விழா நடத்துதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழா நடத்துதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 நவம்பர், 2015

பதிவர் விழா பற்றிய சில கருத்துகள்

                                    

திரு ஹரணி அவர்கள் ஒரு பிரபல கதாசிரியர். கரந்தையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த புதுக்கோட்டை பதிவர் மகாநாட்டு போட்டிகளில் சுற்றுச் சூழல் என்கிற தலைப்பில் வந்த கட்டுரைகளை ஆய்வு செய்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தார். நல்ல கட்டுரைகளைத்தான் பரிசுக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனாலும் எனக்கு உள்ளூர ஒரு வருத்தம். ஒரு பேராசிரியராக இருந்துகொண்டு, பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒருவரின் கட்டுரையைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
இருந்தாலும் அவருடைய எழுத்துக்களை நான் படித்து வந்தேன். அதில் அவர் ஒரு பதிவருக்குப் போட்டிருந்த பின்னூட்டங்களில் புதுக்கோட்டை பதிவர் மகாநாட்டின் செயல்பாடுகளுக்குப் பின் உள்ள நுணுக்கங்கள் பலவற்றைச் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நுணுக்கங்கள் இனி வரும் எந்த பொது நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.
பொதுவாகப் பதிவுலகில் பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் மிகக்குறைவு. அதனால் பல நல்ல கருத்துகள் வெளியில் தெரியாமல் போகின்றன. ஆகவே அவைகளை ஒரு தனிப்பதிவாகப் போட விரும்பினேன். அவரிடம் அதற்கான அனுமதி கேட்டேன். சந்தோஷமாகக் கொடுத்தார். சம்பந்தப்பட்ட பதிவரின் பெயர் தெரியாத மாதிரி கொஞ்சம் திருத்தங்கள் செய்திருக்கிறேன்.
      இப்போது திரு ஹரணி அவர்களின் கருத்துகள்.

வணக்கம். வலைப்பதிவர் விழா குறித்த உங்களின் தொடர் கருத்துரையை (கட்டுரையை) வாசித்தேன். எனவே இது குறித்து உங்களிடம் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

மனித இனம் மொழியைக் கண்டறியத் தொடங்கிய காலத்துப் பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழிக்கு வந்த காலக்கட்டம் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியது. எழுத்து மொழியில் படைப்பை உருவாக்கத் தொடங்கிய காலத்து இது குறித்த திறனாய்வில் அறிஞர்கள் தனி மனிதனின் சுயத்தை வெளியிடவும் தனக்குத் தெரிந்ததை அடுத்தவர்க்குக் காட்சிப்படுத்தவும் தான் தனித்துவமும் திறமையுமிக்கவன் என்பதையும் உணர்த்தவே படைப்பாக்கம் நிகழ்ந்தது என்று கருத்துரைத்தனர். பின்னர் அப்படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தின் கணிசமான விழுக்காட்டில்தான் அது சமூகநலனுக்கானதாக மாறுகிறது எனும்போது அடுத்த தன் படைப்பின் தன்மையைப் படைப்பாளன் வெளிப்படுத்துகிற சூழல் மாற்றமடையத் தொடங்கியது.

