விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாயம் என்றால் என்ன?இயற்கை விவசாயத்தைப் பற்றி ஓரிரு பதிவுகள் போட்டிருந்தேன். ஆனால் இயற்கை விவசாயத்தைப் பற்றி முறையாகத் தெரிந்துகொள்ளும் விதமாக நான் ஒரு பதிவும் இடவில்லை. அந்தக் குறையை நீக்கும்பொருட்டு இந்தப் பதிவை போடுகிறேன்.

இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.

இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:
  1.   பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.
  2.   சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.
  3.   பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.
  4.   பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.
  5.   மண்ணிற்கு மேல் “மல்ச்சிங்க்” செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)

  பூச்சிகள், பூஞ்சாளங்கள், களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:
  1.   சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  2.   நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  3.   நல்ல பயிர் மேலாண்மை
  4.   பயிற் சுழற்சியைக் கடைப்பிடித்தல்
  5.   பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
  6.   இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்

இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.

ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.

ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் என்றால் என்னென்ன என்று அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம்இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விவசாயி ரெபெக்கா தனது பண்ணையில் செய்த மாறங்களினால் அடுத்த தலைமுறை விவசாயம் எப்படி இருக்க வேண்டும்  என்பதன் எடுத்துக் காட்டு ஆகி இருக்கிறார்.

உலகின் பொருளாதாரமே எண்ணெய் எரிபொருள் சார்ந்து இருப்பதால் உலகளாவிய  எரிபொருள் விலை மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கிறது.எரிபொருள் தேவை குறைந்த அள்வே பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதில் ரெபெக்கா வெற்றி பெற்றுள்ளார்.

"இயற்கை நம் தேவைகளுக்கு   நிச்சயம் தீர்வு கொடுக்கும் ஆனால் ஆசைகளுக்கு அல்ல"

விவசாய(நில)ம் என்பது எதிர்காலத்தில் மிக அதிக மதிப்பு பெறும்.ஆகவே நிலம் உள்ளவர்கள் விற வேண்டாம்.முடிந்தவரை முறையாக விவசாயம் கற்று பயனுறுமாறு வேண்டுகிறேன்.


விவசாயப் பதிவுகளுக்கு வாசகர்களிடையே போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை என்பது என் அனுபவம். இருந்தாலும் சில பதிவுலக நண்பர்கள் என்னுடைய அனுபவத்தை ஏன் பதிவிடக்கூடாது என்று பின்னூட்டமிட்டதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

மேலே கொடுத்துள்ள ஒரு பின்னூட்டத்தின் வாசகத்தைக் கொடுத்திருக்கிறேன். இதில் இயற்கை விவசாயத்தின் பெருமையை விளக்கியுள்ளார்கள்.

நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து. இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு  தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை.  நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.

இன்றைய விவசாயத்தின் நிலை பற்றி சில முக்கியமான பிரச்சினைகளை மட்டும் கூறுகிறேன்.

1. விவசாயப் பொருள்களின் சந்தை விலைக்கும் விவசாயிக்கு கிடைக்கும் விலைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. சாதாரண தேங்காய் கடையில் 15 ரூபாய் விற்கிறது. தென்னந்தோப்பில் நான்கு ரூபாய்க்கு மேல் கேட்பாரில்லை. இளனி ரோட்டில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோப்புக்காரனுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை. இதே போல்தான் அனைத்து விவசாயப் பொருள்களும் விற்கின்றன.

உழவர் சந்தை என்று ஒன்று இருக்கிறது. இங்கு வியாபாரிகள்தான் பெரும் அளவில் விவசாயிகள் என்ற போர்வையில் கடை போட்டு இருக்கிறார்கள். அரை ஏக்கர் பொட்டல் காடு இருந்தால் அவனுக்கு விவசாயி என்ற அடையாள அட்டை கிடைத்து விடும். நிஜ விவசாயி அவனுடன் போட்டி போட முடியாது.

