பதிவர் திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 அக்டோபர், 2015

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு


வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி
இப்பொழுதுதான் புதுக்கோட்டையிலிருந்து திரும்பினேன். பதிவர் திருவிழா பற்றி அடுத்த பதிவர் திருவிழா வரை எழுதுவதற்கு சமாச்சாரங்கள் இருக்கின்றன. ஆனாலும் எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கொட்டி அவியல் பண்ணினால் தனித்தனி நிகழ்ச்சிகளின் சுவை தெரியாமல் போய்விடும் அல்லவா?

அதனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். (எனக்கும் பதிவுகளின் எண்ணிக்கை கூடவேண்டும் அல்லவா?

முதலில் இந்த மாகாநாட்டின் மொத்த விளைவைக் கூறுகிறேன். விழா மகத்தான் வெற்றி. திரு கவிஞர் முத்து நிலவனுக்கும் அவருடன் பணியாற்றிய விழாக்குழுவினர் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போதைக்கு சில படங்கள் மட்டும் . மற்ற விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரும்.


விழா நாயகன் கவிஞர் முத்து நிலவன்


வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்


வருகைப் பதிவு மும்முரமாக நடைபெறுகிறது


இவங்கதான் விழாவின் வெற்றிக்கு முழுக் காரணம்
(உணவுக் குழுத் தலைவி)

சகோதரி ஜெயலட்சுமி

வியாழன், 8 அக்டோபர், 2015

பதிவர் திருவிழா அழைப்பிதழ்


எனக்கும் புதுக்கோட்டை பதிவர் திருவிழா அழைப்பிதழ் இன்று 8-10-2015 மாலை வந்து சேர்ந்தது. விழாக்குழுவினருக்கு நன்றி.


        


        

அழைப்பிதழ் உறை படம் மட்டுமே என் கேமராவில் எடுத்தது. மற்ற இரண்டு படங்களும் தமிழ் இளங்கோ அவர்களின் வலையிலிருந்து சுட்டது.

பிரயாண ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன.

தமிழ் பதிவர் அடையாளத்தைப் பதிவில் யாருடைய அனுமதியும் கேட்காமலேயே போட்டு விட்டேன். பார்ப்பதற்கு எப்படியிருக்கும் என்று பதிவர்கள் அனுமானிக்க உதவும் என்று நினைக்கிறேன். பதிவர் சந்திப்பில் இது அனுமதிக்கப்பட்டால் முறையான லோகோவின் நிரல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

நானும்ம்ம்ம்ம்... புதுக்கோட்டை வருகிறேன்.

                                   

மதுரை பதிவர் விழாவிற்கு ரயில் பயணத்தில் ஏற்பட்ட ஒரு குளறுபடியால் போக முடியவில்லை. புதுக்கோட்டை பதிவர் திருவிழா அறிவிப்பு வெளியானவுடனேயே இரண்டு வேலைகளை உடனடியாகச் செய்தேன். ஒன்று நன்கொடை அனுப்பியது. இரண்டு ரயில் பயண டிக்கெட்டுகள் சரியானபடி திட்டமிட்டு வாங்கியது.

பழைய காலமாக இருந்தால் ஒருவருக்கு பணம் அனுப்பவேண்டுமென்றால் தபால் நிலையத்திற்குச் சென்று மணிஆர்டர் செய்யலாம். அல்லது பேங்கிற்குச் சென்று மெயில் டிரான்ஸ்பர் பண்ணலாம். அல்லது டிடி (திண்டுக்கல் தனபாலன் அல்ல) எடுத்து அனுப்பலாம். அதே போல ரயில் டிக்கட் வாங்க ரயில் நிலையத்திற்குச் சென்று வரிசையில் சில மணி நேரங்கள் நின்று டிக்கட் வாங்கவேண்டும். இந்த வேலைகள் எல்லாம் சள்ளை பிடித்த வேலைகள். நிறைய நேரமும் சிரமமும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்போதைய இணைய உலகில் இந்த இரண்டு வேலைகளையும் என் வீட்டில் என் வழக்கமான இருக்கையில் இருந்து கொண்டே அரை மணி நேரத்தில் முடித்துவிட்டேன். நவீன தொழில் நுட்பத்தின் ஆற்றல் என்னை மிகவும் அதிசயிக்க வைக்கிறது. ஆனால் இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு 81 வயது கிழவன் இந்த அளவு தொழில் நுட்பம் கற்று வைத்திருப்பதை நீங்கள் கவனிக்க மறந்து விடக்கூடாது.

