இந்தப் பதிவை பிளாக்கரில் போடுவதற்காகத்தான் எழுதினேன். பல அன்பர்கள் விக்கிபீடியாவிலும் எழுதுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டபடியால் இதையே விக்கிபீடியாவில் போடுவதாக இருந்தால் எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு மாதிரி (Sample) தயாரித்திருக்கிறேன். பார்த்து ரசியுங்கள்.
Ref: Google Images. No permission obtained. No idea whether copyright rules will apply.
ஆட்டோ மற்றும் டாக்சிகள் எல்லா ஊர்களிலும் மக்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.(1) ஆனாலும் எனக்கு இவைகளின் மேல் ஒரு தனிப்பட்ட வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது.(2)
(1) பார்க்க. தமிழ்நாடு அரசு கெஜட் அறிவிப்பு தேதி 22-3-1967
(2) பார்க்க. பழனி கந்தசாமியின் சுயசரிதம்.வானதி பதிப்பகம், சென்னை. பக்.54,
நான் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சராசரி மனிதன். அத்தியாவசியத் தேவைகளுக்கு மேல் எந்த சௌகரியமும் கிடைக்காமல் வளர்ந்தவன். நான் சிறுவனாக இருந்தபோது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. 1940-50 களில் கோயமுத்தூரில் டவுன் பஸ், ஆட்டோக்கள் முதலியன கிடையாது.(3) டாக்சிகளைக்கூட நான் பார்த்த நினைவு இல்லை. குதிரை வண்டி, மாட்டுவண்டி, சைக்கிள் இவைகள்தான் சாதாரண மக்களின் போக்குவரத்து சாதனங்கள்.(4)
(3) பார்க்க: கோயமுத்தூர் மாவட்ட District Gazetteer, 1935. பக்.672. பத்தி 4
(4) பார்க்க: கோயமுத்தூர் நகராட்சி வரி வசூல் ரசீது எண் BZ 267539/ தேதி14-8-1924
ஆனால் இவைகளை உபயோகிக்க பணம் வேண்டும். (5) அது ஒரு ஆடம்பரச் செலவாகக் கருதப்பட்ட காலம். மூன்று நான்கு மைல் தூரத்தை எல்லாம் நடந்துதான் போய் வரவேண்டும். அதை ஒரு கஷ்டமாகக் கருதாத காலம் அது. இப்படி வளர்ந்த நான் எங்கு போவதென்றாலும் நடந்தே போய்வந்தேன். டவுன் பஸ் வந்த பிறகும் கூட நான் கல்லூரிக்கு (2 1/2 மைல் = 3 1/2 கி.மீ.) நடந்துதான் போய் வந்தேன்.(6)
(5) Reserve Bank of India - Report on National Policy on Currency Affairs published by Govt. Of India,,Printed at National Security Prison, Eravada, 1942, page 3675.
(6) கோயமுத்தூர் கலைக் கல்லூரி ஆண்டு விழா மலர்,1952. பக்.23
பிற்காலத்தில் நான் வேலைக்கு சேர்ந்த பிறகு (7) கூட ஆட்டோ, டாக்சிகளை மிகமிக அவசரமாக இருந்தால் தவிர உபயோகித்தது கிடையாது. இதற்கு என்ன காரணம் என்றால் இந்த ஆட்டோ மற்றும் டாக்சிக்காரர்கள் எல்லோரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதே ஆகும். போகவேண்டிய இடத்தை நாம் சரியாகச் சொன்னாலும் தெரியாத மாதிரியே பாவனை செய்து ஊரைச் சுற்றிக் கொண்டு போய் அந்த இடத்தை அடைவார்கள்.(8)
(7) பார்க்க: விவசாய இலாக்கா டைரக்டர் அவர்களின் 12-7-1956 தேதியிட்ட வேலைக்கான நியமன ஆணை, தமிழ்நாடு கெஜட் தேதி 17-7-1956 பக்.417
(8) பார்க்க: கோயமுத்தூர் பஜார் போலீஸ் ஸடேஷன் FIR நெ. 26578390 தேதி 19-8-1945
தவிர அவர்களிடத்தில் ஒரு சிநேக பாவத்தைப் பார்ப்பது அரிது. நம்முடைய வாடிக்கையாளராச்சே, அவர் கொடுக்கும் காசில்தானே நம் பிழைப்பு ஓடுகிறது என்ற எண்ணம் கொஞ்சம் கூடக் கிடையாது. ஒரு விரோதியிடம் பேசுவது போல்தான் பேசுவார்கள்.(9)
(9) பார்க்க: ஒரு ஆட்டோ ஓட்டுனரின் பேட்டி, குமுதம் வார இதழ் தேதி 9-8-1924 பக் 456 பத்தி 2
அரசு என்ன சட்டம் போட்டாலும் இவர்கள் மீட்டர் சார்ஜுக்கு எங்கும் வரமாட்டார்கள். (10) இவர்களிடம் பேரம் பேசுவதற்குள் மனிதனுக்கு போதும் போதும் என்றாகிவிடும். இவர்களில் எங்காவது நூற்றில் ஒருவர் மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளலாம். அப்படிப்பட்டவர்கள் அபூர்வம்.
