பின்னூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பின்னூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜனவரி, 2015

நான் விடுதலை ஆகிறேன்.

                                       

பதிவுலகம் என்பது ஒரு மாயா உலகம் என்பதை நான் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறேன். இந்த பதிவுலகில் நடக்கும் எதுவும் நம் நிஜ உலக வாழ்வை பாதிக்கப் போவதில்லை. பதிவுலக சந்திப்புகள் நடக்கும். அங்கு பதிவர்கள் சந்தித்து அளவளாவுவார்கள். சில பல தொடர்புகளும் சிநேகங்களும் தொடரும். இதைத் தவிர பெரிய மாற்றங்கள் நம் வாழ்வில் ஏற்படப்போவதில்லை.

நான் பதிவுலகம் புகுந்ததே என் மூளையைத் துருப்பிடிக்காமல் வைத்துக் கொள்வதற்காகவே. என் பதிவுகளை பலர் படிக்கிறார்கள் என்பது மனதிற்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தாலும் அது என் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக உணர்கிறேன். பாராட்டுகளும் எதிர்ப்புகளும் எப்படியும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை என்னால் மறுக்க முடியவில்லை.

முக்கியமாக இந்த தாக்கம் என்னுடைய கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கின்றது. நான் நினைப்பதை முழுவதுமாக வெளிப்படுத்த இயலவில்லை. எதிர்ப்புகளை எண்ணி அஞ்சுகிறீர்களா என்று கேட்கலாம். எதிர்ப்புகள்தான் ஒருவனுக்கு டானிக். நான் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை. பாராட்டுகளைக் கண்டுதான் அஞ்சுகிறேன்.

பாராட்டுகளை நான் வாங்கும் கடன்களாகக் கருதுகிறேன். கடன் பட்டார் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பன் கூறியது போல் அவ்வப்போது எனக்கு கலக்கம் வருகிறது. இந்தப் பாராட்டுகள் என் மேல் ஒரு சுமையை ஏற்றி வைக்கின்றன. அதை இறக்கிவைக்க நான் பதில் பாராட்டுகள் செய்யவேண்டி வருகிறது. அது என்னால் முடியவில்லை.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்ற வள்ளுவர் வாக்கின்படி நான் என் நிஜ வாழ்வில் பல பொறுப்புகளிலிருந்து விலகி நிற்கிறேன். அத்தியாவசியக் கடமைகள் தவிர வேறு கடமைகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் என் வாழ்வை எளிமையாக வைத்திருக்கிறேன். பதிவுலகிலும் அதே எளிமையைக் கொண்டு வர விரும்புகிறேன்.

அதனால் இன்றுடன் என் பதிவில் இருக்கும் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். இதுகாறும் என் பதிவுகளில் பாராட்டியும் எதிர்கருத்துகளைக் கூறியும் என்னை உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செயல் மூலம் நான் என் கருத்துக்களை இன்னும் சுதந்திரமாக வெளியிட முடியும் என்று நம்புகிறேன்.

நன்றி, வணக்கம்.

திங்கள், 19 நவம்பர், 2012

பின்னூட்டம் போட இடைஞ்சல்கள்

ஒரு பதிவப் படிச்சா நல்லா இருந்தா, பின்னூட்டம் போடலாமுன்னு விரும்புகிறோம்.

முக்கால்வாசி பதிவுகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. பின்னூட்டம் போட்டமா, பப்ளிஷ் பட்டனை அமுக்கினமா, வெளியில வந்தமான்னு இருக்குது. இந்த மாதிரி பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது ஒரு சுகமான அனுபவம். அந்தப் பதிவர் கமென்ட் மாடரேஷன் வச்சிருந்தா வச்சுக்கட்டும். பின்னூட்டம் போடுவதில் அது ஒரு பிரச்சினை இல்லை.

சில பதிவுகளில் IAS  பரீட்சை மாதிரி இந்தப் படத்திலுள்ள எழுத்துகளை இந்தக் கட்டத்தினுள் எழுது என்று வைத்திருக்கிறார்கள். இது ஏன் என்று என்னுடைய களிமண் மூளைக்குப் புரியவில்லை. தங்களுடைய பதிவிற்குப் பின்னூட்டம் வேண்டாமென்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

அப்புறம் இந்த வேர்டுபிரஸ் பதிவுகளுக்குள் போனால் பின்னூட்டம் போடுவதற்கு உங்கள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கிறது. அந்த அளவு பொறுமை எனக்கு இல்லை. என்னால் முடியவில்லை.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். விடிகிற அப்போ விடியட்டும்.