பேங்க் முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேங்க் முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 பிப்ரவரி, 2014

பேங்க் கணக்குகள் - பாகம் 3


பேங்குகளில் உங்கள் கணக்கில் பணம் கட்டுவது எப்படி என்று போன பதிவில் பார்த்தோம். அதில் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதாவது பேங்கில் கட்டுவதற்கு உங்களிடம் பணம் இருக்கவேண்டும்.

பணம் இல்லாமலும் பேங்குகளில் பணம் கட்டுவதற்கும் வழி முறைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு நீங்கள் முதலில் ஒரு எம்.பி. ஆகவேண்டும். அப்போது பேங்கில் உங்கள் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம். பணம் இல்லாமலும் உங்கள் கணக்கில் பணம் போடலாம். (திரு.நடனசபாபதி கவனிக்கவும்)

ஆகவே வரும் பார்லிமென்ட் தேர்தலில் நின்று எப்படியாவது ஒரு எம்.பி. ஆகிவிடுங்கள். அப்புறம் நீங்கள் முடி சூடா மன்னனேதான்.

நிற்க, இப்போது உங்கள் கணக்கில் பணம் போடுவது பற்றி தொடர்வோம். உங்களுக்கு வர வேண்டிய பணம் சில சமயம் காசோலை மூலமாகவும் வரலாம். அதுதாங்க செக் மூலமாகவும் வரலாம். செக்கில் இரண்டு வகை உண்டு. கிராஸ் செய்தது அல்லது கிராஸ் செய்யாதது.

கிராஸ் செய்யாத செக்குகளை அதன் பின்புறம் உங்கள் கையெழுத்து மற்றும் போன் நெம்பர் எழுதி, அது எந்த பேங்க் செக்கோ அந்த பேங்கில் போய் கொடுத்தால் உங்களை நன்கு விசாரித்து விட்டு பணம் கொடுப்பார்கள். கொஞ்ச நஞ்சம் சந்தேகம் வந்தாலும் பணம் கொடுக்கமாட்டார்கள். இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. கணக்கு வைத்திருப்பவர்களின் நலன் கருதி இதில் ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஏதாவது தவறு நேர்ந்து விடக்கூடாதல்லவா.

கிராஸ் செய்வதில் இரண்டு வகை உண்டு.

1. சாதாரண கிராஸ் - இந்த வகை செக்குகளை ஏதாவது ஒரு அக்கவுன்ட்டில் (உங்களுடையதாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை) போட்டு பணம் பண்ணிக்கொள்ளலாம்.


2. "அக்கவுன்ட் பேயீ" கிராஸ் - இவ்வகை செக்குகளை செக் யார் பெயரில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவருடைய அக்கவுன்ட்டில்தான் செலுத்த முடியும்.


செக்குகளை அக்கவுன்ட்டில் போடுவதற்கும் செலான் பூர்த்தி செய்யவேண்டும். ரொக்கப் பணம் கட்டுவதற்கு உபயோகிக்கும் அதே செலான்தான். விவரங்களை தவறு இல்லாமல் பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கணக்கு எண் மாறிவிட்டால் பணம் வேறு ஒருவர் கணக்கிற்கு போய்விடும். அப்புறம் அதை மீட்பது சிரமம்.

செலான் படிவத்தைப் பூர்த்தி செய்து அதன் கௌன்டர்பாயிலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த படிவத்துடன் உங்கள் செக்கை ஒரு குண்டூசி மூலம் இணைத்து பேங்கில் உள்ள ஒரு பெட்டியில் போடவேண்டும். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் - செக் மேலேயும் செலான் படிவம் கீழேயும் இருக்கவேண்டும். குண்டூசியால் மட்டுமே இணைக்கவேண்டும். ஸ்டேப்ளர் பின்னால் இணைக்கக் கூடாது.

இப்படி செக்கை பேங்கில் போடுவதற்கு cheque presentation  என்று சொல்வார்கள்.
செக்கைப் போட்டு மூன்றாவது நாள் உங்கள் கணக்கில் பணம் சேர்ந்து விடும். அப்படி சேர்ந்து விட்டதா என்று சரி பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் சில சமயம் உங்களுக்கு செக் கொடுத்தவர் கணக்கில் போதிய பணம் இல்லாவிட்டால் செக் திரும்பிவிடும். அப்படி செக் திரும்பி விட்டால் உங்களுக்கு அபராதம் போடுவார்கள். ஒவ்வொரு பேங்கிலும் ஒவ்வொரு தொகை அபராதமாகப் போடுவார்கள். இது 300 ரூபாய் வரை போகலாம்.