11-10-2015 ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. அறியாதது என்னவென்றால் எவ்வளவு பேர் திருவிழாவிற்கு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள்? அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக வருவார்களா மாட்டார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க்கவேண்டும்.

திரு தமிழ் இளங்கோ சொன்ன மாதிரி பதிவர்களுக்கு வெட்கம் மிக அதிகமாக இருப்பதாக அறிகிறேன். பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள பெரும்பாலானவர்கள் வெட்கப்படுகிறார்கள். பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் திரு. முத்து நிலவன் பதிவர் கையேடு வெளியிட்டே தீர்வது என்ற முடிவுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க, என்னைப் பல கவலைகள் இப்போது பீடித்து விட்டன. நான் முதல் நாள் சனிக்கிழமையே புறப்பட்டு திருச்சியில் பிரபல பதிவர் கோபுவிடம் சில வரவு செலவு விவகாரங்களை முடித்து விட்டு, அன்று மாலை, அதாவது சனிக்கிழமை மாலையே புதுக்கோட்டை சேர்ந்து விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் அன்று இரவு அங்கே விழா நடக்கும் கல்யாண மண்டபம் அல்லது ஏதாவது ஒரு திண்ணையில் துண்டை விரித்துப் படுத்துக் கொள்ளலாமா அல்லது ஏதாவது ஒரு நல்ல லாட்ஜில் தங்கிக்கொள்ளலாமா என்பதுதான். இந்தக் கவலையினால் நான் இப்போது இரவில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட முடிவதில்லை. புது பல் செட் வைத்துக்கொண்டு சாப்பிட முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கேட்பவர்கள் தேசத்துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதற்கு விழாக் குழுவினரின் அறிவுரைகளைக் கேட்க ஆவலாய் உள்ளேன். புதுக்கோட்டை சமஸ்தானம் விருந்தோம்பலுக்கு பெயர் போனது. அந்த வழி வந்தவர்கள் அந்தப் பண்புகளை இன்னும் காப்பாற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். மற்ற பதிவர்களும் தங்கள் தங்கள் அறிவுரைகளைக் கூறலாம்.

 நிற்க, வேறு பல கவலைகளும் சேர்ந்து விட்டன. ஒருக்கால் நம்மை மேடையில் ஏற்றி, பேசச்சொல்லி விடுவார்களோ என்ற கவலை பெருங்கவலையாய் என்னை அலைக் கழிக்கிறது. அப்படிச் செய்யமாட்டோம் என்று எழுத்து பூர்வமாக திரு முத்துநிலவன் உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுக்காவிட்டால் என் பயணத்தை ரத்து செய்யலாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். அநியாயமாக ஒரு மூத்த பதிவரை பதிவர் திருவிழாவிலிருந்து விலக்கி வைக்கும் பாவத்தை அவர் செய்யமாட்டார் என்று எதிர் பார்க்கிறேன்.

இது போக புதுக்கோட்டை கொசுக்களெல்லாம் இந்த பதிவர் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். புது ரத்தம் அதிக ருசியாக இருக்கும் என்றும் அதை ருசிக்க அவை காத்துக்கொண்டிருப்பதாகவும் காற்று வாக்கில் செய்திகள் வந்து என் வீட்டுக் கொசுக்கள் பேசிக்கொண்டிருந்ததை நானே என் செவிட்டுக் காதால் கேட்டேன்.இதற்கும் ஏதாவது தடுப்பு உபாயம் விழாக் கமிட்டியார் கண்டிப்பாய் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தவிர ரயில் பயணத்திற்கான வழக்கமாக வரும் கவலைகளும் சேர்ந்து கொண்டன. பிரயாணத்தின்போது என் உடமைகளை யாராவது திருடி விட்டால் என்ன செய்வது என்பது வழக்கமாக வரும் கவலை. குறிப்பாக சமீபத்தில்தான் 999 ரூபாய் கொடுத்து ஒரு புது பேட்டா செருப்பு வாங்கினேன். அதை போட்டுக்கொண்டு வந்தால் யாராவது அதை தேட்டை போட்டு விட்டால் அப்புறம் பதிவர் மகாநாட்டு விருந்தை அனுபவித்து சாப்பிட முடியாதே என்ற கவலை. இதற்காக ஒரு விலை மலிவான செருப்பு ஒன்று வாங்கிக்கொள்ளலாமா என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் நாள் இருக்கிறது. பார்ப்போம். பதிவர்களின் ஆலோசனை தேவை.

