விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

நான் பெற்ற விருது

திருமதி ரஞ்சனி நாராயணனுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றி. இவர் ஒரு பிரபல பதிவர். பல வருடங்களாக பிளாக்கில் எழுதி வருகிறார். பதிவர் சந்திப்புகளில் நேரிலும் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்து என்னை மிகவும் கௌரவப்படுத்தி இருக்கிறார்கள்.

                              versatile-blogger
இந்த விருது ஒரு பெரிய விருது என்று கருதுகின்றேன்.  இந்த விருதை எனக்களித்தற்காக அவருக்கு மீண்டும் நன்றி.

உலகில் எதுவும், தாயன்பு உட்பட, இலவசம் அல்ல என்று எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அப்படியே இந்த விருதுக்கும் சில விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

1. இந்த விருதினை என்னுடைய பிளாக்கில் போடவேண்டும். இது ஒரு ஜுஜுபி வேலை. காப்பி, பேஸ்ட் வேலை. அதைத்தான் தினமும் செய்து பழகி விட்டோமே. அதனால் அதை சுலபமாகச் செய்து விட்டேன்.

2. விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லவேண்டும். இதுவும் மிகவும் சுலபம்தான். அதையும் செய்து விட்டேன்.

3. என்னைப்பற்றி சில விஷயங்கள் கூற வேண்டும். இது கொஞ்சம் கடினமான வேலை. நான் இப்போதெல்லாம் எந்த கடின வேலையையும் செய்வதில்லை. ஆகவே இந்த வேலையைத் தவிர்க்கிறேன். தவிர தற்பெருமை குற்றம் என்று நன்னூலில் சொல்லியிருக்கிறது. நான் ஒரு நன்னூல்தாசன்.

4. இந்த விருதை இன்னும் சில பேர்களுக்கு அளிக்கவேண்டும். இதுதான் இந்த விருதின் மிகக் கடுமையான நிபந்தனை. இந்தக் காரணத்திற்காகவே இந்த விருதினையே மறுக்கலாமா என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் அன்புடன் ஒருவர் கொடுக்கும் எதையும் நிராகரிக்கலாகாது என்னும் கருத்து காரணமாக இந்த விருதை ஏற்றுக்கொண்டேன்.

இப்படி நான் சொல்வதற்கு காரணம் இப்படியே ஒவ்வொருவரும்  பலருக்கு இந்த விருதைக் கொடுக்க முற்பட்டால் கொஞ்ச நாளில் இந்த விருதை வாங்குவதற்கு பதிவர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள். இந்தக் காரணத்தை முன்னிட்டு நான் இந்த விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை.

ஆக மொத்தம் நான் பதிவர்களிலேயே வித்தியாசமானவன் என்பதை உணர்த்தி விட்டேன். அந்த வகையில் இந்த விருது எனக்கு மிகவும் பொருத்தமே.

திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.