பதிவர் சந்திப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு.

நானும் பதிவர் விழாவில் கலந்து கொண்டேன். வரவேற்புக்குழு சிறப்பாக பணியாற்றியது. நான் வடபழனி பஸ் நிலையத்தில் இருந்து போன் செய்தவுடன் திரு. சரவணன் அவர்கள் வந்து என்னை ரூமுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி குளிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். குளித்து ரெடியானவுடன் அங்கிருந்து விழா நடக்குமிடம் மிகவும் பக்கம். அதனால் அப்படியே பொடி நடையாக நடந்தேன்.

போகும் வழியில் வசந்தபவன் என்ற ஓட்டல் கண்ணுக்குப் பட்டது. அங்கு சென்று இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு காப்பி சாப்பிட்டேன். அந்தக் காலத்தில் பிளாட்பாரக் கடைகளில் "எது எடுத்தாலும் நாலணா" என்று பல சாமான்களைப் போட்டு வியாபாரம் செய்வார்கள். வசந்த பவன் முதலாளியும் அப்படி வியாபாரம் செய்து மேலுக்கு வந்தவர் என்று நினைக்கிறேன். நான் சாப்பிட்ட மூன்று ஐட்டங்களும் ஒரே விலை. இருபத்தியைந்து ரூபாய். மொத்தம் எழுபத்தியைந்து ரூபாய்.

சாப்பிட்டு விட்டு அரங்கிற்கு வந்தால் அரங்கிற்கு முன்னால் "அமுதா" நடமாடும் பலகாரக்கடையில் சுடச்சுட இட்லி ஒன்று மூன்று ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். சரி. நம் காசு எப்படி எப்படியோ யார் யாருக்குப் போகவேண்டுமோ, அப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்று மனதைச் சமாதானப் படுத்தினேன்.

பதிவர் சந்திப்பு நல்லபடியாக, சிறப்பாக நடந்தது. அனைத்து விழாக்குழுவினரும் சிறந்த ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இதைப்பற்றி பலரும் பதிவு போடுவார்கள் அதனால் நான் விளக்கமாக எழுதவில்லை. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

கொஞ்சம் சீரியஸ் மேட்டருக்கு வருவோம்.

பதிவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரைகள்.

பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.


இது போதாதா? வாழ்க்கையில  இப்போ இருக்கிற பிரச்சினைகளைத் தீர்க்கவே சக்தி இல்லை. இதுல ஊரு விட்டு ஊரு போயி வேற வம்பை காசு கொடுத்து வாங்கோணுமா? (காசு எப்படீ அப்படீங்கறீங்களா, ரயில்காரன் சும்மா சென்னைக்கு கூட்டீட்டு வருவானுங்களா)  வேண்டவே வேண்டாங்க. என்னமோ பதிவர் சந்திப்புக்கு போனமா, நாலு பேரப் பாத்து பேசினமா அப்படீன்னு இருக்கோணும். இது எங்க ஊட்டு அம்மா நான் ரயிலுக்குப் புறப்படறப்ப சொல்லி அனுப்பிச்ச அட்வைஸ்.

நாமதான் அம்மா கிழிச்ச கோட்டை எப்பவும் தாண்டினதில்லையே. அதனால வம்பு வராத போட்டோக்களை மட்டும் போட்டிருக்கேன். இந்த போட்டோக்களில் இருப்பவர்கள் அனைவரிடமும் போட்டோ எடுப்பதற்கும்,பதிவில் போடுவதற்குமான அனுமதி, ஸ்டாம்ப் பேப்பரில் சாட்சிக் கையெழுத்துடன் வாங்கி வைத்திருக்கிறேன். இதுலயும் யாராவதுக்கு ஆட்சேபணை இருந்தால் தயங்காமல் பின்னூட்டத்தில் போடவும். அந்தப் போட்டோக்களை அப்படியே அலாக்காத் தூக்கிடறனுங்க.

1. நான் சென்னை வந்த ரயில்.




2. என்னுடன் (ரயிலில்) வந்தவர்கள்.



.
3. சினிமா இசைக்கலைஞர்கள் அரங்கு.



4.அரங்கிற்கு எதிரில் உள்ள விஜயா மால்.



5. அரங்கு மேடை.

6. எனக்கு ஒதுக்கப்பட்ட சிம்மாசனம்.



7.மதிய விருந்துக்கான ஐட்டங்கள். (இதுதான் எல்லாவற்றிலும் டாப்.
   இதுக்காகத்தானே சென்னைக்குப் போனதே)





ஆனாலும் பிரியாணி அநியாயத்திற்கு கொள்ளை ருசி.

அடுத்த அறிவுரை:


 முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.

இதைக் கடைப்பிடிக்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன். என்னென்ன பிரச்சினைகள்னு லிஸ்ட் கொடுத்தா, அடுத்த தடவை அந்த பிரச்சினைகளை எல்லாம் பண்ண உபயோகமாக இருக்கும்.  அது சரி, மத்த நாள்ல யாரு ஹோஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரியலயே?

அடுத்த அறிவுரை:

 மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை  விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். .................. தவறக் கூடாது.


ரெண்டு நாளா இதுதாங்க வேலை. அதுதாங்க விசிலடிச்சுப் பழகறதுங்க. எப்பவோ ஒரு காலத்தில விசில் அடிச்சது. சுத்தமா மறந்து போச்சுங்க. இப்ப பிரேக்டீஸ் பண்ணலாமுன்னா பல்லெல்லாம் போயிட்டுதுங்களா, வெறும் காத்துதான் வருது. என்னால இந்தக் கண்டிஷன நிறைவேத்த முடியாததற்கு வருந்துகிறேன். சரி, கையையாவது தட்டலாம்னு பாத்தா கை வலிக்குதுங்க. இதுக்கும் சேர்த்து என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அடுத்த வருடப் பதிவர் சந்திப்பு ஈரோடில் என்று அறிவித்தார்கள். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. பொழைச்சுக் கெடந்தா பாத்துக்கலாம்.