பிரபஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய பிரபஞ்ச ரகசியம்


அதென்ன பெரிய சிதம்பர ரகசியமா? என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். சிதம்பரம் கோவிலில் சிதம்பர ரகசியம் காட்டுகிறேன் என்று சிவாச்சாரியார் உங்களிடம் சொன்னால் நூறு ரூபாய் அவுட் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களைக் கூட்டிக்கொண்டுபோய் ஒரு திரையை விலக்கி ஒரு அறையைக் காட்டுவார்.

"சிதம்பர ரகசியம் பாருங்கோ" என்று கூவுவார். அந்த அறையில் மேற்கூரை இல்லை. ஆகாயம்தான் தெரியும்.  கூடவந்த அனைவரும் கும்பிடுவதைப் பார்த்து நீங்களும் அப்படியே கும்பிட்டு விட்டு ஒன்றும் புரியாமல் வந்து விடுவீர்கள். இது என்ன ரகசியம் என்று கேட்டு உங்கள் அறியாமையை வெளியில் காட்ட வெட்கம். அதனால் பேசாமல் ஊருக்கு வந்து விடுவீர்கள்.

அது ஒண்ணும் ரகசியமே அல்ல. சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். அதாவது சிவன் ஆகாயமாக இருக்கிறான் என்பது ஐதீகம். அதைக் காட்டுமுகமாகத்தான் வெற்றறையைக் காண்பிக்கிறார்கள்.

அது போல பிரபஞ்ச ரகசியம் என்று ஒன்றும் இல்லை. பெரிய உண்மைகளை ரகசியம் என்று கூறுவது மரபு. பிரபஞ்சம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

எந்த தத்துவம் அல்லது பிரச்சினையானாலும் அதைப் புரிந்து கொள்ள தெளிவான சிந்தனை இருக்கவேண்டியது அவசியம். அதற்கு அந்தப் பிச்சினையை அல்லது தத்துவத்தை எளிமைப் படுத்தி, பிறகு அணுக வேண்டும். எடுத்தவுடன் முழுமையாகப் புரிந்து கொள்ள முயன்றால் சிந்தனைக் குழப்பம்தான் ஏற்படும்.

இரண்டாவது, நமக்குத் தெரிந்ததை வைத்துத்தான் தெரியாததைப் புரிந்து கொள்ள முடியும். நான்கு குருடர்கள் யானையைப் பார்த்த கதை எல்லோருக்கும் தெரியுமல்லவா? இதை வைத்து முதலில் இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது, எப்படி உண்டாகியது என்ற இரண்டு சமாசாரங்களை மட்டும் சிந்திப்போம்.

நம் பூமி இருப்பது சூரிய மண்டலம். அதாவது சூரியனை மையமாகக் கொண்டு
பல கிரகங்களும் உப கிரகங்களும் இருப்பது சூரிய மண்டலம். சூரியன் ஒரு நட்சத்திரம் என்று வானவியலில் கூறப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் இதுபோல் ஆயிரக்கணக்கான (இன்னும் முழுதாக கணக்கு எடுத்து முடியவில்லை) நட்சத்திரங்கள் இருப்பதாக வானவியலார் சொல்கிறார்கள்.

நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி புறப்பட்டதிலிருந்து பூமிக்கு வந்து சேர 4.2 ஒளி ஆண்டுகள் ஆகிறதாம். அதாவது ஒளியின் வேகம், விநாடிக்கு 1,86,000 மைல். ஏறக்குறைய மூன்று லட்சம் கி.மீ.  பூமியின் சுற்றளவே சுமார் 36000 கி.மீ. தான்.

முதலில் இதைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒளி ஒரு செகன்ட்டில் மூன்று லட்சம் கி.மீ. செல்லும். 4.2 வருடங்களுக்கு எவ்வளவு செகன்ட்டுகள். அவ்வளவு செகட்ன்டுகளை மூன்று லட்சத்தினால் பெருக்கினால் எவ்வளவு வருகிறது என்று மனதால் யோசிக்க முடியாது. கம்ப்யூட்டரில் வேண்டுமானால் போடலாம். அப்படிப்போட்டதில் வந்த விடை - மூன்று கோடி லட்சம் கி.மீ. இதை கற்பனை செய்து பார்ப்பதே கடினம்.

