வம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஏப்ரல், 2013

15. தூதரகத்தில் ரெய்டு


அன்று இரவு தூங்கிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்தேன். மணியைப் பார்த்தேன். மணி காலை 2. இன்னேரத்தில் என்ன சலசலப்பு என்று வாயில் காவலாளியைக் கூப்பிட்டுக் கேட்டேன். அவன் ஐயா. நிறைய போலீஸ், மற்றும் பல அதிகாரிகள் வந்து உள்ளே விடும்படி சத்தம் போடுகிறார்கள் ஐயா, என்றான்.

அப்படியா அதில் முக்கிய அதிகாரியை மட்டும் உள்ளே விடு. நான் என் ஆபீசுக்கு வருகிறேன் என்றேன். அவன் சிறிது நேரம் கழித்து, ஐயா, எல்லோரும் ஒன்றாகத்தான் உள்ளே வருவார்களாம், என்னை கேட்டைத் திறக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள் ஐயா, என்றான். ஒரு நிமிஷம் இருக்கச்சொல்லு, நானே வருகிறேன் என்று சொல்லிவிட்டு நான் வாசலுக்குப் போனேன்.

அங்கு நான் கண்ட காட்சி இரண்டாம் உலகப் போரை நினைவு படுத்தியது. நூற்றுக்கணக்கான ஜீப்புகள், டாங்கிகள், லாரிகள், ஆயிரக்கணக்கில், பலரேங்கில்  போலீஸ்காரர்கள் மற்றும் சிவில் டிரஸ்சில் பல அதிகாரிகளும் அங்கு கூடியிருந்தார்கள். கொஞ்சம் நடுத்தர ரேங்கில் இருக்கும் போலீஸ்காரர்கள் காவலாளியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஹா, தலை (அந்த அரசியல்வாதி) பெரிய வேலை செய்திருக்கிறான் போல் இருக்கிறது. அவனைத் தனியாக கவனிப்போம். இப்போது இவர்களைக் கவனிப்போம் என்று முடிவு செய்து வெளியில் வந்தேன். நீங்கள் எல்லாம் யார், எதற்காக இந்நேரத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அதில் முக்கியமாகத் தென்பட்ட அதிகாரி, நாங்கள் இந்த தூதரகத்தை ரெய்டு பண்ண வந்திருக்கிறோம் என்றார்.

அப்படியா, சந்தோஷம், தூதரகத்திற்கு சில விதிகள் உண்டல்லவா? அதன் பிரகாரம் பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதி உத்திரவு இல்லாமல் யாரும் உள்ளே நுழையக் கூடாது என்பது தெரியுமா என்றேன். அது எல்லாம் எங்களுக்குத் தெரியும், எங்களை உள்ளே விடப்போகிறாயா இல்லையா என்று மிரட்டும் தொனியில் கேட்டார். விடச்சொல்லுகிறேன், ஆனால் இதனால் வரும் விளைவுகளுக்கெல்லாம் நீங்களேதான் பொறுப்பு, நான் உங்களை எச்சரிக்கை பண்ணவில்லை என்று பிறகு சொல்லக்கூடாது என்றேன்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்றார் அந்த அதிகாரி. எல்லோரையும் உள்ளே அனுமதிக்கச் சொன்னேன். எல்லோரும் முதலில் எல்லோரும் ஒரு இடத்தில் உட்காரலாம், உங்களுக்கு என்ன வேண்டுமோ, கேளுங்கள், அதை செய்கிறேன் என்றேன். எல்லோரும் கான்பரன்ஸ் ஹாலில் உட்கார்ந்தார்கள். சுமார் ஐயாயிரம் பேர் இருக்கும். எங்கள் பக்கம் நான், பொது, செக்கு, நாலைந்து காவலாளிகள் இவ்வளவு பேர்தான்.

எல்லோரும் உட்கார்ந்த பிறகு நீங்கள் எல்லாம் எந்தெந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றேன். அவர்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், இந்திய அரசின் விவசாயத் துறை நீங்கலாக மற்ற அனைத்துத் துறைகளிலிருந்தும் அதிகாரிகளும், குட்டித்தேவதைகளும் வந்துள்ளார்கள்.

நீங்கள் எல்லோரும் ஒன்றாக வந்த காரணம் என்னவோ என்றேன். நாங்கள் இந்தத் தூதரகத்தை முழுமையாக ரெய்டு பண்ணவேண்டும் என்றார்கள். நான் கேட்டேன், அப்படி ஒரு அயல்நாட்டுத் தூதரகத்தை ரெய்டு பண்ணவேண்டுமென்றால் அதற்கு இந்நாட்டு மந்திரி சபை ஒப்புதல் கொடுத்து ,இந்தத் தூதரகத்திற்கு முன் அறிவிப்பு கொடுத்த பின்தானே செய்ய முடியும். அப்படி எதுவுமில்லாமல் திடீரென்று வந்திருக்கிறீர்களே, இதற்கு யார் உங்களுக்கு உத்திரவு கொடுத்தார்கள் என்றேன்.