இந்த நிலையை மாறினால் ஒழிய விவசாயம் வளராது.

2. விவசாயத்திற்கு நிலமும் நீரும்தான் பிரதானம். நிலம் இருக்கிறது. நீரைத்தான் காணவில்லை. பருவ மழைகள் பொய்த்துப்போகின்றன. அதனால் நிலத்தடி நீர் அருகிப் போய் விடுகிறது. ஆதே காரணத்தினால் ஆற்றுப் பாசனமும் குருகிப் போகிறது. என்னதான் விவசாயி கஷ்டப்பட்டாலும் அவனால் தன் குடும்பத்தையே காப்பாற்ற முடிவதில்லை.

3.விவசாயத்திற்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இந்த நிலைக்கு பல காரணங்கள் உண்டு. இங்கு அவற்றை எல்லாம் ஆராய்ந்து தீர்வு காண முடியாது. இந்தப் பிரச்சினைக்கு அரசுதான் வழிவகை செய்யவேண்டும்.

4.விவசாயிகளுக்கு ஒரு ஆரோக்கியமான கூட்டு அமைப்பு கிடையாது. அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. அதனால் அவர்கள் அரசிடம் இருந்து எந்த சலுகையையும் பெற முடிவதில்லை. விவசாயத்திற்கு வேண்டிய எந்த கொள்கையையும் முன் வைக்க முடிவதில்லை.

5. விவசாயம் வளர ஆக்கபூர்வமான கொள்கைகள் எதையும் அரசினால் சரியாக நடைமுறைப் படுத்த முடிவதில்லை. அதிகாரிகள் சரியில்லை. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. நன்மைகள் விவசாயிக்கு போய்ச் சேருவதில்லை.

அரசு எப்போது விழித்தெழுந்து விவசாயத்தைக் கரை சேர்க்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இன்னொரு நண்பரும் விவசாயம் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதையும் படியுங்கள்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

தொழில் நகரங்களும் விவசாயமும்இந்தியா ஒரு விவசாய நாடு. ஏனெனில் நிலப்பரப்பில் பாதிக்கு மேல் விவசாயம்தான் நடைபெறுகிறது. நாட்டின் வருமானத்தில் பெரும் பங்கு விவசாயம் மூலமாகவே கிடைக்கின்றது. ஆனால் விவசாயம் மட்டும் பண்ணிக்கொண்டிருந்தால் இந்தியா வல்லரசாக முடியாது.


கி.பி. 2020 ம் ஆண்டு இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஒருவர் கனா காணச் சொல்லிவிட்டுப் போனார். அது பகற்கனவாகவே போய்விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தியா வல்லரசாக முதல் தேவை இந்தியா ஒரு தொழில் நிறைந்த நாடாக மாற வேண்டும். இது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் இது சரியென்று கருதுவதால் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த மாற்றமடைந்துள்ளது. நிலங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. தொழில் நகரங்களைச் சுற்றியுள்ள நிலங்கள் அதிக விலைக்குப் போவதால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு வரும் பணத்தை பேங்கில் போட்டு வரும் வட்டியை வைத்து வாழ்கிறார்கள்.

இந்த நிலை நாட்டின் நலனை எவ்வகையில் மாற்றும் என்பது தெரியவில்லை? வருங்காலத்தில் மக்கள் உணவிற்கு யாரிடம் கையேந்த வேண்டி வரும் என்பது ஒரு பெரிய கேள்வி?    
ஈரோட்டில் பதிவர் சங்கமம் 18.12.2011


பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.
இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - கடைசி பாகம் 8 நிலத்தடி நீர்ப்பிரச்சினை நாளாக நாளாக அதிகரித்து வருகின்றது. விவசாய விஞ்ஞானிகளும், நீர்நுட்பவியல் நிபுணர்களும், பொருளாதார வல்லுநர்களும் இந்தப்பிரச்சினை பற்றி உணர்ந்திருக்கிறார்கள். அவ்வப்போது கருத்தரங்கங்கள் கூட்டி இதைப்பற்றி விவாதிக்கிறார்கள். பல புதிய கருத்துக்கள் அலசப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானிகளிடையே நிலவும் கருத்துகளை தொகுத்துக் கூறுகிறேன்.

