முதுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 நவம்பர், 2013

முதுமையின் அவலங்கள்


என்னுடைய கடந்த 

"வயது வந்தவர்களுக்கு மட்டும்"


என்ற  பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்.

ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன் என்கிறீர்களே. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?

காலையில் நாளிதழை திறந்தவுடன் விபத்துக்களை பார்க்கிறோம். நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருக்கும்போது எளிதாக மனதில் எந்த ஒரு கணமும் இல்லாமல் அடுத்த செய்திக்கு போய்விடுகிறோம். ஆனால் அதே விபத்தில் நமக்கு சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இருந்திருந்தால் - அடிபட்டவர்கள் மட்டும் அல்ல, விபத்துக்கு காரணமானவர்களே ஆனாலும் சரி - மனது கிடந்து துடிக்கிறதே. உடனே ஓடிபோய் உதவி செய்ய மனது அலை பாய்கிறதே. நீங்கள் ரொம்ப எளிதாக ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்கிறீர்கள். உங்கள் உறவினர்களை நினைத்து பரிதாபபடுகிறேன்

திருச்சி காயத்ரி மணாளன்

-----------------------------------------------------------------------

உங்களுக்கே இது நியாயமாய்ப் படுகிறதா?
நல்ல கேள்வி. சரியாக பாய்ன்டைப் பிடித்து விட்டீர்கள்.
அதாவது நான் ஒரு மனிதப் பண்புகள் இல்லாதவன் என்கிற மாதிரி ஒரு உருவத்தை உருவகப்படுத்தியுள்ளீர்கள். நான் அதை மறுக்கவில்லை. உயர்ந்த பண்புகள் ஒருவனுக்கு இருப்பது மிகவும் போற்றத்தக்கது.  அப்படிப்பட்ட நல்ல பண்புகளில் வயதானவர்களை அவர்கள் முகம் கோணாமல் பராமரிப்பது என்பது மிக மிக உன்னதமான பண்பு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அந்தப் பண்புகள் மனதளவில் மட்டும் இருந்தால் போதுமா? அதை செயலில் காட்டினால்தானே பலன்.

எனக்கும் இந்தக் கொள்கை மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு கடவுள் சர்வ வல்லமையும் மற்ற வசதிகளையும் அளவில்லாமல் கொடுத்திருந்தால் நானும் இந்த கொள்கைகளை தடையில்லாமல் என் உறவினர்கள் அனைவருக்கும் நிறைவேற்றத் தயார்தான். என்ன, அதற்குண்டான ஆட்களைப் போட்டுவிட்டு அவர்களுக்குண்டான கூலியை தாராளமாகக் கொடுத்தால் வேலை நடந்துவிடும்.

உங்கள் நேரடி அனுபவத்தைப் பற்றி கேள்விகள் கேட்பது தேவையில்லை.  என்  குடும்பம் சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் இங்கு குறிப்பிடுவது தற்பெருமை பேசுவது போல் ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன். என் பக்கத்து வாதங்களை மட்டும்  முன் வைக்கிறேன்.

வயதானவர்களின் முதல் ஆதங்கம் அவர்களின் உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாதது. "நான் பத்து வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு தெம்பாக இருந்தேன். இப்பொழுது என்னால் அப்படி இருக்க முடியவில்லையே.  இப்பொழுது மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். என்னை முன்பு போல தெம்பானவனாக மாற்ற ஏன்முடியாது?"  

அவர்களைப் பராமரித்துக் கொள்பவர்களை ப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். "நீங்கள் ஏன் அப்படிப்பட்ட மருத்துவரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய் வைத்தியம் செய்யக்கூடாது?"

இதுதான் பெரும்பாலான வயதானவர்களின் ஆதங்கம்.

முதுமையின் தாக்கங்களை மாற்றக்கூடிய வைத்தியம் இருந்தால் பணம் படைத்தவர்கள் ஒருவரும் இறக்கவே மாட்டார்கள். முதுமையின் மாற்றங்களுக்கு தற்காலிக சாந்தி செய்யலாமே தவிர அவைகளை முற்றிலும் நிரந்தரமாக மாற்ற முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மாற்றம் தற்காலிகமானது.

