விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 2



இந்த கால கட்டத்தில்தான் நாணயங்கள் அதிகமாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்தன். அதுவரை இருந்த பண்டமாற்று முறைகள் குறைந்து நாணயங்களை மனிதன் பொருட்கள் வாங்குவதற்கு உபயோகப்படுத்த ஆரம்பித்தான். மனிதனின் சேமிப்பு, தானியமாகவோ, உண்ணும் பண்டங்களாகவோ இருந்தவரை, அவைகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாதாகையால், அவைகளை மக்கள் தாராளமாக உபயோகப்படுத்தி வந்தார்கள். தங்களுக்குப் போக மிஞ்சியதை தேவையானவர்களுக்கும் கொடுத்தார்கள். மனிதனுக்கு அப்போது பரந்த மனப்பான்மை இருந்தது. நாணயப் புழக்கம் வந்த பிறகுதான், மனிதன் சேமிப்புப் பழக்கத்தை ஆரம்பித்தான். விவசாயம் பொய்க்கும்போது வேண்டிய தேவைக்காகவும் மற்ற பலவித தேவைகளுக்காவும் சேமித்தான். பெண்கள் தங்க நகைகள் போட ஆரம்பித்ததும் இதே காரியத்திற்காகத்தான்.
சேமிப்பு அதிகமாக அதிகமாக, மனிதனுக்கு ஆசை வளர்ந்ததே தவிர குறையவில்லை. இன்னும், இன்னும், இன்னும், இன்னும் என்று சேர்த்தானே தவிர நிறுத்தவேயில்லை. தனக்கு, தன் பிள்ளைக்கு, தன் பேரனுக்கு, இப்படியாகவே போய், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகி விட்டது. விவசாயத்தையும் இந்த மனப்பான்மை மாற்றியது. இந்த மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நிலத்தடி நீரின் நிலைதான்.
என் முன்னோர்கள் விவசாயிகளாக இருந்தார்கள். ஆனால் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரத்திற்கு வந்துவிட்டார்கள். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் கிராமத்திலேயே விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சிறு வயதில் (சுமார் பத்து பனிரெண்டு வயது இருக்கும்) விடுமுறை நாட்களில் ஊருக்குப்போவேன். என் மாமா தோட்டத்தில் சில நாட்களும், பெரியம்மா தோட்டத்தில் சில நாட்களும் கழிப்பேன்.
அந்தத் தோட்டங்கள் எல்லாம் கிணற்றுப்பாசனம் மூலம் பயிர் செய்யப்பட்டவை. தண்ணீர் இறைக்க கவலை”, (சில ஊர்களில் கமலை என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு இரண்டு முதல் நான்கு கவலைகள் இருக்கும். சாதாரணமாக இரண்டு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும்.  ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். தோலினால் ஆனபறிஎன்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள். வடக்கயிறும் வார் கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும். அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும்.
ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் மூன்று அல்லது மூன்றரை ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.
அப்போது கிணறுகளில் நீர் மட்டம் தரை மட்டத்தில் இருந்து கீழே இருபது அடிக்குள் இருந்தது. அப்படி ஒரு கிணற்றில்தான் நான் நீச்சல் கற்றுக் கொண்டேன். கிணற்றின் மேலிருந்து குதிக்கப் பழகவில்லை. ஏனெனில் அதற்குள் விடுமுறை முடிந்து விட்டது. சரி அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்த வருடம் ஏதோ காரணத்தினால் மாமா தோட்டத்திற்கு போக முடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் போனால் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாற்பது அடிக்கு கீழே போய்விட்டது. தண்ணீருக்குள் ஜம்ப் பண்ணி நீரின் அடிமட்டத்திற்குப்போய் மேலே வரும் வித்தையை கற்க முடியாமலேயே போய் விட்டது.
                   

வெள்ளி, 24 டிசம்பர், 2010

இயற்கை விவசாயம்

இன்றைக்கு இதுக்குத்தான் மார்க்கெட். வெங்காய மார்க்கெட்டல்லாம் சரிஞ்சு போய்ட்டுது. ஆனா இயற்கை விவசாயத்துக்கு மார்க்கெட் எப்பவும் சரியாது.

கம்யூனிஸ்ட் தொழிற் சங்கங்களின் கொள்கையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லைன்னா தெரிஞ்சுக்குங்க. “அடைய முடியாத இலக்கை குறிக்கோளாகக் கொள்”. கொஞ்சம் யோசிச்சாத்தான் இதனுடைய முழு அர்த்தமும் விளங்கும். யோசிச்சிட்டு இருங்க. அதுக்குள்ள வேற ஒரு சமாச்சாரம் சொல்றேன்.

பொய்ய பொருந்தச் சொன்னா நெஜம் திரு திருன்னு முளிக்குமாம்.

