ஒரு ஊர்ல ஒரு வீட்டில ஒரு மாமியாரும் மருமகளும் இருந்தார்கள். அப்பனையும் மகனையும் விட்டு விடுவோம். அவர்கள் சும்மா ஒப்புக்குச் சப்பாணிதானே.
அந்த வீட்ல மாமியார் வச்சதுதான் சட்டம். எதுவானாலும் அந்தம்மாவைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும்.
அந்த வீதியில் தினமும் ஒரு பிச்சைக்காரன் பிச்சையெடுக்க வருவான். இந்த வீட்டு வாசலிலும் நின்று "அம்மா பிச்சை" என்று கூவுவான். தினமும் அந்த மாமியாரும் "பிச்சை இல்லை போ" என்று சொல்லி விடுவாள். பிச்சைக்காரன் போய்விடுவான்.
ஒரு நாள் இந்த மாமியார் கோவிலுக்குப் போய்விட்டாள். அப்போது பார்த்து இந்தப் பிச்சைக்காரன் வந்து வழக்கம்போல் "அம்மா பிச்சை" என்று சத்தம் கொடுத்தான். மருமகள் இந்தச் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்தாள். தினமும் மாமியார் அவனுக்கு பிச்சை இல்லை என்றுதானே சொல்கிறாள், நாமும் அதையே சொல்லிவிடுவோம் என்று நினைத்து "பிச்சை இல்லை போ" என்று சொல்லிவிட்டாள். பிச்சைக்காரனும் அடுத்த வீட்டுக்குப் பிச்சை கேட்கப் போய்விட்டான்.
இந்தச் சமயம் பார்த்து மாமியார் கோவிலிலிருந்து திரும்பி வந்து விட்டாள். அவளுக்கு மருமகள் ஏதாவது பிச்சை போட்டு விட்டாளோ என்று சந்தேகம்.
நாலு வீடு தள்ளிப்போயிருந்த பிச்சைக்காரனை கை தட்டி கூப்பிட்டாள். பிச்சைக்காரன் ஓஹோ இன்னைக்கு இந்த அம்மா ஏதோ பிச்சை போடப்போகிறது போலிருக்கிறது என்று ஆவலுடன் வந்தான்.
அவனிடம் என் மருமகள் ஏதாவது பிச்சை போட்டாளா என்று கேட்டாள். அதற்கு அவன் அந்த அம்மாவும் பிச்சை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்றான். அதற்கு அந்த மாமியார் மருகளுக்கு அவ்வளவு பவிசு ஆகி விட்டதா. இந்த வீட்டில் யார் பண்ணாட்டு நடக்கிறதென்று உனக்குத் தெரியாதா, அவள் என்ன உனக்குப் பிச்சை இல்லையென்று சொல்வதற்கு? இனிமேல் நீ என்னிடம்தான் பிச்சை கேட்கவேண்டும், நான்தான் பதில் சொல்வேன், அவள் என்ன பதில் சொல்வது, இப்போது சொல்கிறேன் கேள், பிச்சை இல்லை, நீ போகலாம் என்றாள்.
பிச்சைக்காரன் மனது மிகவும் நொந்து போய் அடுத்த வீட்டிற்குப் போனான்.
இந்தக் கதையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். திடீரென்று இந்தக் கிழவன் இந்தக் கதையை எதற்குச் சொல்கிறான் என்று விழிக்கவேண்டாம். காரணம் சொல்கிறேன்.
கொஞ்ச நாளைக்கு முன்பு அல்லது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நமது கருணை மிகுந்த அரசு இயந்திர வாகனங்களின் அடையாள எண் பட்டையில் சில மாறுதல்களைச் செய்ய முடிவு செய்தது. அதாவது வாகனங்களைப் பலர் வாகன எண்களை மாற்றி வைத்துவிட்டு அந்த வாகனங்களைப் பல கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்திவிட்டு திரும்பவும் வாகன எண்ணை பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
ஆகவே குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே நாங்கள் அதாவது அரசு ஒரு புது விதமான எண் பட்டை கொண்டு வரப்போகிறோம். எல்லோரும் அந்தப் பட்டையைத்தான் பயன்படுத்த வேண்டும். அதில் அந்த வாகனத்தின் முழு ஜாதகமும் ஒரு சிறிய வில்லையில் பதிவு செய்திருப்போம். ஒரு கருவியின் மூலமாக அந்த வாகனத்தின் முழு விவரங்களையும் போக்குவரத்துத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நொடியில் கண்டு பிடிக்கலாம். இதனால் வாகனங்களை குற்றங்களுக்காகப் பயன்படுத்துவது அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும் என்றார்கள்
இந்த எண் பட்டையின் மாதிரிகள் எல்லாம் பிரசுரமாகின. என் போன்ற மடையன்களும் ஆஹா, அரசு மக்களின் பாதுகாப்பிற்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளுகிறது, அரசென்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும் என்று நம்பிக்கொண்டு இருந்தோம்.
வருடங்கள் ஓடினவே தவிர இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவது தாமதாகிக்கொண்டே போனது. நம் இந்திய மக்கள் என்ன சாமானியமானவர்களா என்ன? பார்த்தார்கள். ஆஹா, சீக்கிரம் காசு பார்க்க நல்ல வழி என்று அரசு வெளியிட்ட மாதிரிப் பட்டைகளைப் போலவே தாங்களாகவே செய்து வாகன உரிமையாளர்களின் தலையில் மிளகாய் அரைத்தார்கள்.
இது ஏறக்குறைய ஓரிரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. திடீரென்று அரசிற்கு ஞானோதயம் உதித்தது. மாமியாரான நாம் அல்லவா இந்த எண் பட்டைகளைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக ஒப்பந்தங்கள் சிலபல பேருக்கு கொடுக்கலாம் என்றிருந்தோமே, இப்படி மருமகள்கள் நம்மை மீறி எப்படி இந்த எண் பட்டைகளைத் தயார் செய்யலாம்? கூப்பிடு காவல் துறையை, இப்படி எண் பட்டை அணிந்திருக்கும் வாகனங்களை எல்லாம் பிடியுங்கள், அபராதம் போடுங்கள், வருமானத்தைப் பெருக்குங்கள் (யாருடைய வருமானம் என்பது வேறு விஷயம்) என்று அதிரடியாக ஆணைகள் பிறப்பித்தார்கள்.
பட்டைகளை வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனமே தயார் செய்து அவர்கள் விற்கும் வாகனங்களுக்கு மாட்டி நல்ல காசு பார்த்தார்கள். அவர்களைக் காவல்துறை கண்டு கொள்ளவில்லை. விவரம் தெரியாமல் வாகனம் வாங்கியவர்கள்தான் மாட்டினார்கள். குறைந்தது 100 ரூபாய் அபராதம்.
அதற்குள் சில மகானுபாவர்கள் நீதி மன்றத்தில் முறையிட்டார்கள். மகாகனம் பொருந்திய நீதிபதிகள் காவல் துறையை இத்தனை நாளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள் என்ற செய்தி தினப் பத்திரிக்கைகளில் வெளி வந்தது.
நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி என்று நான் இன்று போய் என் புது மகிழ்வுந்தின் எண் பட்டையை மாற்றி என் மகிழ்வு மாறாமலிருக்க வழி செய்தேன்.
ஆகவே இந்த நவீன கணினி யுகத்திலும் மாமியாரின் நாட்டாண்மைதான் செல்லுபடியாகும் என்பது நிரூபணமாகிறது.