1.   நிலத்தடி நீர்ப்பிரச்சினையை ஒரு தலையாய பிரச்சினையாகவும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

2.   அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய மக்களின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லவேண்டும்.

3.   இந்தப் பிரச்சினைக்குண்டான தீர்வுகளை தீவிரமாக அமுல் படுத்தக்கூடிய கொள்கைப் பிடிப்புள்ள அரசு வேண்டும்.

இன்று இருக்கும் ஆட்சி முறையில் இவையெல்லாம் நடக்குமா என்பதை காலம்தான் சொல்லும். அரசு மற்றும் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்படாவிட்டால் ஒரு சமுதாயமே அழிந்து போகும் நிலை வரக்கூடும் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

வளர்ந்து வரும் நிலத்தடி நீர்ப்பிரச்சினையை  எப்படி சமுதாயம் எதிர்கொள்ளும் என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது

சமுதாய விழிப்புள்ள, தேசப்பற்று மிக்க, ஊழலற்ற அரசு என்றைக்கு அமைகிறதோ, அன்றைக்குத்தான் இந்தப்பிரச்சினைக்கு ஒரு விடிவு ஏற்படும். அப்படி ஒரு நாள் வருமென்று நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்விற்கு ஊன்றுகோல்.

                  
பின் குறிப்பு; இந்தத் தொடரில் பிரசுரம் ஆன கட்டுரை சிங்கை மணற்கேணி நடத்திய 2010 ம் ஆண்டுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கட்டுரை. அந்தப் போட்டியில் இந்தக் கட்டுரை பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆகவே இதை என்னுடைய பதிவில் 8 பகுதிகளாகப் பதிவு செய்துள்ளேன்.


முழு கட்டுரையையும் ஒன்றாகப் படிக்க இந்த லிங்குக்கு செல்லவும்:
  https://docs.google.com/document/d/1VxR_8N5C_oJdAVJmgxSs2AtQxP6HNdnGRQA7aSLFKk8/edit?hl=en_GB


இந்தக் கட்டுரையை யார் வேண்டுமானாலும் எடுத்து, எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அதிக மக்களைப் போய்ச் சேர்ந்தால் சமுதாயத்திற்கு நல்லதுதானே. எனக்குப் பேரோ, புகழோ வந்தால் அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?

வணக்கம்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 7இருந்தாலும் என்றாவது ஒரு நாள் திடீரென்று எல்லோருக்கும் ஞானோதயம் வரலாம் இல்லையா? அந்த நாளில் என்னென்ன செய்யலாம் என்று இன்றே திட்டமிடல் அவசியம் அல்லவா? அதற்காகத்தான் கீழே உள்ள உத்திகள்.
நிலத்தடி நீரை சிக்கனமாக எவ்வாறு உபயோகிக்கலாம் என்று பார்க்கலாம்..

1.   கிணறுகள் வெட்டுவதற்குக் கட்டுப்பாடு விதித்தல்.

