நட்சத்திரப்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்சத்திரப்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜூலை, 2012

ஆண்களுக்கும் அலங்காரம் தேவையா?“ஆள் பாதி ஆடை பாதி” என்ற பழமொழி எல்லோரும் அறிந்ததே. இந்தப் பழமொழி காலாவதி ஆகிவிட்டது. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று நன்னூல் அணிந்துரையில் படித்திருக்கிறேன். அப்படி இன்று “ஆள் பாதி அலங்காரம் பாதி” என்று சொல்லவேண்டிய நிலை உருவாகிவிட்டது.

பெண்கள் அலங்காரப் பிரியைகள் என்பது காலம் காலமாகத் தெரிந்த நடைமுறை உண்மை. முன்பு கல்யாணப் பெண்ணிற்கு அலங்காரம் செய்வார்கள். உறவுகளுக்குள்ளேயோ அல்லது தோழிகள் வட்டத்திலோ, அலங்காரம் செய்யும் திறமை சிலருக்கு இருக்கும். அவர்களைக் கொண்டு மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்வார்கள்.

அலங்காரம் என்றால் ஜடை அலங்காரம் ஒன்றுதான் பிரதானமாய் இருக்கும். பூக்காரர் ஜடை அலங்காரத்திற்கு என்று ஸ்பெஷலாய் ஒரு பூக்கோர்வை கொண்டு வந்திருப்பார். அதை ஜடையில் வைத்து கட்டிவிட்டால் கூந்தல் அலங்காரம் முடிந்தது. பிறகு நெற்றிச்சுட்டி, ஜடை பில்லை, மற்ற நகைகளைப் போட்டுவிட்டால் மணப்பெண் அலங்காரம் முடிந்து விடும்.

கல்யாணத்திற்கு வரும் பெண்கள் இருப்பதில் ஒரு நல்ல சீலையைக் கட்டிக்கொண்டு கொஞ்சம் தலைக்குப் பூ வைத்துக்கொண்டு வருவார்கள். ஆண்கள் பெரும்பாலும் வீட்டில் துவைத்த வேட்டியைக் கட்டிக்கொண்டு தோளில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு வருவார்கள். மேல் சட்டை போடுபவர்கள் மிகக் குறைவு.

காலம் மாறிக்கொண்டு வருகிறது. மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய தொழில்முறை அலங்காரிகள் தோன்றி பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போது கல்யாணப் பெண்ணின் தாயார் கூட அலங்காரம் செய்து கொள்கிறாள். சில சமயங்களில் மணப்பெண் யார், மணப்பெண்ணின் தாயார் யார் என்ற சந்தேகம் கூட வந்து விடுகிறது. மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களும், தோழிகளும் கூட அலங்காரம் செய்து கொண்டுதான் கல்யாணத்திற்கு வருகிறார்கள்.

சுப விசேஷங்கள் நடக்கும் இடங்களுக்கு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வரக்கூடாது என்பது சம்பிரதாயம். அந்த சம்பிரதாயங்கள் எல்லாம் காற்றோடு போய் வெகு காலம் ஆகிவிட்டது. தலையை விரித்துப் போடுவதுதான் இன்றைய நாகரிகம். மணப்பெண்ணே கூட அப்படித்தான் அலங்காரம் செய்து கொள்கிறாள்.

இத்துடன் இந்தக் கூத்து முடிந்தால் பரவாயில்லை என்று சமாதானமடைந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் துக்க வீட்டிற்கு வருபவர்கள் வரும் கோலத்தைப் பார்த்தால் வயித்தெரிச்சல்தான் வரும். பழைய காலத்தில் துக்க சேதி கேட்டால் கட்டியிருக்கும் புடவையுடன் பெண்கள் வந்து விடுவார்கள். நெற்றியில் இட்டிருக்கும் குங்குமத்தை அழித்து விடுவார்கள். இன்று துக்க வீட்டில் இருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்களா அல்லது ஏதாவது கல்யாணத்திற்குப் போய்விட்டு அப்படியே வந்து விட்டார்களா என்ற சந்தேகம் நிச்சயமாய்த் தோன்றும்.

பெண்களை விட்டு விடுவோம். இந்த ஆண்கள் பண்ணும் அலம்பல்கள் இருக்கிறதே அதை நேரில் பார்த்தால்தான் நம்புவீர்கள். துவைத்த வேஷ்டி சட்டையோடு கல்யாணத்திற்கு வந்த காலம் மலையேறிப்போய்விட்டது. அப்படி யாராவது கல்யாணத்திற்கு வந்தால் அவர்களை சமையல்காரன் என்று கருதி பின் வாசலுக்குப் போகச் சொல்லுவார்கள். “ராம்ராஜ்” காரன் வேஷ்டி சட்டை கொண்டு வந்தாலும் வந்தான், ஜனங்கள் முழுவதுமாக மாறிப்போய் விட்டார்கள்.