முதல் தடவை வயதான ஒருவருக்கு இந்த மாதிரி வைத்தியம் செய்தால் சில நாட்களுக்கு தெம்பாக இருப்பார். கொஞ்ச நாட்கள் போன பிறகு பழையபடி சோர்வு வரும். திரும்பவும் வைத்தியம் செய்ய ஆசைப் படுவார். வைத்தியம் செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். திரும்பவும் தெம்பாக உணருவார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் வைத்தியம் செய்யவேண்டி வரும். இந்த இடைவெளி குறைந்து கொண்டே போய் கடைசியில் எந்த வைத்தியமும் பலனளிக்காத நிலை ஏற்படும்.

அப்போது டாக்டர்கள் "இனி இவருக்கு வைத்தியம் செய்து பலனில்லை. அவரை வீட்டோடு வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி விடுவார்கள். சொந்தக்கார்ர்களும்  "நாங்கள் எங்களால் முடிந்தவரை வைத்தியம் செய்தோம், இனி ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்" என்று வருபவர்களிடம் சாதாரணமாகவோ அல்லது பெருமையாகவோ சொல்லிக்கொள்ளலாம்.

அந்த நிலையில் அந்த வயதானவரின் நிலையை யோசித்துப் பாருங்கள். உடலில் தெம்பு இல்லை. உடல் உபாதைகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. எந்த மருந்தும் நிவாரணம் கொடுக்க மாட்டேனென்கிறது. பார்த்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச ஆளில்லை. மரண வாதனை அவர்களை வாட்டுகிறது.

இந்த நிலையில் யார் என்ன  செய்து அவர் வேதனையைக் குறைக்க முடியும்? இப்படி வேதனைப் படாமல் தூக்கத்திலேயே இறந்து போகிறவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்க்ள. ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த மரண வாதனையை அனுபவித்து விட்டுத்தான் இறக்கிறார்கள்.

இந்த மாதிரி ஒருவருக்கு வைத்தியம் பார்க்க ஆள் வசதியும் பணவசதியும் வேண்டும். அப்படி இருந்தாலும் தொடர்ந்து வைத்தியம் பார்க்க மன வலிமை வேண்டும். இப்படி எத்தனை குடும்பங்களில் செய்ய முடியும்?

நான் சமீபத்தில் பார்த்த ஒரு குடும்பத்தில், குடும்பத்தலைவன் இறந்து விட்டார். அந்தக் குடும்பத்தலைவி இரண்டு மகன்களையும் வயதான தன்னுடைய தாய் தந்தையரையும் வைத்து காப்பாற்றிக்கொண்டு இருக்கிறாள். ஓரளவு வசதி இருக்கிறது. மகன்கள் இப்போதுதான் வாழ்க்கையில் வேரூன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு மகனுக்கு சமீபத்தில் கல்யாணம் ஆயிற்று.

தந்தைக்கு நடக்க முடியாது. பாத் ரூமில் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிவதில்லை. அவருடைய மனைவிக்கும் வயதாகி விட்டது. அவரைத் தூக்கும் சக்தி இல்லை. அவர்கள் இருப்பதோ ஒரு அபார்ட்மென்டில் ஐந்தாவது மாடியில். அவரை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றால் இரண்டு வலுவான ஆட்கள் வேண்டும். ஆம்புலன்ஸ் வேண்டும். இந்த மகளும் உடன் செல்லவேண்டும். இதற்கெல்லாம் நேரம் வேண்டும்.

அந்தப் பெண் என்ன செய்வாள்? இந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு தயார் செய்வாளா? அப்பாவின் வைத்தியத்திற்கு கூடப் போவாளா? அப்படி வைத்தியம் செய்து இவரால் என்ன செய்ய முடியும்? உதவிக்கு அடிக்கடி வர இன்றைய உங்கில் யாரால் முடியும்?