இது தனி நபர் உரிமையில் தலையிடுவது போல் முதலில் தோன்றும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டுத் தென்னை மரம் ஒன்று அடுத்த வீட்டு ஓரத்தில் இருக்கிறது. சிறிய மரம். காய்கள் நிறைய இருக்கிறது. எட்டிப் பறித்து விடலாம். அந்த மரத்திலிருந்து ஒரு தேங்காயை அடுத்த வீட்டுக்காரர் எட்டிப் பறித்துக் கொள்கிறார். தென்னை மரம் வைத்தவர் சும்மா இருப்பாரா? ஏன் என் மரத்திலிருந்து தேங்காயைப்பறித்தீர்கள் என்று கேட்க மாட்டாரா?
அப்படிக்கேட்டால் அது தனி நபர் சுதந்திரத் தலையீடு என்று சொல்வீர்களா? மாட்டீர்கள். ஏன் என்றால் இந்த இடத்தில் மரத்தின் சொந்தக்காரர் யாரென்ற தெளிவு இருக்கிறது. ஆனால் இதைப்பாருங்கள். நிலத்தடி நீர் எல்லா நிலங்களுக்கு கீழும் பரந்திருக்கிறது. அது யாருக்குச்சொந்தம் என்று வரையறுக்கப் படவில்லை. நியாயமாக அது ஒரு பொதுச்சொத்து. அதைப் பயன்படுத்துவதில் ஒரு பொது நியதி நிர்ணயிக்கப்படவேண்டும். ஒருவருக்கு வசதி இருக்கிறது என்பதால் அவருடைய நிலத்தில் ஆழமாக ஒரு போர் போட்டு, மற்ற எல்லோருடைய நிலத்தின் கீழ் உள்ள நீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்வது எந்த விதத்தில் நியாயமாகும்?
ஆனால் இன்றுள்ள சமுதாயத்தில் இத்தகைய வாதங்களுக்கு இடம் இல்லை என்பது ஒரு வருந்தத்தக்க நிலையாகும்.

2.   கம்யூனிடி கிணறுகள் அதாவது சமுதாயப் பொதுக் கிணறுகள்.

தனி நபர்கள் ஆதிக்கத்தினால் சமுதாய பொதுச்சொத்தான நிலத்தடி நீரின் பயன்கள் சிறு குறு விவசாயிகளுக்குப் போய்ச் சேருவதில்லை என்பதால் அரசே முன் வந்து சில இடங்களில் பரீட்சார்த்தமாக சமுதாயப் பொதுக் கிணறுகள் வெட்டினார்கள். இவை அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான பொதுச்சொத்தாக கருதப்படும். அவைகளிலிருந்து எடுக்கப்படும் நீர் அந்த விவசாயிகளுக்கே சேரும். அந்தக்கிணறுகளைப் பராமரித்து அவைகளிலிருந்து எடுக்கப்படும் நீரைப் பங்கிட்டு உபயோகப்படுத்துவது ஆகிய நடைமுறைப் பொறுப்புகள் அந்த விவசாயிகளையே சேர்ந்தவை. இதற்கு ஆகும் செலவுகளை அரசு பாதி மான்யமாகவும் பாதி கடனாகவும் கொடுத்தது. அந்தப் பகுதி விவசாயிகளுக்கு இந்த கிணறுகளைப் பராமரித்து அவைகளிலிருந்து வரும் நீரை எவ்வாறு உபயோகப்படுத்துவது போன்ற நடைமுறைகளை, நல்ல பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது
இது ஒரு நல்ல சமுதாயத்திட்டம். ஆனால் நம் மக்கள் இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் இது ஒரு பொதுச் சொத்துதானே, நமக்கென்ன ? என்கிற மனப்பான்மைதான். இது நம் அரசியல்வாதிகள் சொல்லிக்கொடுத்த பாடம்தான். எந்தப்போராட்டம் என்றாலும் சேதப்படுத்துவது அரசு பஸ்களைத்தான். அது தேச மக்களின் பொது சொத்தாயிற்றே, நமக்குத்தானே அது பயன்படுகிறது, அதை சேதப்படுத்தலாமா? என்ற உணர்வே மக்களுக்கு அறவே இல்லாமற்போனது. இந்த மனப்பான்மையின் காரணமாகவே ஏறக்குறைய அனைத்து சமுதாயப் பொதுக்கிணறுகளும் சரிவரப் பராமரிக்கப்படாமல் தூர்ந்து போயின.

3.   நீர்த் தேவை குறைவான பயிர்களைப்பயிரிடுதல்.