எங்கள் மேலதிகாரிகள் ஒப்புதல் கொடுத்த பிறகுதான் நாங்கள் வந்துள்ளோம் என்றார்கள். அப்படியானால் அந்த மேலதிகாரிகளை வரச்சொல்லுங்கள், நான் அவர்களுடன் பேச வேண்டும் என்றேன். அங்கிருந்த சீனியர் அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது. நீ எங்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் நினைத்தால் உன்னை இப்போதே அரெஸ்ட் பண்ண முடியும் என்றார். பிறகு எல்லோரும் புறப்பட்டு அவரவர்கள் வேலைகளைப் பாருங்கள் என்று பின்னால் திரும்பி உத்திரவு போட்டார்.

எல்லோரும் எழுந்திருக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு நிமிடம் என்று அவர்களைக் கையமர்த்தி உட்கார வைத்து விட்டு சொன்னேன். நீங்கள் அனைவரும் ஒரு அயல் நாட்டுத் தூதரகத்திற்குள் அத்து மீறி நுழைந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் இந்நாட்டின் கைதிகள். என் அனுமதியின்றி நீங்கள் அசையக்கூட முடியாது. பேசாமல் நான் சொல்லுகிற மாதிரி நடந்து கொள்ளுங்கள். தவறினால் நீங்கள் உங்கள் பிள்ளை குட்டிகளை இந்த ஜன்மத்தில் பார்க்க முடியாது என்றேன்.

எல்லோரும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்கள எடுத்து என் மேல் பிரயோகிக்க தயார் ஆகிவிட்டார்கள். என் ஒரு கையசைப்பில் அத்தனை ஆயுதங்களும் என் மேஜைக்குப் பின்னால் வந்து விழுந்தன. ஒருவராலும் அவர்கள் ஆசனத்தை விட்டு எழுந்திருக்க முடியவில்லை.

இதற்குள் ஒரு கிங்கரனை அனுப்பி அந்த தலையையும் வட்டத்தையும் பிடித்து வரச்சொன்னேன். அவர்கள் இந்தக் கூட்டத்தைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள். இது அவன் வேலை என்று சொல்லாமல் சொல்லி விட்டான். தலை என்னைப் பார்த்து எதற்காக என்னை இங்கு தூக்கிக்கொண்டு வந்தீர்கள் என்று சத்தம் போட்டான். நான் அவனைப் பார்த்து நீ நேற்று என் காலில் விழுந்ததைப் பார்த்து நான் ஏமாந்து போனேன். ஆனாலும் நீ கெட்டிக்காரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்த ரெய்டை நீ யார் மூலமாக ஏற்பாடு செய்தாய் என்று சொன்னால் அவர்களுடன் பேச சௌகரியமாக இருக்கும் என்றேன். அந்த மடையன் எனக்கு இந்த ரெய்டு பற்றி ஒன்றுந் தெரியாது என்றான். அப்படியா என்று சொல்லிவிட்டு, ஒரு கிங்கரனைக் கூப்பிட்டு தலைவரை சித்திரகுப்பதனிடம் கூட்டிக்கொண்டு போய் நம் பாணியில் கொஞ்சம் கவனித்து இந்த விவகாரத்தில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் இவன் வாயிலிருந்து வர வழைத்து அனைவரையும் இங்கே கூட்டி வாருங்கள் என்றேன்.

அரை மணி நேரத்தில் அனைத்து நபர்களும் வந்து விட்டார்கள். இந்த தலைவனுக்கு பிஎம் ஆபீசில் ஒரு பிஏ வைத்தெரியும். அவனிடம் சொல்லி அனைத்து துறைத் தலைவர்களுடனும் சொல்லி இந்த ரெய்டை ஏற்பாடு பண்ணியிருக்கிறான். துறைத் தலைவர்களை எல்லாம் முன் வரிசையில் உட்கார வைத்து அவர்களைக் கேட்டேன்.

தூதரகத்திற்கு என்று சில பாதுகாப்புகள் உண்டல்லவா? அந்த விதிகளின் படி தூதரகத்தை ரெய்டு பண்ண வேண்டுமென்றால் பிரதம் மந்திரி நேரடியாக உத்திரவு கொடுக்கவேண்டுமல்லவா? அப்படி உங்களுக்கு உத்திரவு கிடைத்துத்தான் உங்கள் ஆட்களை இங்கே அனுப்பினீர்களா? பதில் சொல்லுங்கள் என்றேன். பிரதம மந்திரி இந்த ரெய்டை அப்ரூவ் பண்ணியிருக்கிறார் என்று இந்த பிஏ சொன்னார், அதனால் ரெய்டை அனுமதித்தோம் என்றார்கள்.

