பேங்க் கணக்குகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேங்க் கணக்குகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 பிப்ரவரி, 2014

உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி? - பாகம் 5


உங்கள் கணக்கிலிருந்துதான் நீங்கள் பணம் எடுக்க வேண்டும்.  அடுத்தவர் கணக்கிலிருந்து நீங்கள் பணம் எடுக்கக் கூடாது. அது தப்பு. சாமி கண்ணைக் குத்திடும்.

பேங்கில் நீங்கள் தொடங்கியிருக்கும் சேமிப்புக் கணக்கு ஒரு வசதிதானே தவிர அது பணங்காய்ச்சி மரமல்ல. கையில் பணம் அதிகமாக இருந்தால் வீண் செலவு செய்வோம். அதை ஓரளவு கட்டுப்படுத்த சேமிப்புக் கணக்குகள் உதவும். ஆனால் சேமிக்கவேண்டும் என்ற அடிப்படை உந்துதல் இல்லாவிட்டால் சேமிப்புக் கணக்கினால் பயன் ஏதுமில்லை.

ஒருவனுடைய மாத வருமானத்தில் குறைந்தது பத்து சதம் சேமிக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் தேவைப்படும்போது கை கொடுக்கும். இப்போது பல தொழிற்சாலைகள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிக் கணக்கிலேயே செலுத்துகின்றனர். இது அவர்களின் சேமிப்பு வழக்கத்தை ஊக்கப்படுத்த உதவும். ஆனால் பெரும்பாலானோர் இந்த வசதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்.

இப்படி சேர்த்த அல்லது சேர்க்கப்பட்ட ஊதியத் தொகை அல்லது சேமிப்புத் தொகையை எப்படி எடுப்பது? பேங்கில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இது பற்றி நன்கு அறிந்திருப்பது அவசியம்.

1. சாதாரண முறை:

பேங்கில் போடப்படும் தங்கள் சம்பளத்தை பேங்கில் இருந்து எடுப்பதை மட்டும் செய்யும் நபர்களுக்கு இந்த முறைதான் உகந்தது. அதற்கு பேங்கில் கிடைக்கும் "வித்டிராயல் ஸ்லிப்" எனப்படும் பணம் எடுக்கும் படிவத்தை உபயோகப்படுத்த வேண்டும். இது மிகவும் எளிமையான படிவம். ஆனால் இதை பூர்த்தி செய்யக்கூடத் தெரியாதவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்றே சில பேங்குகளில் ஒரு ஊழியரை நியமித்திருப்பார்கள். அவர்களிடம் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்து அல்லது கைநாட்டு வைத்து கவுன்டரில் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்தப்படிவத்துடன் பேங்க் பாஸ்புக்கையும் அவசியம் கொடுக்கவேண்டும். பாஸ்புக்கில் ஒட்டப்பட்டுள்ள புகைப் படத்துடன் உங்கள் உருவத்தை ஒப்பிட்டுப் பார்த்து பிறகே பணம் கொடுப்பார்க்ள.

இந்தப் படிவத்தின் மூலம் பணம் எடுக்க யார் கணக்கு வைத்திருக்கிறார்களோ அவர்களேதான் பேங்கிற்கு நேரில் செல்லவேண்டும். அடுத்தவர் இந்த படிவத்தின் மூலம் பணம் எடுக்க முடியாது. ஒரு விதி விலக்கு. பேங்கில் பணி புரிபவர்கள் யாராவது நேர்மையற்றவர்களாக இருந்து விட்டால், சில சமயம் நீண்ட காலமாக பணப் பரிவர்த்தனை நடக்காத கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவது உண்டு. ஆனால் இது மிகவும் அபூர்வம். ஆனாலும் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை நீண்ட காலம் பரிவர்த்தனை இல்லாமல் வைப்பது கூடாது. அப்படி வைத்திருந்தால் பல பேங்குகள் அபராதம் கூட விதிக்கிறார்கள்.

2. செக் மூலம் பணம் எடுப்பது.

பேங்கில் கணக்கு ஆரம்பிக்கும்போதே செக் புக் வேண்டுமென்றால் கொடுப்பார்கள். ஆனால் இத்தகைய கணக்குகளில் குறைந்த இருப்புத் தொகை கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அதுவும் தவிர ஒரு 10 செக் கொண்ட ஒரு செக் புத்தகத்திற்கு ஏறக்குறைய 30 ரூபாய் பிடித்துக்கொள்வார்கள்.

அந்தக் காலத்தில் அதாவது நான் இளைஞனாக இருந்தபோது ஒரு வெள்ளைக் காகிதத்தில் "இந்தக் காகிதத்தைக் கொண்டு வரும் நபருக்கு பத்தாயிரம் ரூபாய் என்னுடைய கணக்கில் இருந்து கொடுக்கவும் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தனுப்பினால் பணம் கொடுத்து விடுவார்கள். அது மக்கள் நாணயமாகவும் அரசு நேர்மையாகவும் இருந்து மாதம் மும்மாரி பெய்த காலம்.

இப்போது செக்குகள் மிகவும் முன்னேற்றமடைந்து "சிடிஎஸ்" செக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து பேங்க் செக்குகளும் ஒரே மாதிரி சைஸ், மற்றும் விவரங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். இந்த வகை செக்குகளில் எந்த விதமான அடித்தல்களும் திருத்தல்களும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் செக் பாஸ் ஆகாது. உங்களுக்கு 100 ரூபார் தண்டம். நீங்கள் செக் கொடுத்தவருக்கும் 100 ரூபாய் தண்டம். தவிர செக்கின் விலை 3 ரூபாயும் தண்டம்.

