நான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 மே, 2015

உடல், மனசு, அறிவு

நான் யார், நீ யார், இப்படி மக்கள் திலகம் ஒரு படத்தில் பாடினார்.



நம் ஆன்மீக வாதிகளும் இதை வைத்தே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.



உடல் வேறு, மனசு வேறு, புத்தி வேறு என்று யாராவது சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள். உடல் இருந்தால்தான் மனசு இருக்கும். மனசில்தான் புத்தி இருக்கிறது. மூன்றும் ஒன்றேதான். வீணாகக் குழப்பிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

கீழ்ப்பாக்கத்துக்கு இன்னொரு வழி!

"All roads lead to Rome" அப்படீன்னு இங்கிலீசுல சொல்வாங்க. யாரு சொன்னாங்கன்னு தெரியல. ஆனா நான் சொல்றேன் கேட்டுக்குங்க. ஆன்மீகத்தில எல்லா வழிகளும் கீழ்ப்பாக்கத்திற்கே செல்லுகின்றன.

நேற்று ஒரு வழி பார்த்தோம். இன்று இன்னொரு வழி பார்ப்போம். பிரபஞ்சம் கொஞ்சம் பெரிய சமாசாரம். அதை நெனச்சா தலை சுத்துதுன்னு ரெண்டு மூணு பேர் சொல்லீட்டாங்க. அதனால அதை உட்டுடுவோம். நம்மளுக்கு சௌகரியமா, நம்மளை எடுத்துக் கொள்வோம். நண்பர் GMB சொல்லியிருக்காரு. பிரபஞ்சத்தை உட்டுடுங்கோ, சாமி, நான் யாருன்னு பாருங்கோ, அப்படீன்னு சொல்லீட்டாரு. அதைப் பார்க்கலாமா?

ரொம்ப எளிமையா சொல்லிக்கொடுக்கிறேனுங்க. ஏன்னா, இது ரொம்ப, ரொம்ப பெரிய விசயம். பகவத்கீதை முழுவதும் இதைப் பத்தித்தான் பேசியிருக்காரு, நம்ம கிருஷ்ணன். ரமண மகரிஷி "நான் யார்" அப்டீன்னு கேட்டே அவர் போதனைகளை எல்லாம் முடிச்சிட்டாரு. இதையெல்லாம் நம்ம ஆன்மீகவாதிகள் வருடக்கணக்கில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நான் யார்? ரொம்ப சாதாரணமான கேள்வி. நான் "கந்தசாமி" அப்படீன்னு சொன்னா, உடனே, அது உன் பெயர், நீ யார்னு சொல்லு, அப்படீம்பாங்க.

உங்களுக்குத் தெரிகின்ற இந்த உடல் மற்றும் உள்ளே இருக்கின்ற சதை, ரத்தம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி, இதெல்லாம் சேர்ந்தவன்தான் நான்.

இப்படி சொன்னா உடனே, நீ எப்பொழுது "என் உடம்பு" என்று சொல்கிறாயோ, அப்போதே நீ வேறு, உன் உடம்பு வேறு என்றாகிறதல்லவா, அகையால் நீ யாரென்று சொல்லு, என்பார்கள்.

ஐயா, இந்த உடம்பில்தான் என் உயிர், மனசு, மண்ணாங்கட்டி (நான் களிமண்ணைப் பற்றி எழுதியதை மறந்து விடாதீர்கள்) எல்லாம் இருக்கிறது, இது எல்லாம் மொத்தமா சேர்ந்ததுதான் நான், அப்படீன்னு சொன்னீங்கன்னு வச்சுக்கோங்க. அதுக்கு என்ன பதில் வரும் தெரியுமா, உனக்கு இன்னும் ஆன்மீக ஞானம் பத்தாது, நல்லா ஒரு குருகிட்ட உபதேசம் வாங்கிட்டு வா, அப்புறம் இதைப் பற்றிப் பேசலாம் என்பார்கள்.

எல்லாம் முடிஞ்சு கடைசீல "ஆத்மா"தான் "நான்" என்று முடிப்பார்கள். சரீங்க, ஆத்மான்னா என்னங்கன்னு கேட்டுட்டாப்போச்சு. பகவத்கீதை முழுவதையும் விளக்கிவிட்டுத்தான் ஓய்வாங்க. அதுக்குள்ள நம்ம ஆயுசும் முடிஞ்சு போகும்.

ஆகவே மக்களே, 'நான் யார்" அப்படீன்னு அலையறதை உட்டுட்டு அவங்கவங்க தொழில், பொண்டாட்டி, புள்ளைங்களை ஒழுங்கா கவனிச்சீங்கன்னா போதும். கீதை அதைத்தான் கடைசியா சொல்லுது. மடையா, அர்ஜுனா, போயி சண்டை போடற வேலையைக் கவனி, மிச்சத்தை எல்லாம் நான் பாத்துக்கறேன், அப்படீன்னுதான் கிருஷணன் கடைசியா சொல்லி முடிக்கிறான்.

களிமண்ணுல ஏறுச்சுங்களா? ஆகவே கீழ்ப்பாக்கம் போகாதீங்க, ஊட்லயே இருங்க.