நட்சத்திரப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்சத்திரப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஜூலை, 2012

நன்றியுரை.அன்புடையீர்,

ஒரு வார காலத்திற்கு என்னை பதிவுலக நட்சத்திரமாக மாற்றிய தமிழ்மண நட்சத்திரப் பதிவுகளின் நிர்வாகிகளுக்கும், குறிப்பாக திரு. சங்கரபாண்டி அவர்களுக்கும், இந்த தகுதிக்கு என்னை முன்னிலைப்படுத்திய நண்பர் கோவி. கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நடசத்திரப் பதிவுகளுக்குப் பெருவாரியாக வந்து ஆக்கபூர்வமான பின்னூட்டமிட்டவர்களுக்கும், வாழ்த்து கூறியவர்களுக்கும், உற்சாகப்படுத்தியவர்களுக்கும், பார்வையிட்டவர்களுக்கும், திரட்டிகளில் ஓட்டுப் போட்டவர்களுக்கும் நான் மிகுந்த கடன்பட்டிருக்கிறேன். இக்கடனை எவ்வாறு தீர்ப்பேன் என்ற எண்ணம் என்னை ஒருவித குற்ற உணர்விற்குத் தள்ளியிருக்கிறது.

என் வயதின் காரணமாகவும், உடல், மன நிலை காரணமாகவும் என்னால் அதிகமான பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட முடிவதில்லை. ஆகவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கம்பன் காட்டிய  இலங்கை வேந்தன் போல் கலங்குகிறேன். நண்பர்கள் இந்நிலைக்காக என்னை மன்னிக்கவேண்டும்.

என்னுடைய இந்த வாரப் பதிவுகள் நட்சத்திரப் பதிவுகளின் தரத்தை எட்டாமல் இருந்திருக்கலாம். அதற்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னால் நான் எழுதியவற்றைத் திரும்பவும் படித்து மெருகேற்ற முடிவதில்லை. என் சோம்பேறித்தனம்தான் அதற்கு முக்கிய காரணம். அதற்காக தமிழ்மண நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தவிர, என்னால் விரிவாகவும் எழுத முடிவதில்லை. சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்ற நன்னூல் சூத்திரம் என் ஆழ்மனத்தில் பதிவாகியிருப்பதே இதற்குக் காரணம். ஆகவே என்னுடைய இந்த நட்சத்திரப் பதிவுகள் அனைத்தும் சுருக்கமாகவே அமைந்து விட்டன. சில சமயம் அவை திடீரென்று முடிந்து விட்ட மாதிரியோ அல்லது குறையுடன் முடிந்து விட்ட மாதிரியோ கூடத் தோன்றலாம். இது என்னுடைய பலகீனம். இதைப் பொறுத்துக்கொண்டு என்னை உற்சாகப்படுத்திய அத்துணை நல்ல நெஞ்சங்களுக்கும் மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இந்த வாய்ப்பை தமிழ் மணமும் பதிவுலகமும் எனக்களித்த பெரும் பேறாகக் கருதுகிறேன். இனிமேல் நான் எழுதுவது படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என்ற உணர்வை இந்த வாய்ப்பு என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. இனி வரும் பதிவுகளில் இந்த உணர்வை செயல்படுத்த முயற்சிக்கிறேன்.

நன்றி, வணக்கம்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

பதிவுகளின் பயன்

.
பல்லாயிரக்கணக்கானவர்கள் பதிவு எழுதுகிறார்கள். உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பல விதமான கருத்துகள் எழுதப்படுகின்றன. இவைகளை எழுதுபவர்களுக்கோ அல்லது படிப்பவர்களுக்கோ இந்தப் பதிவுகளினால் என்ன பயன் என்று சிறிது சிந்திப்போம்.

பதிவு எழுத வந்தவர்கள் பெரும்பாலும் யாரையாவது பார்த்துத்தான் பதிவுலகத்திற்குள் வந்திருப்பார்கள். இதில் கூகுளின் பங்கு மகத்தானது. அவர்கள் இந்த வசதியைக் கொடுக்காவிடில் பதிவுலகம் இவ்வளவு வளர்ந்திருக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருந்திருக்க முடியும்.

இரண்டாவது எழுதுபவர்களின் கற்பனைக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. அவர்களின் எழுத்துத் திறமையை உலகிற்குக் காட்ட ஒரு வாய்ப்பாக அமைகின்றது. மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை. அவனுக்கு உணர்ச்சி பூர்வமான தேவைகளும் இருக்கின்றன. அவைகளில் ஒன்று தன் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லவேண்டும் என்பது. இந்த தேவையை பதிவுகள் நல்ல முறையில் பூர்த்தி செய்கின்றது. அதனால்தான் பதிவுகள் பிரபலமாக இருக்கின்றன.

