பயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 டிசம்பர், 2012

பயமும் ஒழுக்கமும்


மனிதன் ஆதிகாலத்திலிருந்தே பயத்தை அறிந்திருக்கிறான். பயம் ஒரு தற்காப்பு உணர்ச்சி என்று கண்டு கொண்டிருக்கிறான். அவனுடைய வாழ்வில் பல ஆபத்துகளை வெல்ல இந்தப் பயம் தேவைப் பட்டிருக்கிறது.

நெருப்பு, வெள்ளம், காற்று இவைகள் அவனுடைய வாழ்வில் மிகுந்த சேதத்தை விளைவித்தன. ஆகவே அவைகளைக் கண்டு பயப்பட்டான். அவைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிகளைக் கண்டு பிடித்தான். அவன் வாழ்வு நீண்டது.

காலம் மாற மாற, அவன் பயப்படும் பொருள்களும் மாறிக்கோண்டே வந்தன. தனக்குப் புரியாதவைகள் பயத்தை உண்டு பண்ணிவதால் அவைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தான். புரிந்து போனதும் பயமும் விலகி விட்டது.

ஆனால் அன்றும் இன்றும் அவனைப் பயத்துக்குள்ளாக்கும் சில விஷயங்கள் மாறாமலேயே இருக்கின்றன. அதில் ஒன்று இருட்டு. ஏனெனில் இருட்டில் எதிரி ஒளிந்திருந்தால் ஆவனைப் பார்க்க முடிவதில்லை. அந்த எதிரி ஆபத்தைக் கொடுக்க முடியும். ஆகவே மனிதன் இருட்டைக் கண்டு இன்றும் பயப்படுகிறான்.

அடுத்தது, புதிதாக இருப்பவைகளைப் பார்த்து பயந்தான். புது மனிதர்கள், புது இடம், புது சூழ்நிலைகள் இவைகளைக் கண்டு பயந்தான். இந்த பயம் அவனுடைய தற்காப்புக்கு உதவியது.

அவன் நாகரிகமடைந்து சமுதாயமாக மாறிய பிறகு, சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினான். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை சமுதாயம் ஒதுக்கி வைத்தது. மற்றவர்கள் தன்னை மதிப்பதற்காக மனிதன் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டான். இதை ஒருவனின் மனச்சாட்சி என்று கூறினோம். மனச்சாட்சி பிரகாரம் நடப்பவன்தான் மனிதன் என்று ஒரு காலத்தால் இருந்தது.

பிறகு சட்டங்கள் வந்தன. சட்டத்தை இயற்றுபவர்கள், சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் என்று இருவகையான அமைப்புகள் இருக்கின்றன. இந்த இரு அமைப்புகளும் சரியாக இருந்தால்தான் ஒரு சமுதாயம் ஆரோக்யமாக இருக்கும்.

ஆனால் இன்று யாரும் சட்டத்திற்கு பயப்படுவதில்லை. காரணம் சட்டத்தை இயற்றியவனே அதை மதிப்பதில்லை. சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவன் தன்னுடைய இச்சைப்படி அமுல்படுத்துகிறான். அவனை அந்த நிலைக்கு, சட்டம் இயற்றுபவர்கள் தள்ளி விட்டார்கள்.

மக்களின் பிரதிநிதிகள், நாட்டு மக்களுக்கு உதாரண புருஷர்களாக இருக்கவேண்டியவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படித்தான் அந்த நாட்டின் கடைசி குடிமகனும் இருப்பான். அதுதான் இன்று நடக்கிறது.

தனி மனிதனுக்கு மனச்சாட்சி இல்லை, சட்டத்திடம் பயமும் இல்லை. எதனிடமும் பயம் இல்லை. அப்புறம் நாட்டில் எப்படி ஒழுக்கத்தை எதிர் பார்க்க முடியும்?