புதுக்கார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுக்கார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 மார்ச், 2015

விபத்துக்குள்ளான புதுக் கார்

                         
                         
சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு விபத்துச் செய்தி படித்தேன். மதுரைப் பக்கத்தில் ஒரு ஊரிலிருந்து ஒரு குடும்பத்தினர் தாங்கள் வாங்கியுள்ள புதுக்காரில் திருச்செந்தூர் போயிருக்கிறார்கள். போகும் வழியிலேயே காரின் ஒரு டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளாகி, அதில் சென்றவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள்.

நானும் சமீபத்தில் ஒரு புதுக் கார் வாங்கியிருப்பதால் இந்த விபத்து புதுக்காரில் எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். புதுக்காரில் டயர்கள் புதிதாகத்தானே இருக்கும். அதிலும் அந்தக் காரில் இன்னும் நெம்பர் பிளேட் கூடப் பொருத்தவில்லை. இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது என் மூளையில் ஒரு பொறி தட்டியது.

முன்பெல்லாம் கார் வாங்கும்போது பெட்ரோல் டேங்கில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாகத்தான் பெட்ரோல் போடுவார்கள்.  RTO ஆபீசுக்குப் போய்வரும் அளவே பெட்ரொல் போடுவார்கள். நாம் காரை டெலிவரி எடுக்கும்போது, பக்த்தில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று பலமுறை சொல்லி அனுப்புவார்கள். ஏனென்றால் அவ்வளவுதான் பெட்ரோல் காரில் இருக்கும்.

இப்போது பரவாயில்லை. ஒரு ஐந்து லிட்டர் பெட்ரோல் போட்டுத் தருகிறார்கள். நம் காசுதான். ஏதோ பரவாயில்லை. கோவிலுக்குப் போய்விட்டு வீடு வரைக்கும் பயமில்லாமல் போய்க் கொள்ளலாம். நானும் அப்படியே விட்டுக்குச் சென்று விட்டு அடுத்த நாள் நான் பெட்ரோல் போடும் வழக்கமான பங்கிற்குச் சென்று பெட்ரோல் போட்டேன்.

நான் வழக்கமாக பெட்ரோல் போட்டவுடன் காரின் டயர்களில் காற்றின் அழுத்தத்தையும் சோதிப்பது வழக்கம். அப்படிச் சோதித்தபோது நான் பார்த்தது என்னவென்றால், காரின் டயர்களில் காற்றின் அழுத்தம் 60 பவுண்டுக்குப் பக்கமாக இருந்தது. வழக்கமாக டயர்களில் காற்றின் அழுத்தம் 30 பவுண்டுகள் வைப்பதுதான் வழக்கம். பெரிய கார்களுக்குக் கூட 35 பவுண்டுகளுக்கு மேல் வைக்க மாட்டார்கள்.

நான் என் காரின் டயர்களுக்கு 30 பவுண்ட் அழுத்தம் வைத்து விட்டுக் கிளம்பினேன். ஏன் கம்பெனிக்காரர்கள் இவ்வளவு அதிகமான காற்று அழுத்தம் வைத்திருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே வந்தபோது ஒரு கருத்து தோன்றியது. கார் தயாரிக்கும் இடத்தில் கார் முழுவதுமாகத் தயார் பண்ணி முடித்து கார் விநியோகம் செய்யும் வியாபாரக் கம்பெனிகளுக்குப் போக ஓரிரு மாதங்கள் ஆகலாம். அங்கும் இந்தக் கார் வியாபாரமாகி உபயோகிப்பவர் கைக்குப் போக இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம்.

இந்த காலக்கெடுவில் கார் சும்மாதான் இருக்கும். ஆனால் கார் டயர்களில் காற்று இல்லாமல் இருந்தால் காரின் கனம் டயரின் மேல் தாக்கி டயர்கள் சேதமடையும் வாய்ப்புகள் உண்டு. அதனால் கொஞ்சம் அதிகமாக காற்று அழுத்தம் வைத்து விட்டால் இந்த மாதிரி சேதம் தவிர்க்கப்படும். அதனால் இப்படி அதிக காற்று அழுத்தத்துடன் புதுக் கார்கள் அனுப்ப ப்படுகின்றன என்று யூகித்தேன்.

புதுக் கார்கள் வாங்குபவர்கள் எப்படியும் காற்று அழுத்தத்தை  சரி பார்ப்பார்கள் என்பது கார் உற்பத்தியாளர்களின் கணிப்பு. ஆனால் இந்த விபத்துக்குள்ளான காரை வாங்கினவர்கள் இந்த வேலை செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். கார் ஓடும்போது ரோடுகளில் உராய்வதால் டயர்கள் வெப்பமடைந்து டயர்களில் இருக்கும் காற்றின் அழுத்தம் அதிகமாகும். சாதாரண அழுத்தம் இருக்கும்போது இப்படி வெப்பத்தினால் அழுத்தம் அதிகமானாலும் டயர்  தாங்கிக்கொள்ளும். ஆனால் முதலிலேயே அதிக அழுத்தம் கொண்ட டயர்களில் இப்படி கார் ஓடும்போது மிக அதிகமான அழுத்தம்  உருவாகும்.

அது தவிர இந்தக் காரை வேகமாகவும் ஓட்டியிருக்கலாம். அப்போது டயர்கள் மிக சீக்கிரமாக அதிக வெப்பநிலை அடையும். இந்த அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட அதிக காற்று அழுத்தத்தை அந்த டயர்கள் தாங்கவில்லை. இதனால் அந்த டயர் வெடித்து விட்டது. வேகமாகப் போகும் காரில் ஒரு டயர், அதுவும் முன்பக்க டயர் வெடித்தால் விளைவு என்னவாக இருக்கும் என்று கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும்.

இப்படித்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதை உடனடியாக உறுதி செய்ய வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்தக் காரில் பயணம் செய்த எல்லோரும் யமபட்டணத்தில் இருக்கிறார்கள். நான் அங்கு போகும்போது விசாரித்து விபரம் அறிந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

அது வரை புதுக் கார் வாங்குபவர்கள் டயர்களின் காற்று அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.