ஆனால் நாம் எல்லோரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பதிவில் எழுதப்படும் கருத்துகள் எவ்வகையிலாவது படிப்பவர்களுக்கு உதவ வேண்டும். நகைச்சுவைப் பதிவு மனதை சந்தாஷப்படுத்தும். பயணப் பதிவுகள், நாமே அந்த இடங்ளுக்குப் போன உணர்வைக்கொடுக்கும். கதைகள் மனதை வருடிக்கொடுக்கும். ஆன்மீகப் பதிவுகள் கோவில்களுக்குப் போன திருப்தியைத் தரும்.

இவ்வாறு பலதரப்பட்ட பதிவுகள் ஏதாவது ஒரு வகையில் படிப்பவர்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கின்றன. ஆனால் சில பதிவுகள் படிப்பவர்களின் மனதைக் கெடுக்கும் விதமாகவோ அல்லது எதற்கும் உதவாத தகவல்களையோ தருகின்றன. அவ்வாறு எழுதுபவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும். நம் பதிவில் எழுதும் சிந்தனை மக்களுக்கு ஏதாவது வகையில் உதவுமா, இல்லையென்றால் அப்படிப்பட்ட பதிவுகளை எழுத தயங்க வேண்டும்.

தவிர, பதிவில் ஒரு சிந்தனை மக்கள் முன் வைக்கப்பட்டால் படிப்பவர்கள் அதைப்பற்றி தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாகப் போடவேண்டும். பதிவுகள் ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக அமைய வேண்டும். அப்போதுதான் பதிவுகளின் முழுப் பயனும் கிடைக்கும். இன்றோ பின்னூட்டங்கள் வெறும் முகஸ்துதிகளாக இருக்கின்றனவே தவிர, ஆக்கபூர்வமான கருத்துகளாக இல்லையென்பது வருத்தத்திற்குரியது.

பதிவர்களின் சந்திப்பில் இத்தகைய கருத்துக்ளை விவாதித்தால் பதிவுலகம் ஒரு பயனுள்ள சக்தியாக உருவெடுக்கும் என்பது என் கருத்து. பதிவர்களே, சிந்தியுங்கள்.

சனி, 28 ஜூலை, 2012

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?இந்தக் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருகின்றது. ஆனால் நேரடியான பதில்தான் இல்லை. முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் கடவுளை நம்புகிறவன். தினமும் காலை குளித்து முடித்தவுடன் கடவுள்கள் படங்களுக்கு முன் நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, நெற்றி நிறைய விபூதி பூசுகிறவன். ஆனாலும் இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் தோன்றிக் கொண்டு இருக்கிறது.

சூரியன் இருக்கிறானா, சந்திரன் இருக்கிறானா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. அவை கண்ணுக்கு முன்னால் தெரிகின்றன. அவைகளின் செயல்களை உணருகிறோம். ஆகவே அவைகளின் இருப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆனால் கடவுள் அப்படியில்லை. கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பார்த்தாகச் சொல்பவர்கள் ஒன்று பொய்யர்கள் அல்லது மனப்பிராந்தி பிடித்தவர்கள்.

அப்படியானால் கடவுள் என்ற ஒரு தத்துவம் எப்படி உருவாகியது? இது மிகவும் ஆராய வேண்டிய கேள்வி. கடவுளை உருவாக்கியவர்கள் யார்? ஏன் உருவாக்கினார்கள்? அது மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தீர்க்கமான பதிலை இந்த சிறு பதிவில் முடிக்க முடியாது. தவிர அந்த அளவிற்கு எனக்கு ஞானமும் இல்லை.