நெல், வாழை, கரும்பு, மஞ்சள், போன்ற பயிர்களுக்கு நீர்த்தேவை அதிகம். சோளம், கம்பு, போன்ற பயிர்களுக்கு நீர்த்தேவை குறைவு. நிலத்தடி நீரை உபயோகிக்கும்போது நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடுதல் நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்க முடியும்.

வளர்ந்த நாடுகளில் நாட்டின் மொத்தத் தேவையை கருத்தில் கொண்டு எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன பயிர்கள் பயிரிடலாம் என்று கட்டுப்பாடு செய்கின்றார்கள். அந்த நாடுகளில் விவசாயப் பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயித்து விடுவதாலும், விவசாயிகளுக்கு உழைப்புக்குத் தகுந்த லாபம் கிடைப்பதாலும், இந்தக் கட்டுப்பாட்டுக்கு விவசாயிகளின் மத்தியில் எந்த எதிர்ப்பும் கிளம்புவதில்லை.  


4.   நீர்த் தேவை குறைக்கும் விவசாய உத்திகள்.

விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் பயிர்களின் நீர்த்தேவையைக் குறைக்கும் பல உத்திகளை ஆராய்ந்து கண்டு பிடிக்கிறார்கள். உதாரணமாக, தென்னைக்கு முன்பெல்லாம் வயல் முழுவதும் நீர் பாய்ச்சுவார்கள். அது தேவையில்லை, தென்னை மரத்தின் வேர்ப்பகுதியில் ஒரு வட்டப்பாத்தி அமைத்து அதற்கு மட்டும் தீர் பாய்ச்சினால் போதும் என்று ஆராய்ச்சிகள் கண்டு பிடித்தன. இப்போது ஏறக்குறைய எல்லா விவசாயிகளும் இந்த முறையில்தான் நீர் பாய்ச்சுகிறார்கள்.

இப்படி பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. விவசாயிகளும் அவைகளைக் கடைப்பிடித்து பயன் பெறுகிறார்கள்.

5.   மல்ச்சிங்க் அல்லது மண்ணின் மேற்பரப்பை மூடி வைத்தல்.

நிலத்திற்கு நீர் பாய்ச்சியவுடன் அந்த நீரானது மண்ணில் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு நனைக்கும். அந்த ஆழத்திற்குள்தான் பெரும்பாலான விவசாயப்பயிர்களின் வேர்கள் இருக்கின்றன. நீர் பாய்ச்சி முடித்தவுடன் மண்ணில் சேர்ந்த நீரானது செடிகளின் வேர்களினால் உறிஞ்சப்படுகின்றது. இது தவிர கணிசமான நீர் ஆவியாகவும் செல்கிறது. இந்த ஆவியாகும் செயல் மேல் மண்ணின் மூலமாகவே நடக்கிறது.
இவ்வாறு நீர் ஆவியாதலைக் குறைத்தால் மண்ணில் ஈரம் இன்னும் சிறிது நாட்களுக்கு இருக்கும். அதனால் பாசனம் செய்யவேண்டிய காலம் நீட்டிக்கும் அதாவது பயிர்களின் நீர்த்தேவை குறையும். இதற்கு மண்ணின் மேற்பரப்பில் பண்ணையில் கழிவாகும் இலைதழைகளை பரப்பி வைத்தால் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாவது குறையும். இந்த உத்தியையும் பெரும்பாலான விவசாயிகள் தென்னை, திராக்ஷை போன்ற பயிர்களுக்கு கடைப்பிடித்து வருகிறார்கள்.

6.   சொட்டு நீர்ப்பாசன முறைகள்.


