந்தக் கருத்துகள் மேலும் சிந்தனையைத் தூண்டினால் மகிழ்ச்சி. என்னை இகழ்தலும் ஒரு வகை சிந்தனைத் தூண்டுதல் என்றே கருதுகிறேன்.

தீண்டாமை எப்படித் தோன்றியது என்று ஆதார பூர்வமாகத் தகவல்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் இந்த பாகுபாடு பல நூற்றாண்டுகளாக இருக்கிறது என்று தெரிகிறது. இந்த மாதிரி சாதி பாகுபாடுகளைப்பற்றிக் கூறும்போது பிராமணர்களைச் சுட்டிக்காட்டுவதுதான் வழக்கம். அவர்கள்தான் மனுதர்ம சாஸ்திரப்படி நான்கு வர்ணங்களை வகைப்படுத்தினார்கள் என்றும் இதற்கு அப்பால் பஞ்சமர்கள் என்று ஒரு சாராரை வகைப் படுத்தினார்கள் என்றும் கூறுகிறார்கள்.

பிராமணர்கள் நான்காவது வகுப்பாகிய சூத்திரர்களையும் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை, ஏறக்குறைய பஞ்சமர்கள் மாதிரித்தான் வைத்திருந்தார்கள் என்பது பலருக்கு மறந்து போய் இருக்கலாம். ஈ.வே.ரா. என்னும் பெரியார் பிராமணீயத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கவில்லை என்றால் இன்றும் அதே நிலைமை தொடர்ந்திருக்கும். (என் பிராமண நண்பர்கள், நான் இந்த மாதிரி சில கருத்துகளைக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவேண்டும்). இந்தப் பதிவு சில பொது சமூகப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இதில் தனிப்பட்ட உறவுகள் பாதிக்கப்படக்கூடாது.

பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று யார் எப்பொழுது வகைப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காலங்காலமாக அவர்களை இவ்வாறு மற்ற வர்ணத்தவர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால் பிராமணர்கள் பிரம்மாவின் தலையிலிருந்து உற்பத்தியானார்கள். க்ஷத்திரியர்கள் பிரம்மாவின் மார்பிலிருந்தும் வைசியர்கள் பிரம்மாவின் தொடையிலிருந்தும் சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்திலிருந்தும் உற்பத்தியானார்கள்  என்று கூறப்படுகிறது.

இன்று  மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள் இதை மாற்றிச் சொல்லுகிறார்கள். வர்ணாசிரமப் பாகுபாடுகள் அவரவர்கள் செய்யும் தொழிலை வைத்துத்தான் ஏற்படுத்தப் பட்டது. வேதம் ஓதுகிறவர்கள் பிராமணன் என்று அழைக்கப்பட்டான். யுத்தம் செய்கிறவன் க்ஷத்திரியன் எனப்பட்டான். வியாபாரம் செய்கிறவன் வைசியன் எனப்பட்டான். விவசாயம், மற்ற உற்பத்தித் தொழில்களைச் செய்தவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் இந்த மனுதர்ம சாஸ்திரப்படி பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் ஐந்தாவது வர்ணத்தவர் எப்படி உற்பத்தியானார்கள், அவர்களின் தொழில் என்ன, என்று சொல்லப்படவில்லை.

பிறப்பினால் யாருடைய வர்ணமும் நிர்ணயிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த நிலைமை மாறி, ஒருவனுடைய வர்ணம் அவனுடைய பிறப்பினால் நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு யார் காரணம் என்று சொல்ல முடியாது என்கிறார்கள்.

இன்று இந்த ஐந்து வர்ணங்கிடையே பல சாதிகள் உருவாகி உள்ளன. அவை எவ்வாறு உருவாகின என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த வர்ண, சாதி வேறுபாடுகள் இந்து மதத்தினரிடையே மிக ஆழமாக வேறூன்றி இருக்கிறது. அது போக, பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று மற்ற நான்கு வர்ணத்தாரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சூத்திரர்களும் ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாகத்தான் பிராமணர்களால் நடத்தப்பட்டார்கள் என்பதை சூத்திரர்கள் மறந்து விட்டு அவர்களும் பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வதுதான்.