இது மாதிரி சில சமாச்சாரங்கள் எப்போதும் ஜனங்களுக்குப் பிடிக்கும். காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம். எலெக்ஷன் சமயத்தில் இது மிகவும் சொல்லப்படும் வசனம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஏழ்மை ஒழிப்பு, ஓசோன் லேயரில் ஓட்டை, மரம் நடுவோம், இவைகளெல்லாம் சாஸவதமான சமாச்சாரங்கள். எப்போது வேண்டுமென்றாலும் யார் வேண்டுமென்றாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம்.

இயற்கை வழி வாழ்வோம் அப்படீன்னு சொன்னா யாருதான் வேண்டாம்னு சொல்வாங்க. ஆஹா, அப்படித்தான் வாழவேண்டும் என்று எல்லோரும் ஜால்ரா போடுவார்கள். சரீப்பா, இயற்கை வழின்னு சொல்றயே, அப்படீன்னா என்ன அர்த்தம், அப்படி வாழறது எப்படீன்னு கேட்டீங்கன்னா, இவன் இயற்கைக்கு விரோதின்னு பட்டம் கொடுத்து உங்களை மென்டல் பண்ணீடுவாங்க.

ஏன் சில பேர் இந்த மாதிரி திரியறாங்கன்னு தெரியுமுங்களா? அதுல காசு இருக்குங்க. NGO அப்படீன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லையா. அப்ப நீங்க இந்த லோகத்துல வாழ லாயக்கில்லீங்க. அத மொதல்ல தெரிஞ்சுக்குங்க. இந்தியாவுல லட்சக்கணக்குல இந்த NGO க்கள் இருக்குங்க. அவங்களுக்கு என்ன தொழில்னா, இந்த மாதிரி சமூக சேவை செய்யறதுதான். அதாவது ஏழ்மை ஒழிப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு, இப்படி ஏதாச்சும் ஒண்ணு. இதுக்கு வெளிநாட்டுக்காரனும், நம்ம இந்திய அரசாங்கமும் கோடிக்கணக்குல பணத்தைக்கொட்டறாங்க. வாங்கி அப்படியே உங்க பேங்குல போட்டுக்க வேண்டியதுதான். ஆனா ஒழுங்கா கணக்கு காட்டோணும். அதுக்குத்தான் இந்த மாதிரி இயற்கை வழி வாழ்வு போன்ற சங்கதிகளெல்லாம்.

எதாச்சும் புரியுதுங்களா. புரிஞ்சா அடுத்த பதிவுக்கும் வாங்க. புரியலேன்னா, எதாச்சும் 3ஷா பத்தி யாராச்சும் போட்டோ போட்டு எளுதியிருப்பாங்க. அங்க போயிடுங்க.

திங்கள், 6 டிசம்பர், 2010

இந்தியாவில் உணவுப்புரட்சி



இந்தியாவில் உணவுப்புரட்சி


இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட அரசியல், சமூக, மதக் குழப்பங்கள் தீர்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 1960 களின் கடைசியில் ஒரு குழு தெய்வாதீனமாக அமைந்தது. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் பொறுப்பேற்றார். திரு.சி.சுப்பிரமணியம் மத்திய விவசாய அமைச்சராக இருந்தார். இருவரும் கலந்து ஆலோசித்து இந்திய உணவுப் பிரச்சினையை தீர்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். டாக்டர் எம்.எஸ். ஸ்வாமிநாதனுக்குத் தெரிந்த ஒரு அமெரிக்க விவசாய விஞ்ஞானி, நோபல் பரிசு வாங்கியவரான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரை இந்தியாவிற்கு வரவழைத்தார்கள்.

அவர் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள விவசாய தொழில் நுட்பங்களை ஆராய்ந்து இங்குள்ள விவசாய நிபணர்களிடமும் கலந்தாலோசித்து சில முடிவுகளைச் சொன்னார். இந்திய விவசாயத்தை மேம்படுத்த முக்கியமாக மூன்று அபிவிருத்திகள் செய்ய வேண்டும் என்றார். ஒன்று - நல்ல விதை. இரண்டுநல்ல உரம். மூன்றுநல்ல பயிர் பாதுகாப்பு. நல்ல விளைச்சல் தரக்கூடிய கோதுமை விதைகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உரங்களும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும் பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. இவைகளை உபயோகப்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதில் விளைச்சல் பலமடங்கு அதிகமாக விளைந்தது. இந்திய நாடு உணவு வகையில் சுயதேவையைப் பூர்த்தி செய்துகொண்டது.