ஒருக்கால் நாம் அந்த நட்சத்திரத்திற்குப் போக முடிந்து, அங்கிருந்து அதே திசையில் பார்த்தால் அங்கும் ஒரு நட்சத்திரம் இருக்கும். அது எவ்வளவு தூரத்தில் இருக்கும்? இப்படியே கற்பனை செய்து பாருங்கள். பிரபஞ்சத்தில் இப்படி கோடானுகோடி நட்சத்திரங்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அப்போது இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு தூரம் வியாபித்திருக்கும்?

 இது எங்கு முடியும்? அப்படி முடிந்தால் அதற்கு அப்பால் என்ன இருக்கும்? இது ஒரு முடிவில்லாத கற்பனை. ஆகவே பிரபஞ்சம் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பெரிதானது என்பது புரிந்தால், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குப் போதும்.

அடுத்த கேள்வி: இதை யார் உண்டு பண்ணினார்கள்? கேள்வி என்னமோ ரொம்ப லாஜிக்கலாத்தான் இருக்கிகிறது. ஆனால் பதில் சொல்வது அவரவர்கள் கற்பனைக்குத் தக்கபடி இருக்கும். நாம் வாழும் உலகில் நடைமுறையில் பல செயல்களைக் காண்கின்றோம். அவை எப்படி  ஏற்படுகின்றன என்று கண்டு, கேட்டு, விசாரித்து அறிந்திருக்கிறோம். அதன்படி ஒரு பொருள் இருந்தால் அதற்கு ஒரு உற்பத்தியாளனும்/படைப்பாளியும் இருக்கவேண்டும் என்று நம்புகிறோம். நண்பர் ஜெயதேவ் தாஸ் சொல்வது போல், ஒரு சட்டி இருந்தால் அதைச் செய்த குயவனும் இருந்தே ஆகவேண்டும். இட்டிலி இருந்தால் அதைச் சுட்டவர் இருந்தே ஆகவேண்டும்.

இந்த லாஜிக் பிரகாரம் எந்தப் பொருளும் ஒரு படைப்பவன் இல்லாமல் உண்டாவதில்லை. ஆகவே இந்தப் பிரபஞ்சமும் யாரோ ஒருவனால்தான் படைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த விவாதத்தில் ஏதாவது தவறு தெரிகிறதா? இல்லையல்லவா?

இங்குதான் கருத்து வேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பாளி யார்? இதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அப்படி ஒரு படைப்பாளி இருந்தால், அவர் எதைக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார்? குயவன் சட்டியை உருவாக்கினான் என்றால் அவன் களிமண்ணிலிருந்து சட்டியை உருவாக்குகிறான் என்ற அறிவோம். இந்த லாஜிக் பிரகாரம் எப்படி குயவன் களிமண்ணிலிருந்து சட்டியை உருவாக்குகிறானோ அப்படி இந்தப் பிரபஞ்சத்தை அந்தப் பெயர் தெரியாத ஆள் எதை வைத்து படைத்தார்?

அப்படி ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன்பு என்ன இருந்தது? அந்தப் படைப்பாளி எங்கிருந்து உற்பத்தியானார்?

எனக்கே தலை சுற்றுகிறது. ஆகவே இது போன்று, "சிந்தனையாளர்களுக்கு" என்று வரும் பதிவுகளைப் படிக்காதீர்கள். கீழ்ப்பாக்கத்தில் நிறைய சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இந்த சிந்திக்கும் வேலையை அவர்களுக்கு விட்டுவிடுங்கள். அவர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சிந்தித்து பதில் சொல்வார்கள்.அது வரையில் நாம் காத்திருப்போம்.