வழி சொல்லுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழி சொல்லுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூலை, 2013

வழி சொல்லத் தெரியுமா ?


நேற்று நான் கடைக்கு ஒரு பொருள் வாங்கப் போகும்போது ஒரு பெண் என்னிடம் வந்து " ஐயா, இங்கு காயின் பாக்ஸ் போன் எங்காவது இருக்கிறதா" என்று கேட்டாள். நான் அவள் "காயின்" அதுதான் ஒரு ரூபாய் காசு இல்லாமல் கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு என் பர்சை எடுத்தேன்.

அதற்கு அவள் "ஐயா, என்னிடம் காசு இருக்கிறது, காயின் பாக்ஸ் போன் பக்கத்தில் இருக்கிறதா?" என்று கேட்டாள். கொஞ்ச தூரத்தால் ஒரு போன் இருந்ததைக் காட்டினேன். அவள் தயங்கினாள். சரி போனில் என்ன பேசவேண்டும் என்று கேட்டேன். அதற்ஃகு அவள் நான் இங்கு என் சித்தி வீட்டிற்கு வந்தேன். வழி தெரியவில்லை, அதனால் அவர்களுக்கு போன் செய்து வழி கேட்கவேண்டும் என்றாள். நான் என் செல்போனை எடுத்து அவள் சொன்ன எண்ணுக்கு போன் செய்து அவளிடம் கொடுத்தேன்.

ஒரு நிமிடம் பேசினாள். அவர்களை என்னிடம் பேசச் சொல், நான் விவரம் கேட்டு உனக்குச் சொல்கிறேன் என்று சொல்வதற்குள் போன் கட் ஆகிவிட்டது. சரி என்ன சொன்னார்கள் என்றேன். கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோரிலிருந்து நேராக வரவும் என்று சொன்னார்கள் என்றாள்.

இதைப் போன்ற மொட்டையான வழியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நேராக வரவும் என்றால் எந்த ரோட்டில் என்று சொல்லவேண்டாமோ? அந்தப் பெண் என் பின்னாலேயே வர ஆரம்பித்தது. நான் திரும்பவும் அந்த நெம்பரைக் கூப்பிட்டு "அம்மா, உங்க வீடு எங்கேயிருக்குறது என்று அழுத்தமாகக் கேட்டேன்.

அப்போது அந்த அம்மா அவர்கள் இருக்கும் வீட்டைச் சொன்னார்கள். அது என் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு. அந்தப் பெண்ணிற்கு வழி சொல்லி அனுப்பி வைத்தேன்.

நான் சமீபத்தில் எங்கள் ஏரியாவிலேயே ஒரு அபார்ட்மென்ட்டுக்குப் போக வேண்டி இருந்தது. அந்த அபார்ட்மென்ட் பெயரில் மூன்று இடங்களில் அபார்ட்மென்ட் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் பெயரில் சிறிய வித்தியாசமே. அரை மணி நேரம் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் வழி கேட்டேன். அந்த ஆள் அவ்வளவு படித்தவராகத் தென்படவில்லை. இருந்தாலும் வழி சரியாக சொன்னார்.

சார் இங்கிருந்து இந்த ரோட்டில் நேராக சென்றால் ஒரு ஸ்கூல் வரும் அங்கு வலது பக்கம் திரும்பி போய் மூன்றாவது ரோட்டில் இடது பக்கம் திரும்புங்கள். அங்கிருந்து  மூன்றாவது கட்டில் வலது பக்கமாக திரும்பி நேராகப் போனால் நீங்கள் தேடும் அபார்ட்மென்ட் வந்து விடும் என்றார். அதேபோல் சென்று அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் போகவேண்டிய அபார்ட்மென்ட்டுக்கு போய்ச் சேர்ந்தேன்.

 ஆகவே வழி சொல்லும்போது, அவர்களுக்குப் புரியும்படியாக தெளிவாக வழி சொல்லவேண்டும். தெளிவில்லாமல் சொல்லப்படும் வழிகளினால் எவ்வளவு சிரமங்கள் ஏற்படுகின்றன.

நான் ஸ்வீடன் போயிருந்தபோது அங்கிருந்து நேதர்லாந்தில் உள்ள சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் பார்க்க விரும்பினேன். அதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு வருவதற்கான வழியை ஒரு பேக்ஸ் மூலம் நான்கே நான்கு வரியில் தெரியப்படுத்தியிருந்தார்கள். சுருக்கமாகவும் தெளிவாகவும் எந்த குழப்பமுமில்லாமல் அந்த செய்தி இருந்தது. அதைப் பற்றி அடுத்த பதிவில்.