வாழ்க்கை முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

குடும்பப் பழக்கங்களில் நவீனம்

காலத்தின் கோலத்தினால் பல பழக்கவழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. உறவுகளின் நெருக்கம் குறைந்துகொண்டு வருகிறது. இது காலத்தின் கட்டாயம்.

வீட்டிற்கு உறவினர் வருவதையே தொல்லையாக பலர் நினைக்கிறார்கள். காரணங்கள் பல. இன்றைய போட்டி உலகத்திலே, பல சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. குழந்தைகளின் படிப்பு, அவர்களை நல்ல மேற்படிப்பு படிக்கவைக்க பெற்றோர்கள் படும் அவஸ்தை, விலைவாசிகளைச் சமாளிக்கப் படும்பாடு, ஆகியவை உறவுகளை ஒதுக்கி வைக்கச் செய்கிறது.

அடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவு முறைகளே தெரியாமல் போகலாம். விடுமுறையில் உறவினர் வீடுகளுக்குப் போய் சில நாட்கள் இருக்கும் பழக்கம் ஏறக்குறைய மறந்தே போய்விட்டது. இவைகளை நினைத்து பயன் ஏதும் இல்லை.

வீட்டுக்கு யாராவது வந்தால் வரவேற்பது எப்படி என்று இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்பார் யாரும் இல்லை. சில நாட்களுக்கு முன் என் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டுப் பெண்ணுக்கு கல்யாணம் பேசி முடித்திருக்கிறார்கள். நான் அந்தப் பெண் எங்கே என்று கேட்டேன். மேலேயுள்ள அவள் ரூமில் இருக்கிறாள் என்று பெண்ணின் தாயார் சொன்னாள். அரை மணி நேரம் கழித்து நான் திரும்பும் வரையிலும் அந்தப் பெண் கீழே வரவுமில்லை, அந்தப் பெண்ணின் தாயார் அவளைக் கூப்பிடவுமில்லை.

இந்தப் பெண் கணவன் வீட்டுக்குப் போனபின்பும்  இப்படித்தானே இருப்பாள்? இதை நான் சுட்டிக் காட்டினால் கிழவனுக்கு வேறு வேலை என்ன? சும்மா இருக்க முடியாதா? என்று நினைப்பார்கள். நான் என் பெண்ணிடம் கேட்டேன். இந்த மாதிரிப்பெண்கள் கணவன் வீட்டுக்குப் போய் என்ன வேலை செய்வார்கள் என்று. அதற்கு என் பெண் சொன்ன பதில் என்னைத் தூக்கிவாரிப்போட்டது. அவள் எதற்கு வேலை செய்யவேண்டும்? அங்கு வேலைக்காரர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் வேலை செய்துவிட்டுப் போகிறார்கள் என்றாள்.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நமக்கு இனிமேல் இந்த உலகில் வாழ அருகதையில்லை என்று. ஆனால் என் குறையை யார் நிவர்த்திப்பார்கள்?