ஆனால் நான் ஒரு சராசரி அறிவுள்ள ஒரு மனிதன். பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பல ஆன்மீகப் பிரங்கங்களைக் கேட்டிருக்கிறேன். பல சாமியார்களின் நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காலில் விழுந்தும் இருக்கிறேன். இந்த பின்புலத்தில் என் மனதில் தோன்றும் கேள்விகளையும் அதன் பதில்களாக என் மனதில் தோன்றும் எண்ணங்களையும்தான் இங்கே பகிர்கிறேன்.
ஆதி மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்ற விவாதத்தில் நம்பிக்கைதான் ஆதாரமே தவிர வேறு எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. இன்றும், கடவுளைக் காட்ட முடியுமா என்றால் அது அவரவர் நம்புக்கையின்பாற்பட்டது என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கடவுளைக் காட்டுவார் யாரும் இல்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் ஆகத்தானே இருந்திருக்கவேண்டும்? ஏன் இந்துக்களுக்கு ஒரு கடவுள் (ஒருவரல்ல, எண்ணிலடங்காத கடவுள்கள்), இஸ்லாமியர்களுக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று இருக்கிறார். ஆதியில் ஒரு மனிதனிலிருந்துதானே மற்ற எல்லோரும் உற்பத்தியானார்கள்? அப்போது முதல் மனிதனை உண்டாக்கிய கடவுள் ஒருவர்தானே இன்று வரையில் இருக்கவேண்டும்? ஏன், எப்படி இத்தனை கடவுள்கள் உண்டானார்கள்?

ஆகவே கடவுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரவர்கள் தங்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப கடவுள்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதுதான் முழுமுதற்கடவுள் என்று நம்பி வழிபட்டார்கள். தங்களின் மனம் சலனமடையும்போது ஒரு ஊன்றுகோலாக கடவுளைப் பயன்படுத்தினார்கள். இன்னும் வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் கடவுளைக் காட்டி, மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்?

அப்படி கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்புகிறார்களே அவர்களைப்போல் முட்டாள்கள் யாராகிலும் உண்டா? கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்து அடிமைகளாக்கி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். வாழக்கையையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் கோட்டை விட்டு விடாதீர்கள்.

வெள்ளி, 27 ஜூலை, 2012

வாழ்வின் நோக்கம் என்ன?நாம் பிறந்தது ஏன் என்பது நமக்குத் தெரியாத ஒரு செயல். ஆனாலும் பிறந்து, வளர்ந்து கல்வி கற்று, வேலை தேடி, மணம் புரிந்து, குழந்தைகள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சூழ்நிலைகளின் வேறுபாடுகளினால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் வாழ்கிறோம். ஆனாலும் மனிதன் வாழ்வதற்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்றால் சரியான பதில் எதுவும் சொல்லமுடிவதில்லை.

நாம் பிறந்து ஓரளவு அறிவு பெற்றவுடன் சிந்திக்கத் தொடங்குகிறோம். இந்நிலையில் நம் சிந்தனைகள் நாம் பழகும் மனிதர்களின் சிந்தனைகளை ஒட்டியே இருக்கிறது. குறிப்பாக நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோரின் எண்ணங்களையே நாமும் பிரதிபலிக்கிறோம். இவர்கள் நமக்கு காட்டும் வழி என்ன? நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல வேலை தேடிக்கொள்ளவேண்டும், கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நிலைபெறவேண்டும், என்பவைதான். சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் வழி காட்டுதல் இவ்வளவே.

இவ்வாறு ஒரு சராசரி வாழ்வு வாழ்வதில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. உங்கள் பெற்றோர்களும் உறவினர்களும் உங்களை மரியாதையுடன் பார்க்கிறார்கள். உங்கள் மனைவியும் மக்களும் இங்களைப் பற்றி பெருமை கொள்கிறார்கள். ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டிய அங்கீகாரங்கள் இவ்வளவே. ஏறக்குறைய செம்மறியாட்டு மந்தையில் ஒரு ஆடாக மனிதன் ஆகிவிடுகிறான்.

இதை விட்டு நீங்கள் வேறு வழியில் போக முயற்சித்தால் சமூகம் உங்களை விடுவதில்லை. அதை எதிர்த்து நீங்கள் செயல்பட்டால் உங்களை பைத்தியம் என்று பெயர் சூட்டி ஒதுக்கி விடுவார்கள். இந்த சூழ்நிலையை மீறி சிலர் செயல்படுகிறார்கள். அவர்கள்தான் அரசியல் தலைவர்களாக, சமூக சீர்திருத்த வாதிகளாக, பெரிய தொழிலதிபர்களாக, பெரிய வியாபாரிகளாக உருவாகிறார்கள். அவர்கள் அவ்வாறு உருவெடுக்க உதவுவது அவர்களின் மனோபாவமும் சூழ்நிலைகளும் ஆகும். எல்லோராலும் அவ்வாறு உருவாக முடியாது.