இவ்வாறு தன்னுடைய திறன், படைப்பாக்கத்திறன், கற்பனை, ஆற்றல், அறிவு, அனுபவம் இவற்றைப் படைப்பாளன் வெளியிடத்தொடங்கினான். இதன் உச்ச வளர்ச்சியில் கணினியும் இணையமும் நன்கு பழக்கத்திற்கு வந்தபின்னர் வலைப்பக்கம் ன்பதை உணரத் தொடங்கினோம். வலைப்பக்கம் என்பது அவரவர் வயது, வாழ்க்கைச்சூழல் , அனுபவவெளியில் எதனையும் எழுதி அது குறித்து அறியக் காத்திருந்தார்கள். இச்சூழலில் வலைப்பக்கம் என்பது பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிப் பல சுவாரஸ்யங்களைப் பரிமாறத் தொடங்கியது. விருப்பப்பட்டவர்கள் இதற்குக் கருத்துரை எழுதினார்கள். அது அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் பிடித்திருந்தது. இதனால் எழுதியவர்களும் எழுதியதை வாசித்தவர்களும் ஒரு பிடிக்குள் இருந்து விடுபடலை உணர்ந்தார்கள். அது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அவர்களை யாரும் வாசிப்பதற்கோ அல்லது கருத்துரைப்பதற்கோ தடுப்பதற்கு இல்லாமல் இருந்த சுதந்திர வெளியாக வலைப்பக்கம் இருந்தது. அல்லது வாழும் காலத்தில் அவர்களின் சொற்களை மதிக்காதவர்களும் ஏற்காதவர்களும் நிராகரித்தவர்களும் ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தாகவும் மேலும் பாராட்டுரைக்கையில் மதிப்பிற்குரிய ஒன்றாகவும் அவர்களுக்கு வலைப்பக்கங்கள் எல்லா சுதந்திரங்களையும் சுவையான தருணங்களையும் தந்திருந்தது. என்றாலும் எதிரான கருத்துரைகளும் வெளியிடப்பட்டாலும் அதனை ஏற்பதுபோல அதற்கு மறுத்தோ அல்லது தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்றோ பதிலுரைப்பதற்கும் வலைப்பக்கம் உதவியது. இதன் பொருள் மனித வாழ்க்கை குறைகளும் நிறைகளும் கலந்து கலந்தே எப்போதும் இருக்கும் என்பதை மறைபொருளாகக் கொண்டது என்பதுதான்.

படைப்பவர்கள் எல்லோரும் படைப்பாளிகள் என்பதில் நுட்பமான வேறுபாடுகள் நிறைந்து கிடக்கின்றன. எழுத்துக்களோடு நின்றுவிடுகிற படைப்பாளிகள் பலர். எழுத்துக்களோடு சில தேவைகளை உள்ளடக்கிக் களத்தில் இறங்குகிறவர்கள் சிலர். முழுக்க முழுக்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொள்கிறவர்கள் சிலர். இந்த மூன்றாவது பிரிவுதான் படைப்பிலக்கியம் என்பதையும் அது சமூகத்தின் அவலத்தையும் தேவையையும் சிக்கலையும் உணர்ந்து போராடுவது என்பதை உறுதிச்செய்வதாகும். அண்ணல் காந்தியடிகள், பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ், மார்ட்டீன் லூதர் கிங், அன்னை தெரசா எனப் பெருகி நிற்கும் சான்றுகளில் சிலவாக இவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் யாரும் வலைப்பக்கங்களை ஏற்படுத்திக்கொண்டவர்கள் இல்லை. இவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அல்லது பெரும்பான்மை விழுக்காடு வலைப்பக்கம் இவர்களின் சொற்களையும் போராட்டங்களையும் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் நம்பியே இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த மூன்றாவது பிரிவை உருவாக்க முதலாவது, இரண்டாவது பிரிவுகளின் செயற்பாடுகள் அவசியமாகின்றன. இந்த இரண்டாவது பிரிவின் செயற்பாடுகளை மேற்கொள்கிறவர்களாகத்தான் புதுகை வலைப்பதிவர் சந்திப்பை நடத்தியவர்கள் உணரப்படுகிறார்கள். எங்கெங்கோ நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பை நாம் நடத்திப் பார்க்கலாம். இப்படியொரு வலைச்சமூகம் இயங்கி வருகிறது. அவர்களும் அவரவர் வலைப்பதிவுகளில் இந்த சமுகத்தின் முதல் மனிதன் தொடங்கிக் கடைசி மனிதன் வரை வாழ இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தவே இம்மாநாடு.

இம்மாநாட்டில் தாங்கள் உணர்ந்த சில குறைபாடுகள் உங்கள் மனத்தை வருத்தியிருக்கின்றன. அதனைப் பெரிதுபடுத்தியிருக்கவேண்டாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். இதற்குத்தான் மேற்சொன்ன நீண்ட முகவுரையை நான் எழுதவேண்டியதாயிற்று. ஏன் என்றால் சில நபர்கள் இருக்கக்கூடிய ஒரு குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகள் பழக்கப்படுத்தப்பட்ட திட்டமிடல் என்றாலும் ஒவ்வொரு நாளும் விடியும்போது அதில் மாற்றங்கள் நிகழ்ந்து சிக்கல்கள் உருவாகின்றன என்பது வெளிப்படையானது. எல்லாவற்றையும் குற்றவிரல் கொண்டு வெகு எளிதாக சுட்டிவிடமுடியும். ஆனால் நம்மைநோக்கிய நிகழ்வில் அது பெரிதான வருத்தத்தை ஏற்படுத்தும்போது அதிகம் வலிக்கும்.

