பேராசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 செப்டம்பர், 2013

சினிமா தயாரிப்பு மோகம்.


சினிமா உலகத்தில் பணம் கொள்ளை கொள்ளையா கொட்டி வச்சிருக்குது. வேண்டியதெல்லாம் நல்ல சாக்குகள்தான். உள்ளே போனால் சாக்கு நிறைய பணத்தைக் கட்டி கொண்டுவரலாம்.

இந்த எண்ணம் பலருடைய மனங்களில் வேரூன்றி இருக்கிறது. அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் ஒரு நல்ல டெய்லர். மிக நன்றாகத் தைப்பார். பணம் கொழித்தது. யாருடைய தூண்டுதலினாலோ சென்னைக்கு சினிமா எடுக்கப்போனார். கைக் காசு முழுவதும் போய் கடனாளியாகத் திரும்பி வந்தார். அந்த சோகத்திலேயே உயிரையும் விட்டார்.

பல சினிமா நடிகர்கள் தாங்கள் நடித்து சம்பாதித்த பணத்தை சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து ஓட்டாண்டியாய் மாறி, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் உயிர் விட்ட கதைகள் மக்களுக்குத் தெரியும்.

இதையெல்லாம் பார்த்த பிறகும் நாகர்கோவிலில் இருந்து நாகராஜன் என்று ஒருவர் கோழி கூவுது என்ற படத்தை கடன் வாங்கி எடுத்து விட்டு படம் சரியான வசூல் கொடுக்காததால் தற்கொலை செய்யலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறாராம்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் சினிமா எடுக்கப்போவதற்கு முன்பு செய்யாத யோசனை இப்பொது எதற்கு என்பதுதான்.

வெள்ளி, 25 மே, 2012

மில்லியனர் ஆக வேண்டுமா?

இது ஒரு கற்பனை. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை.

நீங்கள் மில்லியனர் ஆக மிக சுலபமான வழி கண்டுபிடித்திருக்கிறோம். எல்லோரும் வாருங்கள். மில்லியனராகத் திரும்பிச்செல்லுங்கள்.

இப்படி ஒரு விளம்பரம் அன்று எங்கள் ஊரில் எல்லா சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்தது. அன்று மாலை 6 மணிக்கு அந்த ஊரிலுள்ள பெரிய மைதானத்தில் கூடும்படி அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மில்லியனராகும் ஆசை யாரை விடும். நானும் 5 மணிக்கே போய்விட்டேன். எல்லோருக்கும் ஒரு விண்ணப்ப படிவம் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னார்கள். அந்தப் படிவங்களைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். மேல் விவரங்கள் உங்களுக்கு தபாலில் வரும் என்று சொல்லிவிட்டு ஆளுக்கு ஒரு சுண்டல் பாக்கெட் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஒரு வாரம் கழித்து ஒரு தபால் வந்தது. உங்கள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்தோம். மில்லியன் ரூபாய் என்பது உங்கள் தகுதிக்கு மிக அதிகம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனாலும் உங்கள் ஆசையைக் கெடுக்க நாங்கள் விரும்பவில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள யோசனை உங்களுக்குப் பிடித்திருந்தால் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தரணி புகழ் "ஊழல்" டி.வி. ஸ்டேஷனுக்கு நேரில் வரவும். அந்த லெட்டரில் இப்படி எழுதியிருந்தது.


உங்களுக்கு ஒரு நாள் டி.வி.யில் தோன்ற விருப்பமானால் அதில் நாங்கள் வைக்கும் போட்டியில் கலந்து கொள்ளலாம். அந்த நிகழ்ச்சிக்குப் பெயர் "உலகத்தில் பெரிய ஏமாளி யார்" என்பதாகும். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் உங்களை சில கேள்விகள் கேட்போம். உங்களுக்குத் தெரிந்த பதிலைச் சொல்லலாம். பதில் சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. சில கேள்விகள் கேட்ட பிறகு உங்களுக்கு பத்து லட்சம் அல்லது பதினைந்து லட்சம் பரிசு விழுந்திருக்கிறது என்று சொல்வோம். நீங்கள் மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வந்து விடவேண்டும்.


வெளியில் வரும்போது உங்களுக்கு பிஸ்கெட்டும் டீயும் கொடுப்போம். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கவர் கொடுப்போம். அதை வீட்டுக்குப் போய் பிரித்துப் பார்க்கவும். வீட்டுக்கு வந்தவுடன் அந்தக்கவரில் பத்து லட்சம் செக் இருக்குமென்று நீங்கள் நினைத்தால் நீங்கள்தான் உலக மகா ஏமாளி. கவரில் 500 ரூபாய் நோட்டு ஒன்றும் கடிதம் ஒன்றும் இருக்கும். கடிதத்தில் நீங்கள் டி.வி.யில் அன்று நடித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு விட்டு அதற்கான சன்மானம் 500 ரூபாய் என்று எழுதியிருப்போம். 


சரி, என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று ஞாயிற்றுக்கிழமை டி.வி.ஸ்டேஷனுக்குப் போனேன். அங்கு என்னைப்போல் பலர் வந்திருந்தார்கள். என்னையும் சேர்த்து ஒரு மூன்று பேரை மட்டும் கூட்டிக்கொண்டு போய் கேட்கப்போகும் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் கொண்ட பேப்பர் ஒன்றைக் கொடுத்து, நன்றாக மனப்பாடம் செய்யச்சொன்னார்கள். மீதிப்பேர்களைக் கூட்டிக்கொண்டு போய் பார்வையாளர்களாக உட்கார வைத்தார்கள்.

பிறகு எங்களுக்கு ஒருவர் வந்து ரிகர்சல் நடத்தினார். பிறகு படம் பிடிக்கும் தளத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய் படம் பிடித்தார்கள். எனக்கு பத்து லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. பிறகு எங்களை வெளியில் அழைத்து வந்து பிஸ்கட், டீ கொடுக்கப்பட்டது. கூடவே ஒரு கவரும் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தேன். சரியாக ஒரு 500 ரூபாய்த்தாளும் நன்றிக்கடிதமும் இருந்தது. சரி, ஒரு நாள் பொழுது போயிற்று. டி.வி.யிலும் தோன்றியாயிற்று, ஞாயிற்றுக்கிழமை பொழுதும் போயிற்று என்று திருப்திப் பட்டுக்கொண்டு தூங்கிப்போனேன்.

உங்கள் ஊரிலும் இந்த மாதிரி ஆஃபர் வந்தால் விட்டு விடாதீர்கள்.

டிஸ்கி: இது முற்றிலும் என்னுடைய மூளையில் உதித்த ஒரு கற்பனைக் கதையே. இதைப்படித்து விட்டு எந்த டி.வி.யாவது இந்த மாதிரி புரொக்ராம் நடத்தினால் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன். ஏற்கனவே எந்த டி.வி.யாவது இப்படி ஒரு புரொக்ராம் நடத்திக் கொண்டிருந்தால் அதற்கும் இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சத்தியம் செய்கிறேன்.