அப்படி உருவானவர்களின் கொள்கைகள் நியாயமானதாகவே இருக்கவேண்டும் என்ற சட்டம் இல்லை. பெரும்பாலாவர்கள் குறுக்கு வழிகளையே கடைப்பிடிக்கிறார்கள். நியாய அநியாயங்கள் அவர்களுக்கு இல்லை. எப்படியும் தாங்கள் மேல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக கொலைகளும் செய்வார்கள். இந்த வழி சாதாரண மக்களுக்கு உகந்ததல்ல.
அப்படியானால் என்னதான் செய்யலாம் என்று யோசித்தபோது கிடைத்த சில கருத்துகளை இங்கே பகிர்கிறேன்.

  1.   உண்மையாக இருங்கள். உங்கள் மனச்சாட்சி சொல்வதைக் கேளுங்கள்.
  2.   மற்றவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
  3.   அன்பாக இருங்கள். மற்றவர்கள் கஷ்டங்களைக் கண்டு மனம் உருகுங்கள். அக்கஷ்டங்களை உங்களால் முடிந்த அளவு குறைக்கப் பாடுபடுங்கள்.
  4.   தொழிலில் நேர்மையாக இருங்கள்.

எல்லோரும் இக்கருத்துகளை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்தால், சமூகம் கொஞ்சமாவது மாறும் என்று நம்புகிறேன்.


வியாழன், 26 ஜூலை, 2012

விளையாட்டுகளும் போட்டிகளும்.மனிதன் ஒரு குழு மிருகம். அதாவது அவன் குழுவாக இருக்க விரும்புபவன். யாருடனும் சேராமல் தனியாக இருப்பவனை எல்லோரும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பார்கள். (என்ன சந்தேகம், மனநோய் பீடித்தவன் என்ற சந்தேகம்தான்).

குழுவாக சேர்ந்து என்ன செய்யமுடியும்? அதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் விளையாட்டுகள். பழங்காலத்திலிருந்தே பல வகையான விளையாட்டுகள் விளையாடப்பட்டு இருக்கின்றன. 

விளையாட்டுகளுடன் கூடவே அவற்றை வேடிக்கை பார்ப்பதும் ஒரு குழு செயலாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே விளையாட்டு என்றாலே விளையாடுபவர்கள் சிலரும் அதை வேடிக்கை பார்ப்பவர் பலரும் சேர்ந்த செயல்பாடாகவே இருந்து வந்திருக்கிறது.

விளையாட்டுகள் அந்தந்த நாடுகளின் கலாசாரம், கால நிலை, வாழ்க்கை முறைகள் ஆகியவைகளை அனுசரித்தே உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்க்கை முறையான விவசாயத்தை ஒட்டி அமைந்த விளையாட்டாகும். காளைகள் விவசாயத்திற்கு இன்றியமையாதவை. அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை வாங்குவது அவசியமான ஒன்று. அதையே ஒரு வீர விளையாட்டாக அமைத்துக் கொண்டார்கள்.

பல்லாங்குழி, பாண்டி ஆகிய விளையாட்டுகள் சிறுமிகளுக்கு உகந்ததாக அமைந்தன. இந்த விளையாட்டுகளுக்கு எந்த செலவும் இல்லை. எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். குழுவாகப் பொழுது போக்குவதற்கு வசதியாக இருந்தன.

சாதாரணமாக விளையாடக்கூடிய விளையாட்டுகள் கால ஓட்டத்தில் வளர்ச்சி பெற்று பல சட்ட திட்டங்களுடன் வளர்ச்சியடைந்தன. கபடி என்று சொல்லப்படும் விளையாட்டு கிராமத்தில் பத்து பேர் கூடினால் விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்த காலம் மாறி இன்று அது ஒரு தேசிய விளையாட்டாக பல சட்டதிட்டங்களுடன் மாறி விட்டது.

பொதுவாக எல்லா விளையாட்டுகளும் உடலுக்கு ஒரு பயிற்சியாகவே இருந்து வந்திருக்கின்றன. இங்கிலாந்து நாடு ஒரு குளிர்ப் பிரதேசம். வெயிலைக் காண்பதே அபூர்வம். அந்த நாட்டில் வெய்யில் வரும்போது குளிர் காய்வதற்காக ஏற்பட்ட விளையாட்டு கிரிக்கெட். அதுவும் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விளையாடுவார்கள். விளையாடுபவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் வெய்யிலின் பயன் கிடைத்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்தது. இதே மாதிரிதான் கோல்ப்ஃ என்ற விளையாட்டும். ஒரு பந்தை நாற் முழுவதும் தட்டிக்கொண்டே போவது.

