என்னுடைய போன பதிவில் இப்படி முடித்திருந்தேன். இந்தப் பதிவு எழுது முன் பல சந்தேகங்கள் என்னுடைய மனதில் தோன்றின. அதாவது உண்மை எப்போதுமே கசக்கும். பலருக்கு சங்கடங்களை உண்டு பண்ணும். அதில் ஒரு சிலருக்கு போலீஸ் கமிஷனரைத் தெரிந்து இருக்கலாம். இந்தப் பதிவைப் பற்றி அவரிடம் சொன்னால், என் கைகளுக்கு காப்பு வருவது நிச்சயம்.
இது வரை நான் கையில் கடிகாரத்தைத் தவிர வேறு எதுவும் போட்டதில்லை. கடைசி காலத்தில் இந்த பரிசோதனைகளெல்லாம் வேண்டுமா என்று இரவு முழுவதும் சிந்தித்தேன். ஆகவே நான் சொன்ன பதிவுக்குப் பதிலாக ஒரு கதை சொல்லலாம் என்று முடிவு செய்து இந்தப் பதிவை எழுதுகின்றேன்.
இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் கரிகால் சோழன் காலத்தில் நடந்ததாக கற்பனை செய்திருக்கிறேன். அவை முற்றிலும் கற்பனையே.
இதில் கூறப்பட்ட செய்திகள் மாதிரி இந்தக்காலத்திலும் நடக்கலாம். சரித்திரம் திரும்பவும் வரும் என்று ஒரு பிரபல ஆங்கிலப் பழமொழி உண்டு. அப்படி ஏதாவது சம்பவங்களில் ஒற்றுமை தெரிந்தால் அது படிப்பவர்களின் கண் கோளாறுதானே தவிர அதில் அணுவளவும் உண்மை இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கரிகால் சோழன் பெரிய படை வைத்திருந்தான். அதில் காலாட்படைதான் மிகவும் பெரிது. அவர்களுக்கு சாப்பாட்டுக்காக வாரம் ஒரு முறை அரிசி கொடுப்பான். இப்படி அரிசி கொடுப்பதற்காக ஒரு மந்திரியும் அவருக்கு உதவியாக பல சிப்பந்திகளும் இருந்தார்கள். அரிசியை மொத்தமாக வாங்கி ஒரு கிட்டங்கியில் சேமித்து வைப்பார்கள். அங்கிருந்து படைவீரர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு அரிசி வாங்கிக்கொள்வார்கள்.
இந்த அரிசி தயார் செய்வதற்கு ஒரு பெரிய வியாபாரி இருந்தான். அவன் நெல் கொள்முதல் செய்து அதை வேகவைத்து அரைத்து அரிசியாக்கி இந்த கிட்ங்கிகளுக்கு அனுப்பிவிடுவான். அரிசியை நன்றாக காயவிடமாட்டான். ஈரத்துடனேயே அனுப்பிவிடுவான். கிட்டங்கியில் படைவீரர்களுக்கு ஒரு வருடத்திற்கு வேண்டிய அரிசியை இருப்பு வைத்திருப்பார்கள். புதிதாக வரும் அரிசி மூட்டைகளையும் இதனுடன் வரிசையாக அடுக்கி வைத்து விடுவார்க்ள.
வீரர்களுக்கு எப்போதும் பழைய அரிசியையே தருவார்கள். ஏனென்றால் அந்த அரிசியை அதற்கு மேல் வைத்திருந்தால் தாங்காது. புதிதாக வந்த அரிசியை வீரர்களுக்குக் கொடுக்க ஒரு வருடம் ஆகும். இதுதான் நடைமுறை.
அதில் ஒரு சில வீரர்கள் மட்டும் சாப்பிடும் சாப்பாடு வித்தியாசமாக இருந்தது. அது எப்படி என்று மற்ற வீரர்கள் ஆராய்ந்தார்கள். கிட்டங்கியிலேயே சில அரிசி மூட்டைகளில் நல்ல தரமான அரிசி இருக்கும். அந்த வியாபாரி கவனிக்காதபோது சில நல்ல அரிசி மூட்டைகளும் இவ்வாறு இந்த கிட்டங்கிகளுக்கு வய்துவிடும். கிட்டங்கி சிப்பந்திகளுக்கு இந்த விவரம் தெரியும். அவர்கள் தங்களுக்கு வேண்டிய வீரர்களுக்கு தகுந்த கையூட்டு வாங்கிக்கொண்டு அந்த நல்ல அரிசியைக் கொடுப்பார்கள். இது பரம ரகசியமாக நடக்கும்.
ஆனால் யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கையூட்டு அனைவருக்கும் பங்கிடுதலால் ஒருவரும் வாயைத்திறக்க மாட்டார்கள்.
அவ்வளவுதான் கதை. எல்லோரும் தூங்கப்போங்க.