எந்த ஒரு நிகழ்வும் கூட்டு உழைப்பால் உருவாவது. ஒருவர் பிசகினால்கூட அந்த உருவம் சிதைந்துவிடும். இந்த வலைப்பதிவர் சந்திப்பும் அப்படித்தான். அது முழுமையுற அதன் முக்கிய கரு பதிவர்கள்தான். ஆயிரம் திட்டமிடல்கள் வைத்திருந்தும் அவர்கள் கேட்டதை எத்தனை பேர் ஒழுங்குபடச் செய்திருப்பார்கள் யோசித்துப் பாருங்கள்.

சரியான நேரத்தில் வருகையைப் பதிந்தார்களா? சரியான விவரங்களை விடுபடாமல் தந்தார்களா? கேட்ட வடிவத்தில் தந்தார்களா? அவர்கள் கேட்டதையெல்லாம் உடனுக்குடன் செய்தார்களா? வலைப்பதிவர் கையேட்டிற்கு எல்லாவற்றையும் ஒரே தடவையில் அனுப்பி வைத்தார்களா? விவரம் மட்டும் அனுப்பி வைத்தவர்கள் யார்? போட்டோ மட்டும் அனுப்பி வைத்தவர்கள் யார்? போட்டி விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றினார்களா? குறிப்பிட்ட தலைப்பை உணர்ந்தார்களா? குறிப்பிட்ட பக்க வரையறையைப் பின்பற்றினார்களா? அவர்கள் அதற்கான தகவல்களை அவர்களே சேகரித்தார்களா? முன்பே குறித்திருந்த இறுதிநாளுக்குள் அனுப்பி வைத்தார்களா? நாள் நீட்டித்தபின் அனுப்பிவைத்தவர்கள் யார்? அதற்குப் பின்னரும் அனுப்பி வைத்தவர்கள் யார்? இத்தனை ஏற்பாடுகளையும் வலைப்பதிவர் சந்திப்பிற்குள் ஒழுங்கமைக்கவேண்டும் என்று படாதபாடு பட்டவர்களின் நிலையை யோசித்தவர்கள் யார்? முக தாட்சயண்யத்திற்காகச் சமரசம் செய்துகொண்டவர்கள் நிலை என்ன? மேடை, அலங்காரம், வரவேற்பு, அடையாள அட்டை, அதற்கான எண்கள், கைப்பைகள், பேனா, குறிப்பேடு, வலைப்பதிவர் விவரப்புத்தகம் இவையெல்லாம் ஒரு கூட்டுக்குள் எப்போது வந்தது? விழாவிற்கு முன்னர் வலைப்பதிவர் கையேட்டைக் கொண்டுவர பட்ட பாட்டை மேடையில் சொன்னார்களே கேட்டவர்கள் எத்தனை பேர்? மேடைக்கு வரும் முக்கிய விருந்தினர்களைக் கடைசிவரை உறுதி செய்துகொண்டிருக்கவேண்டுமே அவர்களின் நிலை என்ன? ஓடிஓடி விழா ஏற்பாடுகளை செய்தாலும் அவர்களின் சோர்வுபெட்ரோல் இல்லாமல் சட்டென்று நிற்கும் வண்டியின் நிலை.. சாப்பாட்டிற்கு எல்லாப் பொருள்களை வாங்கித்தந்தும் முதல் நாளிரவில் வராத முக்கியமான பொருளுக்கு அலைந்தவர்கள்.. ஒட்டவும்..ஓடவும்.. கட்டவும்.. கணக்கிடவும்.. அரங்கை ஒழுங்குபடுத்தவும்.. எத்தனை பாடுகள்? ஆயிரம் பேர்கள் இருக்கலாம். ஆனால் ஆயிரம் குணங்கொண்டவர்கள். அவர்களை ஏதோ ஒரு அன்புச்சங்கிலியால்தான் ஒருங்கிணைக்கமுடியும்.. ஒருங்கிணைப்பவர்கள் தாங்கள் இறங்கிவரவேண்டும.