இஸ்ரேல் நாட்டில் ஒரு தண்ணீர் விநியோக இஞ்சினீயர் அகஸ்மாத்தாக கண்டு பிடித்த முறைதான் சொட்டு நீர்ப்பாசன முறை. அவருடைய அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு ஆலிவ் மரம் மற்ற மரங்களை விட மிகவும் அதிகமாக வளர்ந்திருந்தது. அது எப்படி என்று அவர் ஆராய்ந்தபோது அந்த மரத்திற்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு தண்ணீர்க் குழாயில் ஒரு லேசான கசிவு இருந்திருக்கிறது. அந்தக்கசிவு நீர் அந்த மரத்தின் வேர்களை எப்போதும் ஈரமாகவே வைத்திருந்திருக்கிறது. இதுதான் அந்த ஆலிவ் மரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அவர் யூகித்தார். இந்த யூகத்தை உறுதிப்படுத்த அவர் இன்னும் சில மரங்களுக்கு இதே மாதிரி குழாய்கள் அமைத்து அந்த மரங்களின் வேர்ப் பகுதியில் நீர் கசியுமாறு ஏற்பாடு செய்தார். சில வருடங்களில் அந்த மரங்களும் மற்ற மரங்களை விட அதீத வளர்ச்சி பெற்றன. இதை அவர் விவசாய விஞ்ஞானிகளுடன் விவாதித்து இந்த சொட்டு நீர்ப்பாசன முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். உலகில் பல கண்டுபிடிப்புகள் இந்த மாதிரி அகஸ்மாத்தாகக் கண்டு பிடிக்கப்பட்டவைகள்தான்.

இந்த சொட்டு நீர்ப்பாசன முறைகள் இஸ்ரேலில் முறைப்படுத்தப்பட்டு, பின் மற்ற நாட்டுகளுக்கும் பரவின. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டுக்குச் சென்ற நம் நாட்டு விஞ்ஞானி டாக்டர் சிவனப்பன் என்பவர் இந்த முறைகளைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டுவந்து தமிழ்நாட்டில் பரப்ப மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டார். மெதுவாக இந்த முறையானது பரவி இப்போது பல பயிர்களுக்கு, குறிப்பாக தென்னை, திராக்ஷை போன்ற பாசனம் செய்ய கடைப்பிடிக்கப் படுகிறது. இதன் நன்மைகளை உணர்ந்து அரசும் இந்த முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு அதற்காகும் செலவில் பாதிக்கு மேல் மான்யம் வழங்குகிறது.

7.   நீர் உபயோகத்திற்கு கட்டுப்பாடுகள்.

இனி சொல்லப்போகும் உத்திகள் கொள்கை ரீதியான முடிவுகள் ஆகும். இதை அமல்படுத்த அரசு தேவையான கொள்கை முடிவுகள் எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் நிலத்தடி நீரின் அளவைப் பொருத்துத்தான் அந்தப்பகுதியில் பொருத்தமான பயிர்கள் பயிரிடவேண்டும். இதற்கு அந்தப் பகுதி விவசாயிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். ஆனால் இன்று நிலவும் பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியமாகுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாய் நிற்கிறது.

8.   தொழில் நுட்ப வழிகாட்டுதல்.

விவசாய நீர்ப்பாசன முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்து விவசாய ஆராய்ச்சி நிலயங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. அவைகளின் பலனாக பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளை முறையாக விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

9.   கட்டண முறை நீர் விநியோகம்.

