விழா நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழா நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 செப்டம்பர், 2015

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு திருவிழா – சில குறிப்புகள்.

                    Image result for விழாக்கள்
எனக்குத் தெரிந்த சில குறிப்புகளை இங்கே, விழா அமைப்பாளர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

       1.  வரவேற்பும் தங்குவதற்கு ஏற்பாடும்:

இது பற்றி தீவிரமாக சிந்திக்கப்பட்டு விழாக் குழுவினர் வழிமுறைகளை வகுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வெளியூரிலிருந்து வருபவர்கள் யார் யாருக்கு தனி அறை வேண்டும் என்பதைக் கேட்டறிந்து அந்த மாதிரி அறைகள் ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன் என்ன மாதிரி அறைகள் கிடைக்கும் என்று தெரிவிப்பது அவசியம். தவிர, புதுக்கோட்டை வந்து சேர்ந்ததும் தொடர்பு கொள்ளவேண்டிய விழா குழுவினரின் பெயரும் கைபேசி எண்ணும் கொடுத்தல் பயனுள்ளதாக இருக்கும்.

   2.   பதிவர்களின் கைப்பைகளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.

வெளியூர் பதிவர்கள் கொண்டு வரும் பைகளை விழா மண்டபத்தில் யாராவது வாங்கி ஒரு இடத்தில் வைத்திருந்து அவர்கள் போகும்போது திருப்பிக் கொடுக்கலாம். இல்லாவிடில் அவர்கள் அந்தப் பைகளை தங்களுடனேயே தூக்கிக்கொண்டு விழா முடிவு வரை அலையவேண்டும்.

3. உணவு ஏற்பாடுகள்.

தலை வாழை இலை போட்டு பதினெட்டு வகை பலகாரங்கள் பரிமாறுவது என்பது தமிழர் பண்பாடாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி கூட்டங்களில் அந்த மாதிரி பரிமாறுவது கஷ்டமான காரியம். இப்பொழுது பஃபே முறை சகஜமாகி விட்டது. அவரவர்களுக்குத் பிடித்தமானவற்றை தேவையான அளவு வாங்கிச் சாப்பிடுவது எளிது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரே இடத்தில் உணவு வகைகளை வைத்து விட்டு எல்லோரையும் வரிசையில் போய் வாங்கவேண்டுமாறு ஏற்பாடு செய்தால் வரிசை நீண்டு நிற்க வேண்டிய நேரம் அதிகமாகும்.

இரண்டு அல்லது மூன்று இடங்களில் உணவுகளை வைத்து விட்டால் கூட்டம் பிரிந்து நெரிசலைத் தவிர்க்கலாம். இதற்கு கூடுதல் பாத்திரங்கள் தேவைப்படும். உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். காரணம் இந்த ஏற்பாட்டில் கூடுதல் பாத்திரம் மற்றும் ஆள் செலவு பிடிக்கும்.அவரை முதலிலேயே இந்த நிபந்தனைகளுக்கு தயார் செய்வது அவசியம்.

தவிர ஒப்பந்ததாரர் மூலம் உணவு ஏற்பாடு செய்திருந்தால் அவர் சொல்லியிருந்த நபர்களை விட 25 சதம் குறைவாகத்தான் உணவு கொண்டு வருவார். கடைசியில் சாப்பிடுபவர்களுக்கு உணவு இருக்காது. தவிர ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவே உணவு கொடுப்பார். இந்த நுணுக்கங்களை கவனித்து சரி செய்யவேண்டும்.
ஆங்காங்கே நாற்காலிகள் போடப்பட்டிருந்தால் உட்கார்ந்து சாப்பிட வசதியாக இருக்கும். தவிர பதிவர்கள் சிறு சிறு குழுக்களாக உணவு உண்டு கொண்டே பேசி மகிழவும் ஏதுவாக இருக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பஃபே முறைக்கு ஏற்ற மாதிரி உணவுகள் இருக்கவேண்டும். சாதம் தனியாகவும் சாம்பார், ரசம், தயிர் தனியாகவும் இருந்தால் அவைகளைப் பிசைந்து சாப்பிட முடியாது. ஆகவே கலந்த சாதங்களாக இருந்தால் நல்லது. கூடுமானவரை சாப்பிடுவதற்கு எளிதான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். “டிரைஉணவு வகைகள் தவிர்க்கப்படவேண்டியவை.

    4.   வரவுப்பதிகை:

இதை நண்பர் திரு ரமணி அவர்கள் கூறியபடி மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் ஏற்பாடு செய்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    5.   நேரம் பகிர்வு

எந்த விழாவாக இருந்தாலும் முக்கியமான நிகழ்ச்சிகளை மதிய உணவிற்கு முன்னால் வைத்தால்தான் சோபிக்கும். உணவு இடைவேளை 2 மணிக்கு வைத்தாலும் நல்லதுதான். அதற்குப் பிறகு நடக்கும் எந்த நிகழ்ச்சியையும் மக்கள் ஆழமாக கவனிக்க மாட்டார்கள். இந்த உண்மையை விழா அமைப்பாளர்கள் மனதில் கொள்ளவேண்டும். குறிப்பாக பதிவர் அறிமுகங்கள் உணவு இடைவேளைக்கு அப்புறம் இருந்தால் பதிவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கூட கவலைப்பட வேண்டியதில்லை.


நிகழ்ச்சி நிரல் தயாரிப்பாளர்கள் இந்தக் குறிப்புகளை ஏற்கெனவே அறிந்து, கடைப்பிடித்திருக்கலாம். அப்படியென்றால் சந்தோஷம். இல்லையென்றால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலலாம்.