நீதி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 டிசம்பர், 2014

பாப்பாத்தி அம்மா மாடு வந்திருச்சு

                                   


ஒரு ஊர்ல ஒரு சின்ன அக்ரஹாரம். அதுல பதினைந்து வீடுகள். எல்லொருக்கும் நிலம் நீச்சுன்னு சௌகரியமா வாழ்க்கை ஓடிண்டிருக்கு. ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வொரு பசுமாடு. சாஸ்திரோக்தமா பூஜைக்கு தீட்டுப் படாத பசுமாட்டிலிருந்து பால் கறந்துதான் சாமிக்குப் படைக்கணும். அதுக்காகத்தான் அவாளவாள் ஆத்தில பசுமாடு வளர்க்கறா.

ஆனாப் பாருங்கோ, அந்தப் பசுமாட்டப் பாத்தா எல்லா மாமிகளுக்கும் பயம். அது கொம்பை ஆட்டினா ஐயோன்னு கத்திண்டு எல்லோரும் ஆத்துக்குள்ள ஓடிடுவா. அதனால இந்தப் பசு மாட்டுகளை தினமும் காலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போய் சாயந்திரம் கொண்டுவந்து கொட்டிலில் கட்டிவிட்டுப் போவதற்கு ஒவ்வொரு ஊர் அக்ரஹாரத்திற்கும் ஒரு மாட்டுக்காரன் இருப்பான்.

நான் சொல்றதெல்லாம் 100 வருடத்திற்கு முந்தைய கதை. இன்னிக்குத்தான் பூத் பால்தான் எல்லாத்துக்கும்னு ஆயிப்போச்சே. பாக்கெட் மேலே கொஞ்சம் ஜலம் தெளிச்சா  தீட்டு எல்லாம் போயிடும்கறது சாஸ்த்ரம்.

இப்படி இருக்கச்சே, ஒரு நாள் ஒரு மாமிக்கு இந்த மாட்டுக்காரன் பேர்ல கோவம். முந்தின நாள் அரைப் படி பால் கொறச்சலாக் கறந்தா கோவம் வராதா? அதனால அன்னிக்குக் காலைல மாட்டுக்காரனை சத்தம் போட்டுட்டள். நீ மாட்டை சரியா மேய்க்கல, அதனாலதான் பால் கொறஞ்சு போச்சுன்னு சத்தம் போட்டாச்சு.

அன்னிக்கீன்னு பாத்து அந்த மாட்டுக்காரன் ஊட்லயும் அவன் பொண்டாட்டி கூட அவன் சண்டை போட்டுட்டு வந்திருக்கான். மாமியும் இப்படி சத்தம் போட்டதால, அவனுக்கு கோவம் இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு. இருந்தாலும் மாமி கிட்ட கோவத்தைக் காட்ட முடியுமோ. பேசாமல் போய்ட்டான். பகல் பூராவும் அவனுக்கு மனசே சரியில்லை. இந்த மாமி இப்படிக் கேட்கலாச்சே என்று மனதிற்குள்ளேயே பொருமிக்கொண்டிருந்தான்.

அதனால் என்ன பண்ணினான் என்றால் அந்த மாமியின் மாடு அவாள் வீட்டுக்கு எதிரில் வந்தவுடன் " பாப்பாத்தியம்மா, மாடு வந்துட்டுது, புடிச்சுக் கட்டிக்கோ" அப்படீன்னு சத்தமாச் சொல்லீட்டு போய்ட்டான். அந்தக் காலத்தில சூத்திரப் பயலுகளுகளெல்லாம் எல்லா அய்யர்களையும் பாப்பான் என்று சொல்லித்தான் பழக்கம். நேர்ல பாக்கறப்ப "சாமி" அப்படீம்பான்.

இப்படி ஆன பிறகு அந்த மாமி என்ன செய்தாள் என்பது வேற கதை. இந்த சொலவடை ஏன் வந்தது என்றால் ஒரு வேலையை அரைகுறையாக முடிப்பவனுக்காகச் சொல்லப்படுவது.

இந்தக் கதை பாப்பாத்தியம்மாள் கதையாதலால் ஆங்காங்கே அவாள் பாஷை வந்து விட்டது. யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அய்யர்களே தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது அடுத்தவனை "அந்தப் பாப்பான் எதிர்ல வந்தான் அதனாலதான் அந்தக் காரியம் நடக்கல" என்று பேசிக்கொள்வார்கள். ஆகவே நான் ஒன்றும் பெரிதாகத் தவறு இழைத்து விடவில்லை என்று நம்புகிறேன்..

வலைச்சர ஆசிரியர் பணி முடிந்தவுடன் நான் எழுதிய பிரிவுரையில் இந்தப் பழமொழியைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தக் கதையை ஒரு தனி பதிவாகப் போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதனால்தான் இந்த்ப பதிவு.