பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 மார்ச், 2011

பெண்களின் எழுத்துக்கள்


காப்பி குடிக்க கத்துக்கொடுத்த 
டாக்டர் அய்யாவே.
தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வாருங்கள். கருத்தினையும் பகிருங்கள்..
   க்டர். Dr PKandaswamyPhD

மொதல்ல நன்றி சொல்லிக்கொள்கிறேன். அப்புறம் மறந்து போய்விடும்.


காப்பி குடிக்க கத்துக் கொடுத்ததிற்கே இந்த பரிசு என்றால் இன்னும் இந்த வரிசையில் வர இருக்கும் மற்ற பதிவுகளுக்கு என்னென்ன பரிசுகள் வரப்போகுதோ என்கிற பயம் வந்து விட்டது. “முட்ட நனைந்த பின் முக்காடு எதற்கு” என்று ஒரு பழமொழி உண்டு. பதிவுலகத்துக்குள்ள வந்தாச்சு, இனி என்ன வந்தாலும் பார்த்துட வேண்டியதுதான்.
எல்லோரையும் கொஞ்சம் மொக்கை போட்டு வறுத்தெடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும். அப்பறம் ஒருத்தரும் நம்ம வழிக்கே வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

 (அன்புடன் மலிக்காவுக்கு - உங்களைச் சொல்றதா நெனச்சுக்காதீங்க, அப்படி நெனச்சீங்கன்னா, நான் ஒரு மொழக்…… தேடீடுவனுங்க)

உடல், மனம், புத்தி, சொல், செயல், இவையெல்லாம் உயிரோடு இருக்கும் மனிதனின் அங்கங்கள். மனம் என்பது எண்ணல்களின் தொகுப்பு. எண்ணங்கள் சொல்லாக வெளிப்படுகின்றன. இந்த வெளிப்படுதல் பேச்சாகவும் இருக்கலாம், எழுத்தாகவும் இருக்கலாம். அப்பாடி, ஒரு வழியா சப்ஜெக்ட்டுக்கு வந்தாச்சு.


பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள ஒற்றுமை, இரண்டும் மனதின் எண்ணங்களை வெளிப்படுத்தலேயாகும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், பேச்சு ஒரு முறை பேசிவிட்டால் அப்புறம் திரும்ப எடுத்துக் கொள்ளமுடியாது. அரசியல் வாதிகள் வேண்டுமென்றால் “நான் அப்படிச் சொல்லவேயில்லை, இந்தப் பத்திரிக்கைக் காரர்கள் எதிர்க் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு என் பேச்சை வேண்டுமென்றே திரித்துப் போட்டுவிட்டார்கள்” என்று நாக்கூசாமல் சொல்லி விடலாம். ஆனால் நம்மைப் போன்ற சாதாரண குடி மக்கள் அந்த மாதிரி தப்பிக்க முடியாது. ஆகவே பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக (டாஸ்மாக்கில் தவிர) இருக்கவேண்டும். 


ஆனால் எழுதுவதில் நாம் ஜாலங்கள் செய்யலாம். எழுதினதை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். குறுக்கலாம், நீட்டலாம், அடிக்கலாம், பெருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக யாராவது மேல் கோபம் வந்தால் அவரைப்பற்றி கன்னாபின்னாவென்று திட்டி எழுதி, பிறகு கோபம் தணிந்தவுடன் அதைக் கிழித்து எறிந்து விடலாம். இப்படி பல சௌகரியங்கள் இருக்கின்றன.


அதுவும் பதிவுலகில் உங்களை யாரென்றே அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ, யாராக இருந்தாலும் சரி, உங்கள் நிஜ அடையாளத்த காட்ட வேண்டிய அவசியம் இல்லை. விவரம் போறாத சிலர்தான், தாங்கள் ஆணா, பெண்ணா, உண்மைப் பெயர் இவற்றைக்கூறி வீணான வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். இல்லை, நான் காந்தியின் வம்சாவளியில் வந்தவன், வானமே இடிந்து விழுந்தாலும் சத்தியத்தின் பாதையிலிருந்து விலக மாட்டேன் என்றால், அதன் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.
ஆணானாலும் பெண்ணானாலும் விதி இதுதான். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பொது வெளிக்கு வந்து விட்டால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் தைரியமும் மனப்பக்குவமும் வேண்டும். ரத்த பூமியில் பயந்தாங் கொள்ளிகளுக்கு இடம் இல்லை. ரத்தத்தைப் பார்த்து மயக்கம் போடுபவர்களுக்கு இங்கு என்ன வேலை? 


பெண்கள் போற்றத் தகுந்தவர்கள். அவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டியது அவசியம். ஆனால் அவர்கள் பெண்கள் என்பதாலேயே அவர்களுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் அதை எதிர்பார்க்கக் கூடாது. ஆகவே பதிவுலகில் எல்லோரும் சமம். மூக்கில் குத்து வாங்க ஆண்கள் தயார் என்றால் பெண்களும் அதற்கு சளைக்கக்கூடாது.


நான் பக்கா சுயநலவாதி. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு பரோபகாரி (இளிச்சவாயன்) இல்லை. ஆகவே இந்த தொடர் பதிவுக்கு ஒருவரையும் அழைக்கப் போவதில்லை. அவர்களாகவே தொடர் பதிவு என்று போட்டால் நான் பொறுப்பில்லை.