பதிவுத் தலைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுத் தலைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 அக்டோபர், 2012

நான் வெட்கப்படுகிறேன்?


என்னுடைய போன பதிவின் தலைப்பு கொஞ்சம் கொஞ்சம் என்ன, மிக அதிகமாகவே விரசமாக அமைந்து விட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். பதிவை போஸ்ட் பண்ணுவதற்கு சில விநாடிகளுக்கு முன்தான் இந்த தலைப்பை வைத்தேன்.

நான் முதலில் வைத்திருந்த தலைப்பு "இளம் பெண்களின் கொலைகள்" என்பதாகும். இப்படி தலைப்பு வைத்தால் பார்வையாளர்கள் அதிகம் வரமாட்டார்கள், அதனால் கொஞ்சம் *********, என்ன சொல்வது என்று தெரியவில்லை,  வைத்துவிட்டேன். எதிர் பார்த்த மாதிரி அநேகம் பேர் பார்வையிட்டார்கள். அருமைத் தம்பி, பழமை பேசி கூட கேட்டுவிட்டார்.


அண்ணா வணக்கம். கடையில நெம்பக் கூட்டமுங்களா??!

வாங்க, தம்பி. கடைல கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டம். இத்தனை கூட்டத்தை நான் என் பதிவுலக வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. பதிவு போட்ட 24 மணி நேரத்தில் 1735 பார்வையாளர்களும் 26 பின்னூட்டங்களும் சேர்ந்துள்ளன. பெரிய கம்பெனிக்காரன் எல்லாம் நல்ல விளம்பர   வாசகங்களுக்கு ஏன் அவ்வளவு பணத்தை வாரி இறைக்கறான்னு இப்ப நான் நல்லா புரிஞ்சிகிட்டேன்.

சரக்கு எப்படியிருந்தாலும் வெளிப்பூச்சு நல்லா இருந்தா வித்துப் போயிடும் அப்படீங்கறது தெள்ளத்தெளிவா புரியுது. ஆனா இந்த உத்தியை இனி நான் பயன்படுத்த மாட்டேன். எனக்கு இந்த விளம்பரம் வேண்டாம்.
நண்பர் இக்பால் செல்வன் எழுதிய பின்னூட்டமும் அதற்கு நான் கொடுத்த விளக்கத்தையும் பாருங்கள்.


இந்தப் பதிவுக்கும், அதன் தலைப்புக்கும் நான் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன் ...

இந்தப் பதிவு பெண்கள் அடக்கம் ஒடுக்கமாக இருந்தால் ஏன் பிரச்சனை என்ற தொனியில் எழுதியது முறையான ஒன்றல்ல ..

ஆண்கள் தான் மேற்சொன்ன பிரச்சனைகள் / குற்றங்களை செய்பவர்களாக இருக்கின்றார்கள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே .. அத்தோடு சமூக சுதந்திரம், விழிப்புணர்வு, அந்நியர்களோடு பழகும் விதங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையும், பெண்களை சுகிக்கவும், கசக்கி எறியவும் ஆண்களுக்கு கற்றுத் தந்த சமூகக் கோணலாகவே இச்சம்பவங்களை நான் பார்க்கின்றேன். நன்றிகள் !உங்களுடைய தார்மீகக் கோபம் மிகவும் நியாயமானதே. பதிவின் தலைப்பு பெண்களை மட்டும் குற்றவாளிகள் போல் சித்தரிக்கிறது. இது நியாயமல்ல. அதற்காக பெண்கள் சமுதாயத்திடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் இந்தப் பதிவிற்கு "இளம் பெண்களின் கொலைகள்" என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். பதிவிடுவதற்கு சில விநாடிகளுக்கு முன்தான் அதிகமான வாசகர்களை ஈர்க்கலாமென்ற எண்ணத்தில் தலைப்பை மாற்றினேன். அதற்கு காலம் கடந்து வருந்தி என்ன பயன்?

என்னுடைய அடுத்த பதிவில் இந்தக் கண்டனத்திற்கு என்னுடைய விளக்கம் அல்லது சமாதானம் அல்லது பாவமன்னிப்பு - ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளவும் - காணலாம்.


கடைசியாக,  பதிவின் தலைப்பை மாற்றிவிட்டேன்.

இந்த தலைப்பு யாருடைய மனதைப் புண்படுத்தியிருந்தாலும், குறிப்பாக பெண்கள் சமுதாயத்திடம், நான் எனது மனப்பூர்வமான வருத்தத்தை  தெரிவித்துக் கொள்கிறேன்.