ஆக மொத்தம் தீண்டாமையை உண்டு பண்ணி அதை வளர்ப்பது இந்த நான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் மனம் மாறி தீண்டாமையை ஒழிப்பார்கள் என்பது வெறும் கனவேயாகும். தீண்டாதவர்களின் பிரச்சினையைப் பற்றி எழுதலாம் என்றுதான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஆனால் என் சிந்தனை என்னை வேறு ஒரு பாதையில் இழுத்துச் சென்று விட்டது. இன்றைய ஐஐடியின் பிரச்சினை தீண்டாமையின் ஒரு அங்கமே என்று கூறி என் பதிவை முடிக்கிறேன்.

ஞாயிறு, 3 மே, 2015

இந்திய நாட்டின் புற்று நோய்

                                        Image result for தலித் குடியிருப்புகள்
நாட்டிற்கே நோய் வருமா? வரும். வந்து வெகு காலம் ஆகி விட்டது. இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நம்மில் பல பேர் அதை உணராமல் அல்லது நம் ஆறுதலுக்காக அதை மறந்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம் வீடுகளில் யாராவது ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் ஓடிப்போய் விட்டாள் என்று வைத்துக் கொள்வோம். நம் வீட்டில் நடக்காத வரையில் இதைப் பற்றிக் கேள்விப்பட்டால் "அடப் பாவமே, அப்படியா நடந்து விட்டது" என்று கூறுவதோடு அதை மறந்து போகிறோம். நமக்கு வேண்டியவர்களாக இருந்தால் நேரில் போய் துக்கம் விசாரித்து விட்டு வருவதோடு சரி.

நமக்கு வேண்டாதவர்களாய் இருந்தால் "பெண்ணை வளர்த்த லட்சணத்தைப் பார்" என்று வாய் கூசாமல் பேசுவோம். இதே காரியம் நம் வீட்டிலேயே நடந்திருந்தால் நாம் கூனிக் குறுகிப் போய் விடுவோம். அதைப் பற்றிப் பேசவே வெட்கப்படுவோம். இது நம் குடும்பத்திற்கு ஒரு அவமானச் சின்னமாக ஆகி விடும். வெளி விசேஷங்களில் கலந்து கொள்ள மாட்டோம். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக மாட்டோம்.

இப்படிப்பட்ட ஒரு அவமான உணர்ச்சியை அனுபவித்தால்தான் அது எவ்வளவு கொடுமையானது என்று தெரியும். அப்படிப்பட்ட ஒரு அவமானச்சின்னத்தைச் சுமந்து கொண்டு இந்நாட்டில் 20 சதம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த உண்மையை நாம் என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? இல்லையே?

திடீரென்று இந்த ஞானோதயம் எனக்கு எப்படி உதயமானது என்று கேட்கிறீர்களா? என்னுடைய ஒரு பதிவில் என்னுடைய கம்யூனிடி சர்ட்டிபிகேட்டைப் பிரசுரித்திருந்தேன். அது ஒரு தற்செயலாக நடந்த செயல். மற்ற சர்ட்டிபிகேட்டுகளுடன் இதுவும் சேர்ந்து விட்டது. இதைப் பார்த்த ஒருவர் உங்கள் ஜாதியைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன வந்தது, இதே மாதிரி தலித் மக்கள் அவர்கள் ஜாதியைச் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார்.

அப்போதைக்கு ஏதோ சப்பைக் கட்டு பதில் சொன்னேனே தவிர, என் மனதில் இதைப் பற்றி தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. கூகுளில் தலித்துகளைப் பற்றி ஏதாவது கருத்துகள் இருக்கிறதா என்று தேடினேன். சில கிடைத்தன. அவைகளைப் படித்த போதுதான் நம் நாட்டில் இத்தகைய புற்று நோய் இருப்பதை உணர்ந்தேன். நான் என்னமோ திடீரென்று தலித்துகளுக்கு ஆபத்பாந்தவனாக ஏன் மாறினேன் என்று கேள்விகள் கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனாலும் இந்த அவலம் என் மனதில் பல நாட்களாக இருந்து உறுத்திக்கொண்டு வருகிறது.

நம் நாடு சுதந்திரம் பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு பெரிய நாட்டின் அரசே இதை ஒழிக்க எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இந்த தீண்டாமை எனும் புற்று நோயை ஒழிக்க முடியவில்லையே. ஏன் ? இது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இதற்கு இந்நாட்டின் அனைத்து தரப்பினரும் காரணமே. இருந்தாலும் இந்த நோய்க்குத் தீர்வு என்னவென்று புரியவில்லை? சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று நான் ஆராயவில்லை. என் மனதில் பட்டதைக் கூறியிருக்கிறேன்.