விழாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 அக்டோபர், 2012

ஆயுத பூஜையும் நானும்

ஒரு மாதமாகவே வீட்டில் என் இல்லத்தரசி பண்ணுகிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை. காலையில் எழுந்தவுடன் இன்றைக்கு உங்கள் புஸ்தகங்களை எல்லாம் எடுத்து தூசி தட்டி, அலமாரிக்கு வேறு ஷீட் போட்டு, புத்தகங்களைத் திரும்பவும் அடுக்கி வையுங்கள் என்று ஆர்டர். புஸதகங்களைத் திரும்பவும் அலமாரியில் வைப்பதானால் அவைகளை ஏன் வெளியே எடுக்கவேண்டும் என்பது என் வாதம். ஆனால் அந்த வாதம் எடுபடவில்லை.

தானும் சும்மா இருக்கமாட்டாள். வேலைக்காரியைப் பிடித்து வைத்துக் கொண்டு தினம் ஒரு ரூமாக கிளீன் பண்ணவும், மெத்தைகளை வெயிலில் போட்டு எடுக்கவும், பரணில் சிவனே என்று கிடந்த சாமான்களை இறக்கி, கழுவி, திரும்பவும் பரணில் வைக்கவுமாக ஏகப்பட்ட கந்தரகோளங்கள் செய்த வண்ணமாகவே இருந்தாள். என்னை மதியம் தூங்க விடவில்லை.

இவைகள் எல்லாம் இந்த ஆயுத பூஜைக்கான முஸ்தீபுகள். ஒரு வழியாக நேற்றுடன் ஆயுத பூஜை களேபரங்கள் முடிவுக்கு வந்தன. இனி பொங்கல் சமயத்தில் இந்த களேபரங்கள் மறுபடி ஆரம்பிக்கும்.

கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்துக்கள் மத்தியில் இந்த பண்டிகைகள் நீங்காத இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பொங்கல் விவசாயிகளின் நன்றித்திருவிழா. ஆயுத பூஜை நாம் செய்யும் தொழிலுக்குச் செய்யும் பூஜை. தீபாவளி புதுத் துணிகள் வாங்கி அணியவும், பலகாரங்கள் செய்து சாப்பிடவும், புது மாப்பிள்ளைகள் கல்யாணத்தில் விட்டுப்போன  சீர்வரிசைகளை மாமனாரிடமிருந்து பிடுங்கவும் ஏற்படுத்தப்பட்ட பண்டிகை.

எல்லாப் பண்டிகைகளும்,  நாம் தெய்வத்தை முன்னிலைப் படுத்தி கொண்டாடினாலும், நமக்கு அன்றாட இயந்திர வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுபட்ட விழாவாக அமைகிறது. இந்த மாறுதல் மனிதனுக்கு அவசியமாகிறது. ஆகவே சமூக ரீதியாக இத்தகைய விழாக்கள் பல நன்மைகள் தருகின்றன.

எங்கள் வீட்டிலும் இந்த விழாக்களைத் தவறாமல் கொண்டாடுகிறோம். எங்கள் வீட்டு ஆயுத பூஜை படங்கள் சில.



என் புத்தக அலமாரி - நானே கிளீன் செய்தது.


என்னுடைய வொர்க் டேபிள் அதாவது வேலை செய்யும் இடம். என்ன வேலை என்று கேட்கப்படாது. இருந்தாலும் சொல்லுகிறேன். படித்தல். என்னென்ன படிப்பேன் என்று கேட்கிறீர்களா? செய்தித்தாள்கள், கல்யாணப் பத்திரிகைகள், பேங்க் பாஸ் புத்தகங்கள், இவைகள்தான். ரிடைர்டு ஆன 78 வயசு இளைஞன் வேறென்ன படிக்கவேண்டும்?


எல்லோருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.