கல்யாண வீட்டிற்கு வரும் பெரும்பாலானோர் வெள்ளை வேட்டி சட்டைதான் போட்டுக்கொண்டு வருகிறார்கள். தலைக்கு (கூடவே மீசைக்கும்) டை அடிக்கத் தவறுவதில்லை. வேஷ்டி, சட்டை கஞ்சி போட்டு இஸ்திரி போட்டிருக்கவேண்டும் என்பது எழுதாத சட்டம். சாதாரண சட்டை வேட்டி போட்டுக்கொண்டு போகிறவர்களுக்கு யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அவர்களுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடும்.
இப்போது என்ன நடக்கிறதென்றால் துக்க வீட்டுகளுக்கும் இதே மாதிரிதான் உடை உடுத்துகிறார்கள். அங்கும் இதே ராம்ராஜ் வேட்டி, சட்டைதான். என்ன வித்தியாசம் என்றால் மேக்கப் கொஞ்சம் குறைவாக இருக்கும்.

ஆண்களுக்கும் மேக்கப் போட கடைகள் வந்துவிட்டன என்ற விபரம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்னும் ஐந்து வருடங்களில் கல்யாணத்திற்குப் போகிறவர்களும் துக்கத்திற்குப் போகிறவர்களும் இந்த அலங்கார நிலையங்களுக்குப் போய்விட்டுத்தான் போவார்கள்.

இந்த மேக்கப் தொழிலுக்கு நல்ல வளமான எதிர்காலம் இருக்கிறபடியால் உங்கள் வாரிசுகளை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை அமையும். கார், பங்களா என்று வசதியாக வாழலாம்.

புதன், 25 ஜூலை, 2012

இந்திய தேசியக் கலாச்சாரம்ஒவ்வொரு நாட்டிற்கும், ஏன் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனி கலாசாரங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் வெள்ளைக்காரர்கள் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். பொது இடங்களிலோ, பயண ஊர்திகளிலோ, மற்றவர்களிடம் அநாவசியமாகப் பேசமாட்டார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் வலியப் போய் பேசுவதை அநாகரிகமாக கருதுவார்கள். எங்கு சென்றாலும் தன்னுடைய முறை வரும் வரையிலும் காத்திருப்பார்கள். அடுத்தவனை முந்திக்கொண்டு செல்லமாட்டார்கள்.

தமிழர்களின் குணமே வேறு. அடுத்தவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவன் காட்டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு தன்னைப்பற்றி சிந்தித்தான் என்றால் அவன் எவ்வளவோ முன்னேறியிருப்பான். கேரளாக்கரர்களை எடுத்துக்கொண்டால் உலகின் எந்த மூலையில் கொண்டு போய் விட்டாலும் அவன் அங்கும் ஒரு பிழைக்கும் வழியைத் தேடிக்கொள்வான். பஞ்சாபியர்கள் எதையும் துணிந்து செய்வார்கள்.

ஜப்பான்காரர்கள் உழைப்பிற்குப் பேர் போனவர்கள். எந்த சங்கடம் வந்தாலும் அதை சகித்துக் கொண்டு, மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யும் பண்புள்ளவர்கள். ஐரோப்பியர்கள் எதையும் திட்டமிட்டு ஒரு ஒழுங்குடன் செயல்படுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரமாக எதையும் செய்யாதவர்கள்.

இந்த வகையில் இந்தியர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இந்தியர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அவர்களை எந்தக் காரியத்திலும் முழுதாக நம்ப முடியாது. கையூட்டு கொடுத்தால் எந்த இந்தியனையும் விலைக்கு வாங்கி விடலாம். இத்தகைய எண்ணங்களே அயல் நாட்டில் இந்தியர்களைப் பற்றி பேசப்படுகிறது.

இதற்குக் காரணம் அவர்களுடைய நேரடி அனுபவங்களே ஆகும். மிளகாய்த்தூள் ஏற்றுமதிக்கு ஒரு ஆர்டர் கிடைத்தது. சில நாட்கள் ஒழுங்காக அனுப்பினார்கள். பிறகு செங்கல்லை நன்கு பொடியாக்கி மிளகாய்த் தூளுடன் கலப்படம் செய்து அனுப்பினார்கள். ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டது.

“வின்கா ரோசியா” என்று அழைக்கப்படும் சுடுகாட்டு மல்லி எனப்படும் செடி மருந்து தயாரிப்புக்காக ஏற்றுமதி ஆர்டர் கொடுத்தார்கள். சுடுகாட்டு மல்லியுடன் பல செடிகளையும் சேர்த்து அனுப்பி அந்த ஆர்டரைப் பாழாக்கினார்கள். திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் பல மூடுவிழா நடத்தியதற்குக் காரணம் நம்பிக்கையின்மைதான்.

சமீபத்தில் மாருதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தகராறுக்கு காரணம் இந்தியர்களின் அதீத உணர்ச்சி வசப்படும் தன்மைதான். இது மாதிரி பல நிகழ்ச்சிகள் இந்தியத் தொழில் துறையில் தினமும் நடக்கின்றன. பீகார் சுரங்கத் தொழில் மாஃபியாவின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறது. வெளிநாட்டுக்காரன் எந்த நம்பிக்கையில் இங்கு முதலீடு செய்ய வருவான்.

அப்துல் கலாம் கண்ட வல்லரசுக் கனவு எப்பொழுது பலிக்கப்போகிறதோ?