மரண பயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரண பயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மார்ச், 2012

மிருத்யுஞ்ஜய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்

இந்த ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை பலர் படித்திருப்பீர்கள். இது ஒரு வேத மந்திரம்.

(நியாயமாக வேதம் படித்தவர்கள்தான் இந்த மந்திரத்தை ஜபிக்கவேண்டும். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல் நானும் என் பொல்லாச்சிறகை விரித்துள்ளேன். வேத பண்டிதர்கள் மன்னிப்பார்களாக.)

இதன் பொருள் :

நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண்ணனுமாகிய சிவபெருமானைப் போற்றி வழிபடுகிறோம். வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுவோமாக. ஆன்ம நிலையிலிருந்து விலகாமல் இருப்போமாக.

இந்த மந்திரத்தின் முக்கிய சாராம்சம் என்னவென்றால் நம்முடைய மரணம் துன்பமில்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான். அதற்கு உதாரணமாக சொல்லப்பட்ட விஷயம் - வெள்ளரிச் செடியிலிருந்து நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வாறு சிரமமில்லாமல் விடுபடுகிறதோ அப்படி என் ஆத்மாவும் இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும்.

இன்று காலை நடைப்பயிற்சி போய்விட்டு வரும்போது வழியில் இரண்டுபேர் பேசிக்கொண்டு இருந்தார்கள். எதைப்பற்றி என்றால் மரணத்தைப் பற்றித்தான். அவர்களில் ஒருவர் சொன்னது. "நோய் நொடியில்லாமல் படுக்கையில் படுக்காமல் போய்ச்சேர்ந்து விட வேண்டும்."

என்ன ஒரு ஆசை பாருங்கள்! எனக்கு பணம் வேண்டும், பங்களா வேண்டும், கார் வேண்டும் என்றெல்லாம் அந்த மனுஷன் ஆசைப்படவில்லை. என்னுடைய மரணம் துன்பமில்லாமல் அமையவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான்.

எனக்கு அதைக்கேட்டவுடன் இந்த மிருத்யுஞ்ஜய மந்திர ஞாபகம்தான் வந்தது.  வேதகாலத்திலேயை வேத விற்பன்னர்கள் தங்களுடைய மரணம் துன்பமில்லாமல் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார்கள். கலிகாலத்தில் ஆசைப்படுவது அதிசயமல்ல.