பசுமைப்புரட்சிஎன்றழைக்கப்பட்ட இந்த விவசாயப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்களினால் இந்திய மக்கள் பஞ்சத்திலிருந்து விடுபட்டார்கள். ஆனாலும் இந்திய மக்கள் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகளை மெய்ப்பித்தார்கள். அதாவது எலிகள் போல் பெருகினார்கள். முப்பது கோடியாய் இருந்தவர்கள் அறுபது வருடங்களுக்குள் நூற்று இருபது கோடியாய் பெருகி இருக்கிறார்கள். இந்தியாவின் சாபக்கேடே இந்த மனித உற்பத்திப் பெருக்கம்தான். சரி, இருக்கிற ஜனங்களாவது ஒழுங்காக, தேசப்பற்றுடன், நாடு முன்னேற பாடுபடுகின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஏறக்குறைய தரை மட்டமாக்கப்பட்ட ஜப்பான் இன்று அமெரிக்கர்களே பயப்படும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு தேசப்பற்று இருக்கிறது. நமக்கு?????



இந்தியர்களின் பசியைப் போக்கியதில் உரங்களும் பயிர்பாதுகாப்பு மருந்துகளும் முக்கிமான பங்கை ஆற்றியிருக்கின்றன. இவைகளின் உபயோகம் வருடாவருடம் அதிகரித்து வந்துள்ளது. இந்த உண்மையை மனதில் கொள்ளாமல் திடீரென்று இனிமேல் எல்லோரும் இயற்கை வழி விவசாயம் செய்து வாழ்வோம் என்று பேசினால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

விவசாயம் பற்றி

விவசாயம் பற்றி



உங்கள் தொழில் சார்ந்த விவசாயம் பற்றி ஒரு தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்...இன்றைய கால கட்டத்தில் விவசாயம் மட்டும் செய்து வாழ்வது இயலுமா!!! என்ன மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்? குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்...விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர் செய்ய நினைப்பது மடமையா? இல்லை செய்ய முடியும் என்றால் அதற்கு அடிபடையாக செய்ய வேண்டியவை யாவை?
அதிகமான அதிக பிரசங்கி கேள்விகளுக்கு மன்னிக்கவும்...

மேலே கொடுத்துள்ள குறிப்பு ஒரு பதிவர் பின்னூட்டத்தில் கேட்டது. அங்கேயே பதில் சொல்ல இடம் போதாதாகையால் ஒரு தனிப்பதிவாகப் போடுகிறேன்.

முதலில் சொல்ல விரும்புவது: இதைத்தொடர் பதிவாகப் போடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். ஆகவே யாரும் பயப்படவேண்டாம். விவசாயத்தைப்பற்றி ஏற்கனவே நிறையப்பேர் பலப்பல கருத்துக்களைச் சொல்லி பரம்பரை விவசாயிகளையே குழப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் நான் சேரமாட்டேன்.

இன்றைய காலகட்டத்தில் முன் அனுபவமில்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் அரசியல்தான். அது மட்டுமல்லாமல் போட்ட முதலுக்கு பலமடங்கு லாபம் மொடுக்கும் தொழில் அது ஒன்றுதான். பரம்பரை விவசாயிகள் வேறு வழி தெரியாமல் விவசாயத்தை விட முடியாதவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் பேரே விவசாயத்தில் லாபம் கண்டு சௌகரியமாய் இருக்கிறார்கள். சொஞ்சம் பேர் வரவுக்கும் செலவுக்கும் சரியாய்ப் போய் வாழ்க்கை நடத்துகிறார்கள். மீதிப்பேர் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய கார்ப்பரேட் ஆட்களெல்லாம் விவசாயம் செய்ய ஆரம்பித்து, துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடிய கதைகளெல்லாம் இங்கு உண்டு.

விவசாயத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமல் விவசாயம் செய்யலாமா என்று கேட்பவருக்கு என் ஆலோசனை என்னவென்றால்: நல்ல நிலம், நல்ல சீதோஷ்ண நிலை, கூலியாட்கள் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய நிலை, நல்ல மார்க்கெட்டிங் உத்திகள் தெரிந்த ஒரு ஆலோசகர், நல்ல மேனேஜ்மென்ட் தெரிந்த ஒரு மேனேஜர், எடுக்க எடுக்க குறையாத பேங்க் பேலன்ஸ் ஆகிய இவை இருந்தால் தாராளமாக விவசாயத்தில் ஈடுபடலாம்.

என்னை டெக்னிகல் அட்வைசராகப் போடுவதாயிருந்தால் பத்து வருட நோட்டீஸ் கொடுக்கவேண்டும். ஆனால் கன்சல்டிங்க் பீஸ் நோட்டீஸ் கொடுத்த நாளிலிருந்து பேங்கில் செலுத்தி விடவேண்டும். என்னுடைய அக்கவுன்ட் நெம்பரும் கன்சல்டிங்க் பீஸ் விவரங்களும் வேண்டுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் எடுத்து அனுப்பினால் தெரியப்படுத்தப்படும்.