வந்திருக்கும் எல்லாக் கவிதைகளுக்கும் ஓவியங்களைப் போட்டுவிடுங்கள்.. எல்லாவற்றையும் ஒட்டிவிடுங்கள் சொல்லியிருக்கலாம்.. ஏதோ ஒன்று சிலவற்றிற்கு ஓவியங்கள் வரையமுடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.. ஓவியருக்கான சில சங்கடங்கள் இருக்கலாம்.. ஒட்டுவதற்குகூட சங்கடங்கள் இருந்திருக்கலாம்.. அதன் உண்மைநிலையை யார் உணர்வது?

இந்தப் பொதுவிழாவிற்கான முழு இசைவையும் அவரவர் தங்கள் குடும்பங்களில் பெற்றிருப்பார்களா? தாராளமாக செய்யுங்க என்று சொன்ன மனைவிமார்கள் எத்தனைபேர்? இதெல்லாம் ஒரு வேலைன்னு போறீங்க என்று சொன்னவர்கள் எத்தனைபேர்? போங்க.. போயிட்டுக் காலத்தோட வீட்டுக்கு வந்து சேருங்க.. இப்படி பல.

இரண்டு பன்னாட்டுக் கருத்தரங்குகள்.. உலகளவில்
நாலைந்து தேசியக் கருத்தரங்குகள்
பத்து பதினைந்து பயிற்சி வகுப்புகள்

இவற்றில் எல்லாம் ஓராண்டுக்கு முன்பிருந்தே காலை ஒன்பதுமணி தொடங்கி இரவு 11 மணிவரை படாதபாடு பட்டும் வாங்கியதென்னவோ கெட்ட பெயர்கள்தான்.. அடையாள அட்டை வழங்கும் குழுஉணவு டோக்கன் வழங்கும் குழுஆய்விதழ்கள்.. கைப்கைகள்.. தங்கும் விடுதியின் சாவி வழங்கும் குழு.. இப்படிப் பல குழுக்கள் ஒவ்வொரு குழுக்கும் ஐந்துபேர் என ஓரண்டிற்கு முன்பே திட்டமிட்டிருந்து அந்த நாளின் விருந்தாளிகள் வரும்போது எல்லாவற்றையும் வழங்கிய ஐந்துபேரில் நானும் ஒருவன். அத்தனை குழு உறுப்பினர்களும் கழுத்தறுத்துவிட்டார்கள். இருப்பினும் எல்லாவற்றையும் மீறி கடவுள் அருளால் விழா இனிதே நிறைவுறும். முழுமையான ஒரு லட்டை எறும்புகள் அரித்தது போக மிச்சமிருப்பதுபோல.

நடுவர்கள் பற்றி பொதுவான கருத்தில் என்னையும் தாக்கிவிட்டீர்கள். நான் நடுவர் என்று தெரியாது உங்களுக்கு என்பது அப்பட்டமான உண்மை. நான் சுற்றுச்சூழல் கட்டுரை பிரிவிற்கு நடுவராக இருந்தேன். அதில் நான் நடுவராக செயல்பட்டதை விவரமாக திருமிகு ந.முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு உரிய முறைப்படித் தெரிவித்து என் முடிவை அறிவித்திருந்தேன்.

மூன்றுமுறை கணிப்பொறியில் வாசித்து கண்கள் வலிகண்டுவிட்டன. எனவே நான்காவது முறையாக எல்லாவற்றையும் கணிப்பொறியிலிருந்து பிரிண்ட் எடுத்து வரிசைப்படி அடுக்கி மறுபடியும வாசித்தேன். வாசிப்பின்போது நான் கவனத்தில் கொண்ட நானே வகுத்துக்கொண்ட சில விதிகளையும் தெரிவிக்கிறேன்.

கட்டுரையின் தலைப்பு சரியாக இருக்கவேண்டும். போட்டியின் பொருண்மைக்கு மிக அண்மையாக இருக்கவேண்டும். அழகியலாக இருக்கவேண்டும். உணர்வூட்டுவதாக இருக்கவேண்டும். படிக்கத் தூண்டவேண்டும். இல்லையெனில் மதிப்பெண்ணை வெகு குறைவாகத் தந்திருந்தேன்.