இந்த நிலையில் அவருக்கு நான் சொன்ன யோசனை -" இந்தக் கஷ்டங்களை நீங்க்ள பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்து பலனில்லை. நடக்க முடியாதவைகளுக்கு ஆசைப்படாதீர்கள். உங்கள் மகளுக்கு வீணாக உபத்திரம் தராதீர்கள்" என்று யோசனை சொன்னேன். 

இது நியாயமானதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள். மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரியும். தர்மம் உதுதான் என்று வரையறுத்து கூறமுடியாது. சூழ்நலைகளுக்கு ஏற்ப தர்மம் மாற்படும் என்று தர்மத்திற்கே உதாரணமாக சொல்லப்படும் தர்மரே பல இடங்களில் கூறியிருக்கிறார்.

திங்கள், 11 நவம்பர், 2013

வயது வந்தவர்களுக்கு மட்டும்.


தலைப்பைக் கண்டு மயங்காதீர்கள். இது உண்மையிலேயே வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். அதாவது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு.

சமீபத்தில் ஒரு வயதானவரை எனக்கு வேண்டியவர்களின் குடும்பத்தில் பார்த்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் சாரம்.

 மனிதன் வாழ்க்கையில் பல பருவங்களைத் தாண்டி வளர்கிறான். அதில் முதுமைப் பருவமும் ஒன்று.

மற்ற எல்லா பருவங்களுக்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் மனிதன் இந்த முதுமைப் பருவத்தை எதிர் கொள்ள எந்த முன் நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இது வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய அவலம். இம்மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அந்திம காலம் என்று ஒன்று உண்டு. அதன் முடிவில் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்க்கையில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய உண்மை இது.

ஆனால் மனிதன் முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சுகிறான். ஆகவே அதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறான். அதைப்பற்றி சிந்திக்காமல் இருந்தால் அவை அவன் வாழ்வில் வராமல் போய்விடுமா என்ன?

இதனால் பல முதியவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில், மிகவும் வேதனைப்படுகிறார்கள். தாங்கள் வேதனைப்படுவது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களையும் வேதனைப்படுத்துகிறார்கள்.

ஏதாவது வைத்தியம் செய்து தன்னைப் பழைய மாதிரி (அதாவது இளமை நிலைக்கு) கொண்டு வரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் சொல்ல முடியாது.

பழங்காலத்தில் செவ்விந்தியர் நாடோடிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும்போது நடக்க முடியாதவர்களை பழைய இடத்துலேயே விட்டு விட்டுப் போவது வழக்கம். அந்த ஆளுக்கு முன்னால் குச்சிகளினால் நெருப்பு மூட்டி விட்டு, பக்கமத்திலும் கொஞ்சம் குச்சிகளை வைத்து விட்டுப் போய்விடுவார்களாம். அந்த நெருப்பு முழுவதும் அணைந்த பிறகு ஏதாவது காட்டு மிருகங்க்ள வந்து அந்த ஆளை அடித்து சாப்பிட்டு விடுமாம்.

இந்த நடைமுறையைக் கேட்க காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றினாலும் அவர்களின் வாழ்வில் வேறு வழியில்லாததினால்தான் அப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்.  இன்றும் கூட நம் தாய்த்திரு நாட்டில் மன நோயாளிகளைக் கொண்டு போய் கண் காணாத இடத்தில் விட்டு விட்டு வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பழங்காலத்தில் முதுமக்கள் தாழி இருந்த செய்தி அநேகருக்குத் தெரியும். இன்று சாதாரண குடும்பங்களில் இந்த வழக்கங்களெல்லாம் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் வயதானவர்கள் இருக்கும் குடும்பங்களில் அவர்களைப் பராமரிப்பதில் பல சங்கடங்கள் இருக்கின்றன.