செக்குகள் மூலம் நீங்கள் அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கலாம். செக் எழுதுவது என்பது ஒரு கலை. இதை நன்றாக கற்றுக்கொண்டுதான் செக்கை உபயோகிக்க ஆரம்பிக்கவேண்டும். செக் கணக்கு உள்ளவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய சில ஜாக்கிரதைக் குறிப்புகள்.

1. செக் புஸ்தகத்தில் உங்கள் மாதிரிக் கையெழுத்தைப் போட்டு வைக்கவேண்டாம்.

2. செக் புஸ்தகம் எப்போதும் உங்கள் வசம் பூட்டுப்போட்ட பெட்டிகளில் வைத்திருக்கவேண்டும்.

3. நிரப்பப் படாத செக்குகளை எக்காரணம் கொண்டும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. (பொண்டாட்டியாயிருந்தாலும் சரி வைப்பாட்டியாயிருந்தாலும் சரி)

4. வெற்றுச் செக்கில் கையெழுத்து மட்டும் போட்டு வைக்கக் கூடாது.

5. முன்பின் தெரியாதவர்கள் பணம் கொடுத்து உங்கள் செக்கைக் கேட்டால் கொடுக்கக் கூடாது.

6. உங்கள் கணக்கு எண். கணக்கில் உள்ள இருப்புத் தொகை இவைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

இப்படியெல்லாம் இருந்தீர்களானால் உங்கள் பணத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இல்லாவிடில் யாரோ அனுபவிப்பார்கள். பட்டினத்தார் பாடலை நினைவு கொள்ளவும்.

பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைக்கும் பாவிகாள் கூடு விட்டிங்கு உயிர்தான் போனபின் யாரே அனுபவிப்பார் அந்தப் பணம்.

திங்கள், 7 நவம்பர், 2011

பேயை மேய்ப்பது எப்படி?


பணம் என்பது ஒரு பேய் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். ஆனாலும் அந்தப் பேயுடன் வாழ்ந்தே ஆகவேண்டும். வேறு வழி - இந்த உலகை விட்டுப் போய்விடுவதுதான். அது நம் கையில் இல்லை. ஆகையால் அது வரை அந்தப் பேயை எப்படி கட்டி மேய்ப்பது என்று பார்ப்போம்.

தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு குறிப்பாக, வரிசை எண்ணுடன் கொடுத்திருக்கிறேன். மூத்த குடிமக்களுக்கு என்று இருந்தாலும் இளைய தலைமுறையும்இவைகளைக் கடைப்பிடிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

1. மூத்த குடிமக்களுக்கு பேங்க் அக்கவுன்ட் இன்றியமையாதது. (அதற்கு முன் பணம் இன்றியமையாதது !)

2. முடிந்த வரை வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பேங்குகளில் கணக்குகளை ஆரம்பிக்கவும்.

3. இரண்டு பேங்குகளில் கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

4. ஒரு அக்கவுன்டில் செக் புக், ஏடிஎம் கார்டு, மொபைல் அலெர்ட், இன்டர்நெட் வசதி, இப்படி என்னென்ன கருமாந்திரங்கள் இருக்கோ, அத்தனையையும் வைத்துக்கொள்ளுங்கள்.

5. ஆனால் பணம் மட்டும் அளவாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மொத்தப் பணத்தில் 10% மட்டும் இங்கே இருக்கட்டும்.

6. இன்னொரு பேங்கில் கணக்கு ஆரம்பித்து விடுங்கள். செக் புக், ஏடிஎம் கார்டு, இன்டர்நெட் பேங்கிங்க், மொபைல் அலெர்ட் இது மாதிரி எந்த ஒரு கண்றாவி வசதியையும் பெற்றுக்கொள்ளாதீர்கள். நாமினேஷன் மட்டும் உங்கள் மனைவி பெயரில் இருக்கட்டும்.

7. பேங்கை இரண்டு நாட்கள் நோட்டம் போடுங்கள். பாங்க் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். வித்டிராயல் பார்ம்கள் அங்கே டேபிளில் இறைந்து கிடக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அந்தப் பேங்கை மறந்து விடுங்கள்.

8. அக்கவுன்ட் பாஸ்புக் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள். பாஸ் புக்கை முடிந்தவரை யார் கண்ணிலும் காட்டாதீர்கள்.

9. பணம் செலுத்த நீங்களே நேரில் சென்று செலுத்துங்கள். செலான் பாரம் அவ்வப்போது ஒவ்வொன்றாக மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்.

10. பணம் எடுக்கும்போது நீங்களே நேரில் சென்று ஒரு வித்டிராயல் பாரம் வாங்கி அவர்களையே எழுதச்சொல்லி கையெழுத்து மட்டும் நீங்கள் போட்டு பணத்தை எடுங்கள்.

11. ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதாயிருந்தால் துணைக்கு நம்பகமான ஒருவரைக் கூட்டிக்கொண்டு போகவும். அப்படிக் கூட்டிக்கொண்டு போகும் நபருக்கு 100 ரூபாய் கொடுக்கவும். அப்போதுதான் அடுத்த தடவை கூப்பிடும்போது உற்சாகமாக வருவார்.

12. இப்படி செய்தால் உங்கள் பணம் உங்கள் பெயரில் பத்திரமாக இருக்கும்.

13. உங்கள் காலத்திற்குப் பிறகு??? இதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்க்ள?  யாரோ எப்படியோ என்னமோ செய்து கொள்ளுகிறார்கள்? உங்களுக்கென்ன, பேசாமல் உங்கள் படுக்கையில் (?!) படுத்துக்கொண்டிருங்கள்.