குளிர் பிரதேசத்துக்காரன்  வெயில் காய்வதற்காக ஏற்படுத்திய விளையாட்டுகளை வெயில் பிரதேசங்களில் எதற்காக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிர்களில் ஒன்று. தவிர, நாள் கணக்கில் வெய்யிலில் நின்று கொண்டிருப்பது உஷ்ணப் பிரதேசங்களில் முடியாததும் தேவையில்லாததும் ஆகும்.

நம் நாட்டுக்கு உகந்தது ஒரு மணி நேரம் விளையாடக்கூடிய கால் பந்தும் ஹாக்கி விளையாட்டும்தான். ஒரு காலத்தில் உலக அரங்கில் நெம்பர் ஒன்றாக இருந்த நம் ஹாக்கி டீம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. காரணம் நம் அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை கால் பந்துக்கும் ஹாக்கிக்கும் கொடுக்காததுதான்.

விளையாட்டு வெறும் பொழுது போக்காக மட்டும் இல்லாமல் அதில் ஜெயிப்பவர் கெட்டிக்காரர் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. இதனால் விளையாட்டு என்பது குழுவாகப் போட்டி போடுவதுடன் நில்லாமல் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே கெட்டிக்காரர்கள் என்று பேசப்பட்டார்கள். நாளாக நாளாக இந்த விளையாட்டுகளில் யார் ஜெயிப்பார்கள் என்று பணையம் கட்டுவதும் தொடங்கியது.

கிரிக்கெட்டில் இது பெரும் பூதமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். எல்லா விளையாட்டுகளிலும் இந்த சூதாட்டம் பரவி இன்று சூதாட்டம் இல்லாத விளையாட்டே இல்லை என்று ஆகிப்போனது. 

மனித நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட விளையாட்டுகள் இவ்வாறு சூதாட்டமாக மாறிப்போனது பெரிய கலாச்சார சீர்கேடு. இந்த நிலை மாறுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதிலளிக்கவேண்டும்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

இல்லறம் நடத்துவது எப்படி?இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது. இப்டித்தான் பல விஷயங்களை நாம் அறிந்ததாக நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால் அவைகளில் மேலோட்டமாக ஏதோ சில விஷயங்கள்தான் தெரிந்திருப்போம்.

இல்லறம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள பல நுணுக்கங்களை ஆராய்ந்தால்தான் இல்லறத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று மலைப்பாக இருக்கும்.

தன் சந்ததியை தொடரவேண்டும் என்று ஓரணு ஜீவராசிகளிலிருந்து மனிதன் வரை ஆசைப்படுகிறான். இது இயற்கையில் ஏற்பட்ட ஒரு உந்துதல். மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும் இந்த ஒரு நோக்கத்திற்காகவே உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று அனைத்து உயிர்களிலும் மேம்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு பகுத்தறியும் திறன் இருப்பதால் பல விதங்களில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளான்.

அப்படி வாழும் மனிதன் மற்ற ஜீவன்களிடமிருந்து வேறுபட்டு பல சமூகக் கோட்பாடுகளை தனக்காகவும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் ஏற்படுத்தியுள்ளான். இந்தக் கோட்பாடுகள் ஒரு நாளில் ஏற்பட்டவை அல்ல. பல நூற்றாண்டு காலமாக மனித சமுதாயம் ஏற்படுத்தியுள்ள கோட்பாடுகள். இந்தக் கோட்பாடுகளின்படி வாழ்பவனே மனிதன் எனப்படுகிறான். மற்றவர்கள் மனித உருவில் வாழ்பவர்கள் மட்டுமே.

இல்லறம் இனிமையாக அமைய 10 யோசனைகள் கொடுத்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் அனுசரிக்கலாம்.
  
