புராணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புராணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

ஒரு நாடு எப்படி முன்னேறும்?


ஒரு நாட்டின் முன்னேற்றம் எப்படி நிகழும்? ஏன் இந்திய நாடு முன்னேற்றமடைவதில் இவ்வளவு இடர்ப்பாடுகள்? நம் நாடு சுதந்திர நாடாகி ஏறக்குறைய 65 ஆண்டுகள் ஆகியும் மற்ற நாடுகளின் முன்னேற்றத்தை அடைய முடியவில்லையே, ஏன்?

இந்த மாதிரி கேள்விகள் அடிக்கடி என் மூளையில் தூக்கம் வராத இரவுகளில் பிராண்டுவதுண்டு. நம் நாட்டில் பல துறைகளிலும் திறமை மிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் நம் நாடு வல்லரசாவதற்குத் தேவையான பல திட்டங்களைத் தயார் செய்ய முடியும். ஆனால் அவைகளை செயல்படுத்துவதற்குத் தேவையான Political Will இல்லை. ஏன்? ஆதிகாலத்திலிருந்தே நாம் கர்மா, கர்ம வினை, பாவ புண்ணியம், மறுபிறவி ஆகியவைகளில் ஆதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஒருவன் ஒரு தொழில் செய்து நஷ்டமடைந்தால் அது அவன் விதி என்று வெகு சுலபமாக கூறி ஆறுதல் அடைந்து விடுகிறோம்.

அவன் அந்த தொழிலை எவ்வாறு நடத்தினான், காரணம் இல்லாமல் ஒரு தொழில் நஷ்டமடையாதே, அவன் தொழில் ஏன் நஷ்டமடைந்தது? என்று ஒருவரும் சிந்திப்பதில்லை. நல்ல நிபுணர்களைக் கொண்டு அந்த சம்பவத்தை ஆராய்வதில்லை. என் தலையெழுத்து என்று விதியின் பேரில் பழி போட்டுவிட்டு தூங்குவான்.

இந்த மக்களில் சிலர் புத்தி கூர்மையுள்ளவர்கள். அவர்கள் கைதேர்ந்த சுயநலவாதிகள். மற்றவர்களை எப்படி கொள்ளையடித்து நாம் மட்டும் வசதியாக வாழலாம் என்று திட்டமிடுவதில் வல்லவர்கள்.

ஏன் அப்படி சிலர் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் எனக்கு நம் புராணக் கதைகள்தான் நினைவிற்கு வருகிறது. அவைகளில் பல நியாயமற்ற செயல்கள் தடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவைகளை நியாயப் படுத்தியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு கதை. தேவர்களின் பலம் குறைந்து விட்டது. அவர்களின் மந்திரி யோசனை சொல்லுகிறார். நீங்கள் பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும், அதை நீங்கள் பருகினால் மீண்டும் நீங்கள் பலசாலியாகிவிடுவீர்கள் என்கிறார். திட்டத்தில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்திய விதத்தைப் பாருங்கள்.

தேவர்களுக்கு தாங்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. கூட்டுச் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். யாரைக் கூட்டுச் சேர்க்கலாம் என்று யோசனை செய்யும்போது அசுரர்களின் நினைவு அவர்களுக்கு வருகிறது.

ஆனால் அசுரர்கள் அவர்களின் பரம்பரை எதிரிகள். அவர்களை அழிப்பதற்காகத்தான் தேவர்கள் தாங்கள் பலசாலிகளாக மாறவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் தாங்களே தனியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. அப்போது அவர்களின் மந்திரி சொல்லுகிறார். ஆபத்திற்கு பாவமில்லை. நாங்கள் அசுரர்களிடம் போய் நைசாகப் பேசி கூட்டுக்கு ஒப்புக்கொள்ள வையுங்கள் என்கிறார்.


அப்படி கூட்டு வைத்தால் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுக்கவேண்டுமே, அப்படி அவர்களும் அமிர்தம் சாப்பிட்டால் அவர்கள் நம்மை விட பலசாலியாய் விடுவார்களே, அப்புறம் நாம் எந்தக் காலத்தில் அவர்களை ஜெயிப்பது? என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள். அப்போது அவர்கள் மந்திரி சொல்லுகிறார். முதலில் அமிர்தத்தை எடுங்கள், அப்புறம் அதை அசுரர்களுக்கு கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்று நான் யோசித்து வைக்கிறேன் என்று சொல்கிறார்.


மக்களே, இங்கு என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். ஒரு திட்டம் தீட்டும்போதே, கூட்டாளியை ஏமாற்றலாம் என்று திட்டம் போடுகிறார்கள். மீதி கதை உங்களுக்குத் தெரியும்.

இந்தக் கதையை படித்து வளரும் ஒருவன் இந்த உலகில் எப்படி நியாயமாக நடந்துகொள்வான்? அதுதான் இந்தியாவில் இப்போது நடக்கிறது.