தவிர, ஒரு சில பதிவர்கள் செய்யும் துரோகத்தை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. பதிவர் சந்திப்பு என்றால் அதற்கு சில வரை முறைகள், பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்த பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது பதிவர்களாகிய நம் தலையாய கடமை. இதற்கு எதிராக கருத்துகள் கூறிய பதிவர்களை உடனே கழுவிலேற்ற ஆணை பிறப்பிக்கிறேன். அதாவது அசைவ உணவு வேண்டாம் என்று சிலர் கொடி பிடிக்கிறார்கள். இது மகா அநியாயம் என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த சமயத்தில் இன்னும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விழாக் குழுவினர் இன்னும் விழா ஏற்பாடுகளைப் பற்றிய முழுத் தகவல்களையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்க்ள. ஏன் என்று தெரியவில்லை. ஒருக்கால் பாகிஸ்தான் உளவுப் படைக்குத் தெரிந்து விட்டால் ஏதேனும் சதி செய்து விழாவை நடத்த விடாமல் பண்ணி விடுவார்களோ என்ற பயம் இருக்கலாம்.

விழா நடவடிக்கைகளில் எனக்குத் தெரிய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்களை மட்டும் எனக்குத் தனியாகச் சொல்லி விட்டால் நான் அந்த ரகசியத்தை வெளியில் விடாமல் காப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

1. விழா அன்று  விழா மண்டபத்தில் காலை டிபன் உண்டா? ஏனெனில் வெளியில் காசு செலவழித்து டிபன் சாப்பிட்டு வந்த பிறகு, விழா மண்டபத்தில் இலவச டிபன் விநியோகம் நடந்து கொண்டிருந்தால் என் போன்றவர்களின் இளகிய மனது சுக்கு நூறாக உடைந்து விடும். தவிர காலை இலவச டிபனில் இட்லியும் கோழிக் குருமாவும் உண்டு என்பது தெரிந்தால் இரவு டிபன் சாப்பிடாமல் இருந்து விடலாம். அந்த செலவும் மிச்சமாகும்.

2. வெளியூரில் இருந்து வரும் பதிவர்களுக்கு அன்று இரவு வழியில் சாப்பிடுவதற்கு இட்லி, கெட்டிச் சட்னி கட்டிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த விருந்தோம்பலை ஆயுளுக்கும் பதிவர்கள் மறக்க மாட்டார்கள். ஆளுக்கு எட்டு இட்லி போதும்.

3. மதியம் விருந்து கட்டாயம் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னைப் போன்றவர்கள் மதிய உணவிற்குப் பிறகு சிறிது கட்டையைக் கிடத்துவது பழக்கம். அதற்கு ஏதாவது ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படி ஏற்பாடு செய்திருந்தால் மதிய ஓய்வு முடிந்து எழுந்தவுடன் நாலு வெங்காய பஜ்ஜியும் (தேங்காய் சட்னி அவசியம்), ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியும் மட்டும் கொடுத்தால் போதும்.

இன்னும் ஒன்று இருக்கிறது. அதை பப்ளிக்காக சொல்ல முடியாது. அது எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம்தான். விழாக் குழுவினர் அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே விழாக்குழுவினர் அனைத்துப் பதிவர்களின் அபிலாக்ஷைகளையும் செவ்வனே நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புதுக்கோட்டை வருகிறேன்.