பாபங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாபங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 அக்டோபர், 2016

நான் ஒரு பாபியானேன்.

                      Image result for punishments in hell in hinduism

நான் நன்றாகத்தான் இருந்தேன். தினம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு, இரண்டு தடவை காப்பி குடித்து விட்டு, பகலில் மூன்று நான்கு மணி நேரம், இரவில் ஒரு ஆறு மணிநேரம் தூங்கி விட்டு, அவ்வப்போது நண்பர்களைப் பார்த்து அளவளாவி விட்டு, வாரம் ஒரு பதிவு எழுதி அன்பர்களைத் திருப்திப் படுத்தி விட்டு நானும் திருப்தியாக இருந்தேன்.

நான் இதுவரை எனக்குத் தெரிந்து யாரையும் கொலை செய்ததில்லை. ஆனால் நான் செய்த உணவைச் சாப்பிட்டு ஒருவர் இறந்திருக்கிறார். அது கொலைக் குற்றத்தில் சேராது என்று நம்புகிறேன். தவிர சில-பல பதிவுகள் அறுவையாகப் போட்டிருக்கிறேன். அதைப் படித்துவிட்டு யாரேனும் தற்கொலை செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

நான்  இப்படியிருக்க, என் சந்தோஷம் அந்தக் கடவுளுக்கே பொறுக்கவில்லை போல் இருக்கிறது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவிலை திருப்பணி செய்கிறோம்  என்று இடித்துப்போட்டு ஆறேழு வருடங்களாக ஒன்றும் செய்யாமல் சும்மா கிடந்தது. திடீரென்று ஒரு மகானுபாவன் தலையிட்டு அந்தக் கோவிலின் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகமும் வைத்து விட்டார்.

என் வீட்டு அம்மணிக்கு அந்தக் கோவில் என்றால் உயிர். கும்பாபிஷேகம் நடக்க யாகசாலைகள் அமைக்கும்போதே அங்கு போய்விடுவார்கள். யாகசாலை அமைத்து ஐந்து காலங்கள் யாகம் நடந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அம்மணிக்கு 24 மணி நேரமும் கோயில் ட்யூட்டிதான். இதில் எனக்கு என்ன தொல்லை என்றால் கோயிலில் ஆன்மீகப் பிரசங்கம் நடக்கிறது, நீங்கள் ஒரு நாளாகிலும் வந்து கேட்கக்கூடாதா ? என்று வசவு வேறு.

சரி, வந்தது வரட்டும் என்று ஒரு நாள் அந்தப் பிரசங்கத்தைக் கேட்டகப் போனேன். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு பக்கத்து அரங்கில் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்கப்போனேன். உபன்யாசகர் அட்டகாசமாக மேக்கப் போட்டுக்கொண்டு கூடவே ஒரு அழகிய நங்கையையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்தப் பொண் பின்பாட்டு பாடுவதற்காம். (அவர்கள் போட்டோ கிடைக்கவில்லை).

அந்தப் பொண்ணு நன்றாகவே பாடியது. அதைக் கேட்பதற்காகவே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். நடு நடுவில் உபன்யாசகரும் அவர் சரக்கை எடுத்து விட்டுக்கொண்டிருந்தார். அவர் கூறியவைகளில் சக்கையை நீக்கி சாரத்தை மட்டும் கொடுக்கிறேன்.

நீங்கள் பிறந்த்தின் நோக்கம் ஆண்டவன் அடைவதே. அப்படி ஆண்டவனை அடைய நீங்கள் புண்ணியம் செய்யவேண்டும். பாப கர்மாக்களை செய்யக் கூடாது. கொலை செய்வதும் திருடுவதும் மட்டுமே பாப காரியங்கள் என்று நீங்கள்  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு.

ஒருவன் தன் முயற்சியால் பாடுபட்டு பணக்காரன் ஆகிறான். அவனைப் பார்த்து அற்பனுக்கு வந்த வாழ்வைப் பார் என்று பொறாமைப் பட்டால் அதுவும் பாப காரியமே.

உன் நண்பணின் பெண் காதல் கல்யாணம் செய்து கொண்டாளா? அவளைப் பற்றி கேலமாகப் பேசினால் அதுவும் பாவமே. யாராவது புருஷன் பெண்டாட்டி சண்டை போட்டுக் கொண்டார்களா, இல்லை பொண்டாட்டி புருஷன் தலையில் அம்மிக்குழவியைப் போட்டாளா என்று ஊரில் நடக்கும் வம்புகளைப் பற்றி நாலு பேர் கூடிப் பேசுகிறீர்களா? இவைகளை எல்லாம் சித்திரகுப்தன் உங்கள் பாபக் கணக்கில் ஏற்றி விடுவான்.

நீங்கள் யமபட்டணம் போனதும் அவன் இந்தக் கணக்குகளையெல்லாம் விலாவாரியாக யமனிடம் விஸ்தாரமாகச் சொல்லுவான். யமன் அவைகளை எல்லாம் கேட்டு விட்டு, சரி, இவனை ஆறு மாதம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் போடுங்கள் என்று தார்ப்பு சொல்லி விடுவான்.

இப்படியாக அவருடைய உபன்யாசம் நடந்தது. வீட்டுக்கு வந்து அன்று படுக்கையில் படுத்தவுடன் அவர் சொல்லிய பாப லிஸ்ட்டுகள் மனதில் ஓடின. நாம் தினமும் இவைகளைத்தானே செய்து வருகிறோம். இவைகளைதானே நாம் பொழுது போக்க உதவுகின்றன. அப்படியானால் நாம் யம பட்டணம் போனால் நம்மை எண்ணைக் கொப்பறையில்தான் போட்டு கொதிக்க வைப்பார்களே?

ஐயோ, கடவுளே, என்னை இப்படி ஒரே நாளில் பாபியாக்கி விட்டாயே, நான் இனி என் செய்வேன் என்று நினைத்துக் கொண்டே
தூங்கி விட்டேன். கனவில் யம கிங்கரர்கள் என்னை எண்ணைக் கொப்பறையில் போட்டு வேக வைப்பதாகவே கனவுகள் வந்தன.

தூங்கி எழுந்ததும் அந்த உபன்யாசகரிடமே போய் இந்தப் பாவல்களுக்கு என்ன விமோசனம் என்று கேட்டு வரவேண்டும் என்று முடிவு பண்ணி விட்டுத் திரும்பவும் தூங்கினேன்.

இந்தப் பாபங்களுக்கு விமோசனம் உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தவறாமல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.