நல்ல பண்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்ல பண்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஜனவரி, 2015

குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை

                                              

இப்பதிவில் கூறும் குறிப்புகளை ஏற்கெனவே எல்லோரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால் நல்ல விஷயங்களைத் திரும்பவும் கேட்பதில் தவறில்லை. இந்தக் குறிப்புகள் ஒரு கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட கையேட்டில் இருந்து தொகுக்கப்பட்டது.

1. நெற்றியில் பொட்டில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது.

2. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.

3. பெண்கள் முழுப் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, மணையினாலோ, கத்தியினாலோ முழுப் பூசணிக்காயை வெட்டலாகாது.

4. கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கலாகாது. தேங்காய் உடைக்கும்போது ஏற்படும் நுண்ணலை அதிர்வுகள் கர்ப்பதைதப் பாதிக்கும்.

5. தம்பதியரைச் சேரவிடாமல் கலைப்பது மஹாபாவம். (அப்படிப்பட்ட டிவி சீரியல்களைப் பார்ப்பது அதனினும் மஹாபாவம்.) அப்படி கலைத்துப் பிரித்து வைத்தால் 21 தலைமுறை பாலவிதவைகள் ஆவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. (சீரியல் பார்ப்பவர்களுக்கு தண்டனையில் கொஞ்சம் தள்ளுபடி உண்டு என்று அதே சாஸ்திரங்க்ள சொல்லுகின்றன).

6. இரவில் வீட்டைப் பெருக்கலாகாது.அப்படிப் பெருக்கினாலும் குப்பையைத் தெருவில் கொட்டக்கூடாது. பகலில் குப்பையை வீட்டில் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி குப்பையை வீட்டில் மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாட்களில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

7. அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலுக்கு சாணம் அல்லது தண்ணீர்  தெளித்து கோலம் போடவேண்டும். இதை வீட்டு எஜமானியே செய்தால் மகாலட்சுமி மிக மகிழ்ச்சியுடன் நம் வீட்டிற்கு வருவாள்.

8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம் அல்லது வெறும் ஜலத்தால் நாலுமூலை சதுரமாக சுத்தம் செய்யவேண்டும்.

9. கையால் அன்னத்தையோ காய்களிகளையோ பரிமாறக்கூடாது. கரண்டியால் அமுதுகளைப் பரிமாறினால் தீமை வராது.

10. ஓர் இலைக்குப் பரிமாறிய மிச்சத்தை அடுத்த இலைக்குப் பரிமாறக்கூடாது.

11. தன் கணவன் அனுமதி பெற்றுத்தான் தானதர்மம், விரதம் ஆகியவைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

12. எந்தப் பொருளையும் இல்லையென்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்று கூறவேண்டும்.

13. எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது. அழுத வீட்டில் செல்வம் நிலைக்காது.

14. துன்பம் நேரும்போது வாய் விட்டு அசுப வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.

15.நம் இல்லத்திற்கு சுமங்கலிகள் வந்தால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, உபசரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ கொடுத்து உபசரிக்கவேண்டும்.

16. குடும்பப் பெண்கள் எப்பொழுதும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கக்  கூடாது.


இவையெல்லாம் ஆணாதிக்கவாதிகள் சொல்லிவைத்துப் போனவை என்று நினைக்கும் பெண்கள் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.