போக்குவரத்து சிக்னல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போக்குவரத்து சிக்னல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 நவம்பர், 2012

கோவையில் நீங்கள் கார் ஓட்டுகிறீர்களா? ஜாக்கிரதை


கோவைவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்கள் கார் ஓட்டுபவராக இருந்தால் என் நண்பரின் இந்த அனுபவத்தைப் படியுங்கள்.

கோவையில் பல முக்கியமான சாலைச் சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது கூடவே ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரியும் நிற்பார்.

நம் தமிழ்நாட்டு மக்கள் சட்டத்திற்கு மிகவும் மரியாதை கொடுப்பவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். போலீஸ்காரர் இருக்கிறார் என்றால் கரெக்ட்டாக பச்சை லைட் வரும்போதுதான் வண்டியை ஓட்டுவார்கள். சிகப்பு லைட் எரிந்தால் வெள்ளைக்கோட்டுக்கு முன்பே வண்டியை நிறுத்து விடுவார்கள். போலீஸ்காரர் இல்லையென்றால் அவர்கள் நடந்துகொள்வது வேறு விதம். சிவப்பு லைட் பச்சையாக மாறுவதற்கு சில நொடிகள் முன்பே வண்டியை எடுத்து விடுவார்கள். அடுத்த பக்கம் இருந்து வருபவர்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஒரு விபத்து நிச்சயம்.

இதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சிக்னல் இருக்குமிடத்திலும் தானியங்கி காமிராவைப் பொறுத்தியிருக்கிறார்கள். சிவப்பு விளக்கு எரியும்போது வண்டியை எடுப்பவர்களை அது தானாகவே போட்டோ எடுத்து போலீஸ் கன்ட்ரோல் அறைக்கு அனுப்பி வைக்கும்.

இந்த விபரங்கள் கோவையில் வண்டி ஓட்டுபவர்கள் அனைவருக்கும் தெரியும். என் நண்பர் ஒருவர் இந்த மாதிரி ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. அங்கே நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர், என் நண்பரைப் போகுமாறு சைகை காட்டியிருக்கிறார். அப்போது சிவப்பு லைட் எரிந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் போலீஸ்காரர் போகச்சொல்கிறாரே என்று என் நணபர் சிக்னலைத்தாண்டிப் போய்விட்டார்.

இரண்டு நாள் கழித்து ஒரு போலீஸ்காரர் வீட்டுக்கு வந்து ஒரு போட்டோவைக் காட்டி, இது நீங்கள் ஓட்டும் வண்டிதானே என்று கேட்டிருக்கிறார். நண்பரும் ஆமாம் என்று சொல்லியிருக்கிறார். அந்தப் போலீஸ்காரர் நீங்கள் இரண்டு நாள் முன்பு இந்த இடத்தில் சிவப்பு லைட் எரிந்து கொண்டிருக்கும்போது சிக்னலைக்கடந்து போயிருக்கிறீர்கள். அதற்கு இந்த போட்டோ ஆதாரம். அபராதத்தை இங்கேயே கட்டுகிறீர்களா அல்லது கோர்ட்டில் கட்டுகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

நண்பர் அங்கிருந்த போலீஸ்காரர் போகச்சொன்னதால்தானே போனேன், இப்போது அபராதம் கட்டச்சொல்கிறீர்களே, இது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் போலீஸ்காரர், அதெல்லாம் நீங்கள் கோர்ட்டில் வந்து சொல்லிக்கொள்ளுங்கள், சார்ஜ் ஷீட் போடட்டுமா இல்லை அபராதம் கட்டிவிடுகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

நண்பர் பார்த்தார். கோர்ட், கேஸ், வக்கீல், அலைச்சல் இந்த தொந்திரவுகளெல்லாம் வேண்டாம், பணத்தோடு இந்த தொல்லை ஒழியட்டும் என்று அந்தப் போலீஸ்காரர் கேட்ட அபராதத்தைக் கொடுத்து அவரை அனுப்பி விட்டார்.

இந்தப் பிரச்சினையை வேறு எந்த விதமாகத் தீர்க்க முடியும்? எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அந்த சிக்னலில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர், இந்த கேமரா போட்டோ பிடிக்கும் சமாசாரத்தைத் தெரிந்துகொண்டேதான் நண்பரைப் போகச்சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் கேமிரா வைத்த பிறகு எவ்வளவு கேஸ் பிடித்திருக்கிறீர்கள் என்ற கணக்கை ஆய்வுக் கூட்டங்களில் சொல்லவேண்டியிருக்கும். ஒரு கணிசமான கணக்கு காட்டாவிட்டால் போலீஸ்காரர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்ற கமென்ட் வரும். அதற்காக இப்படி செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இனி மேல் வண்டி ஓட்டும்போது இப்படிப்பட்ட நிலை வந்தால் போலீஸ்காரரை கண்டு கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் அப்போதும் அந்த போலீஸ்காரர் வேறு ஏதாவது நாம் செய்யாத கற்பனைக் குற்றத்திற்காக நம் மேல் கேஸ் புக் பண்ணலாம்!