தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 அக்டோபர், 2014

நான் என் வாழ்நாளில் இதுவரை சாப்பிடாத இனிப்பு


எனக்கு சிறு வயது முதற்கொண்டே இனிப்பு மேல் அதிகப் பிரியம். நான் ஐந்து வயதாயிருக்கும்போது டிராயர் பாக்கெட்டில் சர்க்கரையை திருடிப் போட்டுக்கொண்டு சிறிது சிறிதாக சாப்பிடுவேன். வெல்லம் கிடைத்தால் இன்னும் அதிக குஷி. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சாப்பிட்டுத்தான் இன்று டயாபெடீஸ் என்னும் நோவை வாங்கி வைத்திருக்கிறேன்.

அதற்காக ஸ்வீட் சாப்பிடுவதை விட முடியுமா, என்ன? நோவு ஒரு பக்கம், ஸ்வீட் சாப்பிடுவது இன்னொரு பக்கம்.

சமீபத்தில் நான் இரண்டு ஸ்வீட்டுகள் (தனித்தனியான விசேஷங்களில்தான்) சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. இது வரை அந்த ஸ்வீட்டுகளை நான் பார்த்ததே இல்லை. சாப்பிட்டதும் இல்லை. (பார்க்காதபோது எப்படி சாப்பிட முடியும்? அது வேறு விஷயம்) அவைகளின் சுவை எழுத்தில் சொல்லி முடியாது. சாப்பிட்டால்தான் அனுபவிக்க முடியும்.

இதில் என்ன கொடுமை என்றால், அந்த ஸ்வீட்டுகளின் பெயர் எனக்குத் தெரியவில்லை. பந்தியில் சாப்பிடும்போது பட்டிக்காட்டான் மாதிரி அதன் பெயரைக் கேட்க முடியுமா என்ன? நாம் அது வரை அந்த ஸவீட்டை பார்த்ததில்லை, சாப்பிட்டதில்லை என்கிற விஷயத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டால் நம் கௌரவம் என்ன ஆகிறது? ஆகவே ஏதோ தினமும் அந்த மாதிரி ஸ்வீட்டுகளைத்தான் வீட்டில் சாப்பிடுவது மாதிரி ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு வந்து விட்டேன்.

இப்போது என் வருத்தம் என்னவென்றால் எங்காவது பெரிய ஓட்டலில் யாராவது ஓசியில் விருந்து வைத்தால் இந்த ஸ்வீட்டை எப்படி கேட்பது என்பதுதான்? இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டித்தான் இந்தப் பதிவு. நண்பர்கள் உதவ வேண்டும்.

முதல் ஸ்வீட் ஒருவருடைய சதாபிஷேக விருந்தில் சாப்பிட்டது. அவர் மைசூரைச் சேர்ந்தவர். அந்த விருந்தில் பூரி மாதிரி ஒன்றைப் போட்டு அதன் மேல் ஜீரா சக்கரையைத் தூவினார்கள். ஜீரா சர்க்கரை என்றால் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சாதா சர்க்கரையை நைசாக அரைத்ததுதான் ஜீரா சர்க்கரை.  பிறகு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றினார்கள். இந்தக் கலவையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டால் தேவாம்ருதம் தோற்றது போங்கள்? அவ்வளவு சுவை.

முழுவதும் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னொன்று சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அத்தனை பேருக்கு முன்னால் கேட்க வெட்கமாய் இருந்ததினால் கேட்காமல் வந்து விட்டேன். ஆனாலும் இந்த பாழாய்ப்போன மனசு அந்த ஸ்வீட்டுக்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறது.

அந்த ஸ்வீட்டின் பெயரும் அது தமிழ் நாட்டில் எங்கு கிடைக்கும் என்று யாராவது தெரிவித்தால் நான் என் ஆயுளுக்கும் (என் ஆயுள் இன்னும் கொஞ்ச காலம்தான்) நன்றியுடையவனாக இருப்பேன்.

இரண்டாவது ஸ்வீட் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்த என் மனைவியிடம் கொடுத்தனுப்பிய ஸ்வீட் பேக்கட்டில் இருந்தது. அவர்கள் ஆந்திராக்காரர்கள். இந்த ஸ்வீட் பேக்கட் மேல் ஒரு கடையில் பெயர் இருந்தது. SIRI A Sweet World, Shop No. 13, NTR Stadium Complex, Brindhavan Gardens,Guntur-7.

அந்த ஸ்வீட் ஒரு காகித ரோல் போல இருந்தது. அது காகிதம் தான் என்று நினைத்துக்கொண்டு அதை பிரித்தேன். பெரிய காகிதமாக பிரிந்தது. உள்ளே பிரவுன் கலரில் ஏதோ இருந்தது. தொட்டு சுவைத்துப் பார்த்தேன். இனிப்பாக இருந்தது. இதை ஏன் இவ்வளவு பெரிய காகிதத்தில் சுருட்டி வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தேன். என்னுடைய கிழட்டு மூளையில் ஒரு பொறி தட்டியது. அந்தக் காகிதத்தை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டேன் அது வாயில் கரைந்தது.

ஆஹா, இதுவா விஷயம் என்று புரிந்தது. அதாவது அந்தக் காகிதச்சுருளைப் பிரிக்காமல் அப்படியே சாப்பிடவேண்டும் போல என்ற உண்மை புரிந்தது. இதை அப்படியே சுருட்டி சாப்பிட்டேன். இந்த ஸ்வீட் முழுவதும் நெய்யோ நெய். கையில் ஒட்டிக்கொண்ட நெய் வாசனை இரண்டு நாள் போகவில்லை. ருசியோ ருசி. அப்படி ஒரு ருசியை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.

அடுத்த நான் இன்னொரு ஸ்வீட் மிச்சம் இருந்தது. முதல் நாள் சாப்பிட்டபோது வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் பங்கு போட்டு கொடுத்ததினால் எனக்கு குறைவாகத்தான் கிடைத்தது. மனதிற்குத் திருப்தி ஏற்படவில்லை. ஆகவே இந்த மிச்சம் இருந்த ஸ்வீட்டை நான் ஒருவனாகவே சாப்பிட்டு முடித்து விட்டேன். நன்றாக இருந்தது. திருப்தி அடைந்தேன்.

இதன் விளைவு ஒன்றே ஒன்றுதான். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பசியே தோன்றவில்லை. இந்த தீபாவளிக்கு குண்டூர் போய் இந்த ஸ்வீட் ஒரு நூறு பீஸ் வாங்கி வரலாமா என்று யோசித்தேன். வீட்டிற்குத் தெரியாமல் அவ்வளவு தூரம் சென்று வருவது சாத்தியமில்லையாதலால் வீட்டில் பர்மிஷன் கேட்டேன். ஒரு ஸ்வீட் சாப்பிட்டே இரண்டு நாள் வயிற்று மந்தத்தில் இருந்தீர்கள். நூறு ஸ்வீட் வாங்கி வந்து எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் போகவா என்று என் முயற்சியை தடுத்து விட்டார்கள்.

இது என்ன ஸ்வீட்? இது எங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். தெரிந்தவர்கள் உதவ வேண்டும்.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.