விவசாயிகளுக்கு நீலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தண்ணீர் என்பது ஒரு இலவசமாகவும் அபரிமிதமாகவும் கிடைக்கக் கூடிய பொருள் என்கிற எண்ணத்தை அனைவரும் மறக்கவேண்டும். குடிப்பதற்கான தண்ணீரை விலைக்கு வாங்கப் பழகி விட்டோம். குடியிருப்புப் பகுதிகளில் புழங்குவதற்கான நீருக்கு விலை கொடுக்கிறோம். அது போல விவசாயத்திற்கு வேண்டிய நீரையும் கட்டண முறையில் வாங்க வேண்டிய நிலையை உருவாக்கினால் நீரைக் கட்டுப்பாடாக உபயோகிக்கும் பழக்கம் உருவாகும்.
சொட்டு நீர்ப்பாசனம் பிரபலமாக இருக்கும் இஸ்ரேலில் ஒருவர் புதிதாக விவசாயப் பண்ணை ஆரம்பிக்க வேண்டுமென்றால், அவர் தேவையான நிலம் வைத்திருக்கவேண்டும். அந்த நிலத்தில் சொட்டுநீர்ப் பாசனத்திற்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களும் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்தால், அவர்கள் நிலத்தை ஆய்வு செய்து, அனைத்துப் பணிகளும் முடித்து வைத்திருந்தால் தண்ணீர் கனெக்ஷனுக்கு அனுமதி வழங்குவார்கள். நம் ஊரில் வீட்டு பைப் கனெக்ஷனுக்கு வைப்பது போல் ஒரு மீட்டரும் வைத்து விடுவார்கள். தண்ணீர் இவ்வளவுதான் உபயோகிக்கலாம் என்ற கட்டுப்பாடும் விதித்து விடுவார்கள். அந்த தண்ணீருக்குள் உங்கள் வசதிப்படி விவசாயம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீரை உபயோகித்திருந்தால் தண்ணீர் கனெக்ஷனை ரத்து செய்து விடுவார்கள்.
அங்கு விவசாயிகளுக்குள்ள ஒரு சௌகரியம் என்னவென்றால் அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஏற்றுமதி மார்க்கெட் இருக்கிறது. அதனால் நல்ல விலை கிடைத்து விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இருக்கிறது. நம் ஊரில் தக்காளி ஒரு சமயத்தில் முப்பது ரூபாய்க்கும் பின் ஒரு சமயத்தில் மூன்று ரூபாய்க்கும் விற்கிறது. அதிலும் வியாபாரிகள் எடுத்துக்கொண்டது போக மீதி பாதிதான் விவசாயிக்குப் போய்ச் சேருகிறது.
இந்த நிலை மாறவேண்டும். விவசாயம் ஒரு பெரும்பான்மையான தொழிலாக இருக்கும் ஒரு நாட்டில் இந்த நிலை இருப்பது மிகவும் வேதனையானது.

சனி, 20 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 6இந்த நிலத்தடி நீர் அருகி வருவதை சமாளிக்க இரண்டு முக்கியமான வழிகள் இருக்கின்றன. தனி நபர் பொருளாதாரத்தை மேலாண்மை செய்வது போல்தான் இதுவும்
அதாவது ஒன்று வரவை அதிகப்படுத்துவது
இரண்டு செலவைக்குறைப்பது.


முதலில் நிலத்தடி நீரின் வரவை அதிகப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்..

1.  நிலத்தை உழுது வைத்தல்.


மழை பெய்யும்போது மழை நீர் என்ன ஆகின்றது என்று பலரும் கவனித்திருப்பார்கள். நிலம் கட்டாந்தரையாக இருந்தால் விழும் மழைநீர் முழுவதும் பள்ளத்தை நோக்கி வழிந்து ஓடி வீணாகி விடுகின்றது. இப்படி ஓடும் நீர் எல்லாம் சேர்ந்துதான் ஆறுகளை வெள்ளக்காடாய் மாற்றுகிறது. ஒரே நேரத்தில் இவ்வாறு அதிகமான நீர் ஓடும்போது அதைக்கட்டுப்படுத்த எல்லா இடங்களிலும் அணை கட்ட முடிவதில்லை.

நிலங்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தால் மழை பெய்யும்போது நிலம் மழைநீரை உறிஞ்சிக்கொள்ளும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று நிலத்தடி நீராய்ச்சேரும். இது ஒரு முக்கியமான செயல்முறை. ஆகவே தரிசு நிலங்களை எப்பொழுதும் உழுது வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்த நிலத்தில் பெய்யும் மழைநீரானது தரை மட்டத்தில் வழிந்து ஓடாமல் நிலத்திற்குள் ஊடுருவிச்சென்று நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும்.

2.   நிலங்களில் சமச்சீர் வரப்புகள் அமைத்தல்.
                         