கட்டுரையின் அளவு அறிவித்த எல்லையை மீறக்கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பான்மை வேண்டும். எனவே அளவு மீறிய கட்டுரைகளை வாசித்தும் அதில் நல்ல செய்திகள் இருந்தாலும் எல்லை மீறிய தன்மைக்காக மதிப்பெண்களைக் குறைத்தேன்.

எந்தப் பொருண்மையிலான கட்டுரைக்கும் வலைப்பதிவர்கள் எழுதுவது என்பது வெகு சுலபம். ஏனெனில் அவை குறித்த தகவல்கள் இறைந்துகிடக்கும் இணையத்திலிருந்து எடுப்பது சுலபம். எனவே கட்டுரை என்பது செய்திகளை அடுக்குவது அல்ல. உண்மையில் அவற்றின் சிக்கலை விபரீதத்தை உணர்த்த முற்படும் கருத்துக்களை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொண்டேன்.
மேலும் கருத்துக்களைத் தட்டச்சிடும்போது வடிவமைக்கும் பாங்கும் முக்கியமானது. ஏனெனில் உண்மையில் போட்டியில் வெல்வது என்பதையும் தாண்டி சுற்றுச்சூழலின் ஆபத்தை உணர்த்து பொறுப்புணர்ச்சியும் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் போக்கு நிச்சயம் மாறுபடும். இந்த சமூக அக்கறையுள்ளவர்களின் கட்டுரைகளே உண்மையானவை.
கட்டுரையின் மொழிநடையில் அழகியல் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலினைப் பராமரிக்காமல் விட்டால் ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்திய சொற்களையும் அதற்கான உத்திகளையும் கவனத்தில் கொண்டேன்.

முக்கியமானது கட்டுரையின் தொடக்கமும் முடிவும். இவை நல்ல கட்டுரையின் முக்கியமான கூறுகள். செய்திகளின் ஒருங்கிணைப்புத் தன்மை, கட்டுரையாளரின் நடை, நம்பகத்தன்மை, சான்றுகள் எனவும் கவனித்தேன்..

ஒரு கட்டுரை தொடர்பற்றிருந்தது. அதற்கு மதிப்பெண்கள் வழங்கவேயில்லை.

99
விழுக்காடு எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் நமது விருப்பம்போல எழுதுவோம் என்கிற மனோபாவத்தில் இருப்போர் விழுக்காடும் 99தான். என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனக்கு இன்றும் கட்டுரையாளர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால் நான் படித்த ஒவ்வொரு கட்டுரையும் எனக்குத் தெரியும். அதில் தெரிவு செய்த கட்டுரையின் சொற்களும் நினைவில் உள்ளன. முடிந்தவரை மனச்சான்றுக்கு மாறாமல் நடுவராகப் பணியாற்றினேன். இதற்குக் காரணம் இன்றுவரை உலகின் பன்னாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருப்பதுதான். மட்டுமல்லாமல் மனசாட்சிக்குப் பயந்து கடமையாற்றுவது என்பதை வாழ்க்கையின் மெய்ம்மையாகக் கொண்டிருப்பதும்தான்.

புதுகையில் நடந்த வலைப்பதிவர் விழா என்பது நாம் எல்லோரும் சேர்ந்து நடத்திய விழாதான். நம்மின் பிரதிநிதிகளாக திருமிகு ந.முத்துநிலவன் ஐயா அவர்களும், திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் திருமிகு தங்கம் மூர்த்தி கவிஞர் கீதா அவர்களும் இருந்தார்கள். ஒருநாள் விழா என்றாலும் அதனைச் செயற்படுத்த எத்தனையோ நாட்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. எனவே நான் இவர்களின் வழியையும் வலியையும் உணர்ந்தவன்.

மேற்குறிப்பிட்ட அத்தனை கருத்துக்களும் என் கருத்துக்கள்.

நன்றி வணக்கம்.

அன்புடன்
ஹரணி 25.10.2015 இரவு 11.00 மணி.

நன்றி: இந்தக் கருத்துரைகளை என் தளத்தில் பதிவாகப் பதிவதற்கு அன்புடன் அனுமதி வழங்கிய திரு. ஹரணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அப்படியே இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் நன்றி.