இதைப்பற்றிய சிந்தனை பல நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மரணம் என்பது சிலருக்கு அநாயாசமாக வந்து விடுகிறது. நேற்று பார்த்தேன், நல்லாத்தானே இருந்தார் என்று சொல்லும்படியான மரணங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும்.

மற்றவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் பல துன்பங்களை சந்திக்க நேரலாம். அத்துன்பங்களை ஏதாவது மாத்திரைகள் சாப்பிடுவது மூலம் குறைத்துக்கொள்ளலாமே தவிர முற்றிலும் குணப்படுத்துவது இயலாத காரியம். ஆஸ்பத்திரியில் சேர்த்து உபாதைகளைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் மிகுந்த பொருட்செலவைத் தரும் வேலைகள். தவிர அதற்குத் தகுந்த ஆள் பலம், பொருள் பலம் வேண்டும்.

ஆகவே சிறிதாவது சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு முதுமையில் வரும் துன்பங்களை, மற்றவர்களுக்கு இடைஞ்சல் தாராமல் பொறுத்துக்கொள்ள பழக வேண்டும். இன்றுள்ள சமுதாயத்தில் எது எதற்கோ பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.

இயற்கையைப் புரிந்து அதற்குத் தக்க வாழ எல்லோருக்கும் இறைவன் அருள் புரிவானாக.

புதன், 28 மார்ச், 2012

வயதானவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை

இந்திய நாட்டில் எல்லா மதத்தினரும், வயதில் மூத்தவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். பல பொது இடங்களில், முக்கியமாக, வட இந்தியாவில் இதை வெளிப்படையாக நடைமுறையில் பார்க்கிறோம். இராமாயணம், மகாபாரதம் போன்ற சீரியல்களில் இந்த வழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்.

இந்த வழக்கம் பாலிவுட் உலகில் அறிமுகமாகி, கோலிவுட்டிற்கும் இறக்குமதியாகி, சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், பைனான்சியர்கள் எங்கு போனாலும் அவர்கள் காலைத் தொட்டு வணங்க சினிமாக்காரர்கள் தயங்குவதில்லை. நான் ஒரு முறை ஒரு பிரபல நடிகர் வீட்டிற்குப் போயிருந்தேன். நான் எப்போதும் போல் நின்றுகொண்டே ஒரு வணக்கம் போட்டேன். ஆனால் அங்கு வந்திருந்த வேறு ரசிகர்கள் அவர் காலைத் தொடுவது போல் பாவனை செய்து வணங்கினார்கள். அந்த நடிகர் என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது.

யார் எந்தப் பெரியவர்களை காலைத்தொட்டு அல்லது நின்றுகொண்டு வணங்கினாலும் அவர்களை ஆசி கூறி வாழ்த்த வேண்டும் என்பது மரபு. ஆனால் அதற்கெல்லாம் இன்று நேரமில்லை. ஆனானப்பட்ட கடவுளுக்கே போகிற போக்கில் ஒரு டாட்டா காட்டிக்கொண்டு போகிற அவசர உலகம் இது. ஆனால் கடவுள் வஞ்சகமில்லாமல் எல்லோருக்கும் சலிப்பில்லாமல் அபயஹஸ்தம் காட்டிக்கொண்டு இருக்கிறார்.

அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பெரியவர்கள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகள் பல சமயங்களில் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றன. இது அவர்கள் உணராமல் செய்யக்கூடும். உணர்ந்து செய்தாலும் உணராமல் செய்தாலும் விளைவுகள் ஒன்றே. அவற்றில் சிவற்றை பட்டியலிட்டுள்ளேன்.

1. தொணதொணத்தல் அல்லது புலம்புதல்:
2. துருவுதல்
3. அருவருப்பான செயல்கள்
4. உணவுக்கட்டுப்பாடு இன்மை
5. இலவச அறிவுரைகள்
6. இடம், பொருள் தெரியாமல் பேசுதல்
7. மறத்தல்

இந்த சமாசாரங்களை விரித்து எழுதினால் பலருடைய மனம் நோகும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.