மொழி கற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி கற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 பிப்ரவரி, 2012

நான் ஆங்கிலேயன் ஆனேன்!



நான் தமிழ் மீடியத்தில் படித்ததால் என் ஆங்கிலப் புலமையின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. இன்டர்மீடியட் வகுப்பில் எல்லாப் பாடங்களையும் (தமிழ் தவிர) ஆங்கிலத்தில் போதித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் அப்பாவுக்கு தமிழ்தான் படிக்கத்தெரியும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் என் சொந்தக்காரர்களிலேயே யாரும் இல்லை.

என்ன செய்வதென்று புரியாமல் என் ஆங்கிலப் பேராசிரியர் திரு.நரசிங்கராவ் அவர்களைப் போய்ப் பார்த்து என் பரிதாப நிலையைச் சொன்னேன். அவரும் இரக்கப்பட்டு சில ஆலோசனைகள் சொன்னார். முதலில் சில ஆங்கில கதைப்புத்தகங்கள் படிக்குமாறு கூறினார். அவர் முதன்முதலில் பரிந்துரைத்த புத்தகம் John Buniyan எழுதிய Pilgrims Progress என்ற புத்தகம். அந்த வார இறுதியில் அந்தப் புத்தகத்தை கல்லூரி லைப்ரரியிலிருந்து எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்தேன்.


புத்தகம் சரியான கனம். சுமார் 800 பக்கங்களுக்கு மேல் இருக்கும். இதை எப்படியும் படித்து விடுவது என்று அடுத்த நாள் சனிக்கிழமை அப்போதைய கோஷன் பார்க்குக்கு (இந்நாளில் அதை பாரதி பார்க் என்று பெயர் மாற்றிவிட்டார்கள்) சென்று அங்குள்ள பெஞ்சில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். காலை பத்து மணிக்கு ஆரம்பித்தவன் மாலை 6 மணிக்கு படித்து முடித்து விட்டேன்.

அத் ஒரு கிறிஸ்தவ வேதமான பைபிளைத் தழுவிய ஒரு கதை. ஒரு கிறிஸ்தவன் இறந்த பிறகு எவ்வாறு அவனுடைய பாவங்களைச் சுமந்து கொண்டு பரலோகம் செல்கிறான் என்பதைப் பற்றிய கதை. ஆங்கிலத்திலே பாண்டித்யம் பெற்றுவிடுவது என்ற வைராக்யத்தில் ஒரே மூச்சில் படித்தேன். இதை ஆங்கில ஆசிரியரிடம் சொல்லியதும் அவர் என்னைப் பாராட்டிவிட்டு இனி பிரெஞ்ச் ஆசிரியர் guy de Maupassant என்பவர் எழுதிய சிறுகதைகளின் ஆங்கில பொழி பெயர்ப்பு பல தொகுப்புகள் லைப்ரரியில் இருக்கின்றன, அவற்றைப் படி என்றார். இந்த ஆசிரியர் எழுதியஇரவல் நெக்லஸ்என்ற சிறுகதை உலகப்பிரசித்தி பெற்றது. அந்த தொகுப்புகள் ஒரு பத்துப் பனிரெண்டு இருந்தன. அவற்றை முழுவதும் படித்தேன்.

பிறகு சார்லஸ் டிக்கன்ஸ், மார்க் ட்வைன், கோனன் டாயில், ஸ்டீவன்சன், எச்.ஜி.வெல்ஸ், இப்படி கிடைத்தவைகளை எல்லாம் படித்து ஓரளவு ஆங்கிலத்தில் சுயமாக புரியும் அளவிற்கு தேர்ச்சி பெற்றேன்.

இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதுவது கடினகாகவே இருந்தது. எந்த மொழியிலும் வினைச் சொற்களின் சரியான பிரயோகம் தெரிந்து கொண்டால் அந்த மொழியில் பிழையில்லாமல் எழுதுவது மிகவும் சுலபம். ஹைஸ்கூலில் என் வாத்தியார் இந்த வித்தையைச் சொல்லிக் கொடுக்கவில்லை. அப்போது ஒரு ஆங்கில இலக்கணப் புத்தகம் வாங்கி வைத்திருந்தேன். அதை இப்போது எடுத்து தூசி தட்டி வினைச்சொற்கள் பகுதியைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது ஆங்கிலத்தில் வினைச்சொற்களில் நான்கு வகை இருக்கிறது என்று.

1.   Present imperfect           I eat
2.   Present perfect            I have eaten
3.   Present continuous          I am eating
4.   Present perfect continuous    I have been eating

இது நிகழ்காலத்துக்கு. இது போல் இறந்த காலம், எதிர் காலத்திற்கும் நாலு நாலு வகைகள் உண்டு. இது தவிர, ஆண்பால், பெண்பால், உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை, செய்வினை, செயப்பாட்டு வினை இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான வினைச்சொல்.
தமிழில் எழுதி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, திரும்பத் திரும்ப பயிற்சி செய்ததில் ஓரளவு ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுதக் கற்றேன். பிற்காலத்தில் மேற்படிப்பு படிக்கும்போதும், ஆசிரியராகப் பணிபுரிந்தபோதும், பல தலைமைப் பொறுப்புகள் வகித்த போதும் இந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது.  

இந்தக் காலத்து இளைஞர்கள் புத்தகம் படிப்பதையே நிறுத்திவிட்டார்கள் என்று தோன்றுகிறது. காலம் மாறுகிறது. என்னை மாதிரி கிழடுகள் புலம்பத்தான் முடியும்.