(10) G.O. Ms 1878 dated 26-6-2012, Transport Department, Fort St.George, Chennai
ஆகவே நான் எங்கு போனாலும் பொது போக்குவரத்து வசதிகளையே பயன்படுத்துவேன். முன்கூட்டியே இந்த பொது போக்குவரத்துகளின் விவரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். பணிக்காலத்தில் பல ஊர்களுக்கு பணி நிமித்தமாகப் போய்வந்திருக்கிறேன். டில்லி, மும்பாய், கல்கத்தா போன்ற ஊர்களுக்குப் போனாலும் அங்கிருந்து நான் தங்கவேண்டிய இடத்திற்குப் போக பஸ் அல்லது லோகல் ரயில் விபரங்களை அறிந்து வைத்திருப்பேன். அவைகளில்தான் போய்வருவேன்.(11)
(11) Railway Time Table, Indian Railways, 2014
சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தபோது நண்பர் ஜிஎம்பி அவர்களைப் பார்க்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். கூகுள் மேப்பில் பார்த்தால் நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அவர் வீடு 25 கிமீ தூரத்தில் இருந்தது. இதற்கு ஆட்டோ வைப்பதாயிருந்தால் அந்த ஊரில் குறைந்தது 500 ரூபாய் கேட்பான். பேரம் பேசினாலும் 400 ரூபாய்க்கு குறைந்து வரமாட்டான். போக வர 800 ரூபாய் ஆகும். இது ஒரு அனாவசிய செலவாக எனக்குப் பட்டது.
ஆகவே நான் இருக்குமிடத்திலிருந்து பஸ் ஸ்டேண்டிற்கு ஆட்டோவில் 50 ரூபாய் கொடுத்து போனோம். (நானும் என் மனைவியும்). அங்கிருந்து ஜலஹள்ளி கிராஸ் என்னும் இடத்திற்கு பஸ்சில் போனோம். அங்கு இறங்கி ஜிஎம்பி வீட்டிற்கு இன்னொரு ஆட்டோ 50 ரூபாய்க்குப் பேசி போய்ச் சேர்ந்தோம்.(12)
(12) பார்க்க. பிளாக்கரில் ஜிஎம்பி பதிவிட்ட பதிவு லிங்க்;http://gmbat1649.blogspot.in/2015/07/blog-post_22.html
இதைச் சிலர் கஞ்சத்தனம் என்று சொல்லலாம். ஆனால் இந்த மாதிரி பண விரயம் செய்ய மாட்டேன். இந்த குணம் ரத்தத்தில் ஊறிப் போய்விட்டது. ஆனால் என் பேரன்கள் செலவு செய்யும் விதத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சமீபத்தில் என் பேரன் ஒருவன் 3000 ரூபாய் கொடுத்து ஒரு செருப்பு (ஷூ அல்ல) வாங்கியிருக்கிறான். நான் வாயைத் திறக்கவில்லை. நமக்கு எதற்கு வம்பு. (13)
(13) பார்க்க: பாட்டா கடை விலைப் பட்டியல், பாட்டா ப ப்ளிஷிங்க் கம்பெனி, மும்பாய் -123456.
இதுதான் தலைமுறை இடைவெளி. வயசான காலத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால்தான் நிம்மதி நிலைக்கும்.
பதிவர்கள் இந்தப் பதிவை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் உங்கள் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஆதாரம் வேண்டும். ஆதாரம் இல்லாத செய்திகளை விக்கிபீடியாவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அது 100 சதம் உண்மை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் அங்கே செல்லுபடியாகாது.
இன்னொரு அறிவிப்பு: ஆதாரங்கள் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். பழனி கந்தசாமியை அணுகுங்கள். எவ்வளவு ஆதாரங்கள் வேண்டுமென்றாலும் தரப்படும். ஆதாரம் ஒன்றுக்கு விலை. 100 ரூபாய். மொத்த ஆர்டர்களுக்கு சலுகை காட்டப்படும்.
எப்படி?