   1.   பொறுப்பை உணருங்கள். குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத்தலைவன் என்கிற பொறுப்பு உங்களுடையது. குடும்பத்திலுள்ள அனைவரின் சுக துக்கங்களும் உங்களுடையதே.
   2.   ஒரு நல்ல தொழில் வேண்டும். வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம் தேவை. அது இல்லாவிட்டால் உங்களுக்கு குடும்பம் தேவையில்லை.
   3.   சேமிப்பு மிக மிக அவசியம். உங்கள் வருமானத்தில் பாதியில்தான் உங்கள் குடும்ப செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். மீதியை சேமியுங்கள். அதில் ஒரு பாதி எதிர்பாராத செலவுகளுக்கு உதவும். மீதி பாதி நீண்ட கால சேமிப்பாக இருக்கும்.
   4.   செலவினங்களுக்கு ஒரு திட்டம் போடுங்கள். அப்போதுதான் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். சிக்கனம்தான் செழிப்புக்கு வழி.
   5.   ஆடம்பரத்திற்கு ஆசைப்படாதீர்கள். உணவு விடுதிகளில் சாப்பிடுவது வீண் செலவு தவிர சுகாதாரக் கேடும் கூட.
   6.   எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் விவாதியுங்கள்.
   7.   பிரச்சினைகளை வளர விடாதீர்கள். அவ்வப்போது அவைகளுக்குத் தீர்வு கண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
   8.   உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம் ஆகியவைகளைக் கற்றுக்கொடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
   9.   ஆணானாலும் பெண்ணானாலும் காலா காலத்தில் அவர்களின் கல்யாணங்களை செய்து வைப்பது பெற்றோர்களின் கடமை. இதை எப்போதும் மறக்கக்கூடாது.
   10. தன் கடைசி காலத்தை சிரமமில்லாமல் கழிக்கப் போதுமான ஆதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும்.


திங்கள், 23 ஜூலை, 2012

இலக்கியமும் இலக்கணமும் நாகரிகமும்எது முதலில் தோன்றியது? இலக்கணமா அல்லது இலக்கியமா? இது பட்டி மன்ற விவாதத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு பொருள். நாள் கணக்கில் விவாதிக்கலாம். இந்தப் பொருள் பற்றி விவாதிக்கும் முன் நாம் ஒன்றைத் தெளிவு படுத்திக்கொண்டால் விவாதமே தேவையிருக்காது.

எது முதலில் தோன்றியது? மொழியா அல்லது மொழியின் இலக்கணமா? இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. மொழிதான் முதலில் தோன்றியிருக்கவேண்டும். கற்காலத்தில் மனிதன் சைகளினால்தான் பேசினான் என்று சரித்திரங்கள் சொல்லுகின்றன. அதன்பிறகுதான் அவன் ஒலிகளினால் பேச ஆரம்பித்திருக்கவேண்டும்.

ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்ய தனித்தனியாக மொழிகள் உருவாகின. அவை வலுப்பெற்று அவைகளுக்கு வரிவடிவம் ஏற்பட்ட பின் அந்தந்த மொழிகளில் இலக்கியங்கள் உருவாகின. இந்நிலையில் அம்மொழிக்கு இலக்கணம் என்று ஒன்று இருந்திருக்க முடியாது. ஓரளவு இலக்கியங்கள் உருவான பின்புதான் அந்த மொழிக்கு இலக்கணம் உருவாகியிருக்கும்.

ஆகவே இலக்கியம்தான் முதல், இலக்கணம் இரண்டாவது என்பது தெளிவாகின்றது. இந்த அடிப்படையில்தான் ஒரு சமுதாயத்தின் நடைமுறைகளும் உருவாகின்றன. மனிதன் கூட்டாக வாழவேண்டியதின் அவசியத்தை உணர்ந்தபின் சமுதாயங்கள் ஏற்பட்டன. இந்த சமுதாயங்கள் கட்டுக்கோப்பாக வாழ சிலபல விதிமுறைகள் தேவைப்பட்டன. அந்த சமுதாயத்தின் மூத்த அறிஞர்கள் கூடிப்பேசி இந்த வரைமுறைகளை உருவாக்கியிருப்பார்கள்.

நல்ல விதிமுறைகள் உள்ள சமுதாயங்களே நாகரிகம் பெற்றவை என்று போற்றப்படுகின்றன. விதிமுறைகள் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. அவைகளை நடைமுறையில் அந்த சமுதாயத்தினர் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் அந்நாகரிகம் முழுமை அடைகின்றது. அப்டிப்பட்ட நாகரிகமடைந்த சமுதாயங்கள் உள்ள நாடுகள்தாம் பொருளாதாரத்திலும் முன்னேறுகின்றன.

இத்தகைய விதிகள் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் பொதுவானவை, அவைகள் மீறப்படும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. மொழிகளும் சமுதாயங்களும் அழிவது இதனால்தான். தனிமனித ஒழுக்கம்தான் சமுதாய ஒழுக்கமாக அமைகிறது. தனிமனிதனின் மொழிப் புலமைதான் அந்த மொழி வளர்வதற்கு ஆதாரமாக இருக்கின்றது. இதை நாம் புரிந்து நடக்கவேண்டும்.