இந்த மாதிரி கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது என்பது வியாபாரத்தில் ஒரு முக்கியமான அம்சம். வியாபாரிகளினால் சர்வ சாதாரணமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறை. பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்போது எந்த மனச்சாட்சி உறுத்தலும் இல்லாமல் செக் கொடுத்து விடுவார்கள். கொஞ்ச நஞ்சம் மனச்சாட்சி பாக்கி உள்ளவர்கள், செக்கை வாங்கின ஆள் போன ஐந்தாவது நிமிடத்தில் அந்த கம்பெனிக்கு போன் பண்ணி, இப்போது உங்கள் ஆளிடம் ஒரு செக் கொடுத்திருக்கிறேன், அதை நான் சொன்ன பிறகு பேங்கில் போடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

மனச்சாட்சியை சுத்தமாக துடைத்து வைத்திருப்பவர்கள் இதையும் சொல்ல மாட்டார்கள். அந்த செக் பேங்கிற்குப் போய் பணம் இல்லாமல் திரும்பி விட்ட பிறகு, அந்தப் பார்ட்டி கூப்பிட்டு கேட்டால் இவர்கள் ஏதாவதொரு நொண்டி சமாதானம் சொல்லுவார்கள். நீங்கள் அந்தச் செக்கை திரும்பவும் போடுங்கள், பணம் வந்து விடும் என்பார்கள். இப்படியே இந்த விளையாட்டு தொடரும்.

தன் கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது இன்றைய சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். அப்படி செக் கொடுத்தவரை ஜெயில் வரைக்கும் கொண்டு போக சட்டத்தில் வழி இருக்கிறது. ஆனால் அது எல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கும் சமாச்சாரம். சாதாரண மனிதனுக்கு உதவாது. ஆகவே உங்களுக்கு யாராவது செக் கொடுத்தால் அந்த நபர் நம்பிக்கைக்கு உகந்தவரா என்று ஆராய்ந்து அந்த செக்கை வாங்கவும்.

பேங்க் டிராப்ட் என்று ஒரு முறை இருக்கிறது. இது 99.9 சதம் நம்பிக்கையானது. இது ஒருவர் பேங்கில் பணம் கட்டி இன்னொருவர் பெயருக்கு வாங்குவது. பேங்க் டிராப்ட் ஏறக்குறைய செக் மாதிரிதான். ஆனால் இதற்கு பேங்க் கேரண்டி உண்டு. பணம் கண்டிப்பாய் வந்து விடும் என்று நம்பலாம்.

ஏன் 0.1 சதவிகிதம் தொங்கல் வைத்திருக்கிறேன் என்றால் பேங்க் டிராப்டிலும் பம்மாத்து வேலை செய்யக்கூடிய கில்லாடிகள் இருக்கிறார்கள். 1000 ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் வாங்கி அதை கோடி ரூபாய்க்கு மாற்றக்கூடிய ஜகஜ்ஜால மந்திரவாதிகள் நம்ம ஊரில் உண்டு. ஆனால் இப்போது இன்டர்நெட் வசதிகள் முன்னேறிவிட்டபடியால் இத்தகைய புரட்டர்களுக்கு கஷ்ட காலமாய் இருக்கிறது.

இந்த பேங்க் டிராப்ட் பொதுவாக வெளியூர்களுக்கு அனுப்பும்போதுதான் தேவைப்படும். உள்ளூரிலேயே செல்லுபடியாக வேண்டியதாயிருந்தால் அதற்கு பேங்கர்ஸ் செக் என்று ஒன்று நடைமுறையில் இருக்கிறது. இரண்டும் ஏறக்குறைய ஒன்றேதான். இரண்டுக்கும் பேங்க் கமிஷன் வாங்குவார்கள்.

பேங்க் முறை மிகவும் சௌகரியமானதுதான். ஆனால் அது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி போன்றது. ஏமாந்தால் உங்களையும் வெட்டிவிடும்.

உங்கள் கணக்கில் பணம் போட இன்னும் சில வழி முறைகள் இருக்கின்றன. அடுத்த பதிவில் பார்ப்போம்.