அந்தப் பிஏ வைக் கேட்டேன். இந்த ரெய்ட் நடக்கும் விஷயம் பிரதம மந்திரிக்கு தெரியுமா என்றேன். அவன் சொன்னான், இந்த தலைவன் என்ன கேட்டாலும் அதைச் செய்யும்படி பிஎம் சொல்லியிருக்கிறார் என்றான். அப்படியானால் இந்தத் தலைவன் ஒருவனைக் கொலை செய்யும்படி கேட்கிறான், அப்படி செய்வாயா என்று கேட்டேன். "பெப்பெப்பே" என்று முழித்தான். சரி இருக்கட்டும், பிரதம மந்திரியையே வரச்சொல்லுவோம், அவரே வந்து இதை விசாரிக்கட்டும் என்று சொல்லி பிரதம மந்திரிக்குப் போன் போட்டேன்.

அவரிடம் உங்கள் ஆபீசர்கள் எல்லாம் தேவலோக தூதரகத்தை ரெய்டு பண்ணுவதற்காக வந்திருக்கிறார்கள். நீங்கள்தான் இந்த ரெய்டுக்கு பர்மிஷன் கொடுத்ததாக உங்கள் பிஏ சொல்லுகிறான் என்றேன். அவர் போனிலேயே மன்னிப்பு கேட்டுவிட்டு பத்து நிமிடத்தில் நிதி அமைச்சர், உள்துறை, வெளி உறவுத்துறை மந்திரிகள் புடை சூழ வந்து விட்டார். அவரைப் பார்த்துத் அனைவரும் பேயறைந்தது போல் ஆனார்கள்.

அவருடைய பிஏ வைக்கூப்பிட்டு இது எப்படி ஏற்பட்டது என்று கேட்டார். அவன் இந்த தலை சொன்னதை செய்யவேண்டும் என்று முன்பு நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அதனால் செய்தேன் என்றான். அப்படியா, அவன் என்னைக் கொல்லும்படி சொல்லுகிறான், அப்படியே செய்வாயா என்று கேட்டார். அவன் பதில் சொல்ல முடியாமல் விழித்தான்.

பிறகு அவர் துறை அதிகாரிகளைப் பார்த்து தூதரக "டிப்ளொமேடிக் இம்யூனிடி" சட்டங்கள் உங்களுக்குத் தெரியுமல்லவா, தெரிந்தும் ஒரு பிஏ சொல்வதைக் கேட்டு இந்த மாதிரி செய்திருக்கிறீர்களே, உங்களுக்கு சொந்தமாக மூளை இல்லையா? என்று சகட்டு மேனிக்கு அவர்களைச் சாடினார். எல்லாப் பயல்களும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பிறகு என்னைப் பார்த்து இந்தப் பயல்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்றார்.

நியாயமாக அனவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆனால் எல்லோரும் பிள்ளைகுட்டிக் காரர்களாய்த் தெரிகிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு இன்கிரிமென்ட்டை நிறுத்தி ஆர்டர் போட்டு விடுங்கள் என்றேன். அப்போதே உள்துறை செயலரை விட்டு அந்த ஆர்டர்களை டைப் செய்து ஒவ்வொருவருக்கும் கையிலேயே கொடுக்கப்பட்டது.

பிறகு எல்லோருக்கும் காலை டிபன் கொடுக்கச்சொன்னேன். பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் என்னிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனதும்  இந்த அதிகாரிகள் தங்கள் ஆயுதங்களை திருப்பிக் கேட்டார்கள். அவைகள் உங்கள் ஞாபகார்த்தமாக  இங்கேயே இருக்கட்டுமே என்றேன். அவர்களை ஐயோ, ஐயோ, இவை எங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட ஆயுதங்கள், அவைகள் இல்லாவிட்டால் எங்கள் வேலையே போய்விடும் என்று மூக்கால் அழுதார்கள்.

எடுத்துக் கொண்டு போங்கள். ஆனால் உங்கள் ஆயுளுக்கும் இந்தப் பாடம் மனதில் இருக்கட்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன். இந்த சந்தடியில் தலையும் வட்டமும் தப்பிக்கப் பார்த்தார்கள். அவர்களை நீங்கள் போகவேண்டாம் இருங்கள் என்று சொல்லி ஒரு கிங்கரனைக் காவலுக்குப் போட்டேன்.

எல்லோரும் போன பிறகு அவர்கள் இருவரையும் தனியாகக் கூப்பிட்டேன். என்னைப் பாரத்ததும் அவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான்தான் தலையைப் பார்த்து இனி என்ன செய்வதாக உத்தேசம் என்றேன். ஐயா எங்களை மன்னியுங்கள் என்று கேட்கக்கூட எங்களுக்கு அருகதை இல்லை, இனி நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறோம் என்றார்கள்.

முதலில் அந்த நிலங்களை எல்லாம் ஒழுங்காக எங்கள் பெயருக்கு மாற்றிவிடுங்கள். பிறகு தலை வைத்திருக்கும் எல்லா சொத்துக்களையும் அரசுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். தலை வைத்திருக்கும் அனைத்து ரொக்கங்களும் ஏற்கனவே அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு விட்டன. இரண்டு நாளில் இவைகளை எல்லாம் முடித்து விட்டு இருவரும் இங்கே வாருங்கள். இந்தத் தடவை ஒன்றும் கோல்மால் பண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன். எதற்கும் செக்கு உங்கள் கூடவே இருப்பார். போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.