சாய்வாக இருக்கும் நிலங்களில் விழும் மழைநீரானது பூமியில் நிற்காமல் ஓடி வடிநீர் ஓடைகளில் சேர்ந்து விடும். அப்படி ஓடும் நீரால் நிலத்திற்குள் ஊடுருவிச்செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த நீரை வேகமாக ஓடாமல் கட்டுப்படுத்தினால் அந்த நீரானது பூமிக்குள் ஊடுருவிச் செல்ல கிடைக்கும் நேரம் அதிகமாகும். அப்போது நிலத்தடிநீர் அதிகரிக்கும்.
இதற்காக நிலங்களில் சமச்சீர் வரப்புகள் (Contour bunds) அமைத்தால் வேகமாக ஓடும் மழைநீரை நிறுத்தி வைக்கும். அப்போது அதிக அளவில் நீர் பூமியில் ஊடுருவிச் செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.
3.   வரப்புகளின் ஓரங்களில் வாய்க்கால்கள் வெட்டுதல்.


இந்த சமச்சீர் வரப்புகள் அமைக்கும்போதே, நீர் தேங்கும் பக்கத்தில் இந்த வரப்புகளை ஒட்டி அரை அடி அகலம், இரண்டடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை வெட்டி வைத்தால், மழை நீர் முழுவதும் அந்த வாய்க்கால்களில் தேங்கி, முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவிச் சென்றுவிடும். அப்போது இன்னும் அதிக நீர் நிலத்தடியில் சேரும்.

4.   தடுப்பணைகள் கட்டுதல்
எவ்வளவு உத்திகளை நடைமுறைப்படுத்தினாலும் மழை காலங்களில் நீர் பல இடங்களிலிருந்து வழிந்து போகத்தான் செய்யும். இந்த நீர் பல காலமாகச் செல்லும் ஓடைகளை பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த நீரை ஆங்காங்கே குளம் மாதிரி நிறுத்தி வைத்தால் அந்த நீர் பூமிக்குள் ஊடுருவிச் செல்லும் என்ற தத்துவம் விஞ்ஞானபூர்வமாக பல நாடுகளில் பரிசோதனைகளின் மூலம் அறியப்பட்டது.
இந்த உத்தியை நம் நாட்டிலும் பல இடங்களில் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்தது. இந்திய அரசு இந்த முறையை முடிந்த இடங்களில் எல்லாம் நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்திரவு பிறப்பித்து அதற்கான நிதியும் கொடுத்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்பட்டது. எதற்கென்றால் இந்த தடுப்பணைகள் கட்டவும், அங்கு சேரும் நீரை சேமித்து வைக்கவும் போதுமான இடம் வேண்டும். அதற்கு தகுந்த விலை கொடுத்தாலும் விவசாயிகள் அந்த நிலத்தைக் கொடுக்க முன் வரவேண்டும்.


விவசாயிகள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த மாதிரி தடுப்பணை கட்டிய இடங்ளில் ஏற்பட்ட நிலத்தடி நீர் அதிகரிப்பை நேரில் பார்த்து மனம் மாறினார்கள். பல இடங்களில் இருந்து எங்கள் நிலத்தில் தடுப்பணை கட்டுங்கள் என்று வேண்டுகோள்கள் வந்தன. தடுப்பணை கட்ட வசதி உள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதன் பலனை விவசாயிகள் கண்கூடாக அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.

5.   ஏரிகள், குளங்களைப் பராமரித்தல்.

பள்ளியில் படிக்கும்போது சரித்திரப் பாடப் பரீட்சையில் ஏதாவது மன்னர் பெயரைக்கொடுத்து அவர் நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்று ஒரு கேள்வி கட்டாயமாக இருக்கும். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஒன்றும் யோசிக்கவே வேண்டியதில்லை. சாலைகள் போட்டார், மரங்கள் நட்டார், ஏரி, குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார் என்று தயங்காமல் எழுதிவிடலாம். முழு மார்க் கிடைத்துவிடும்.

ஆகவே ஒரு நாட்டின் வளம் பெருக, ஏரி, குளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பது விளங்கும். மழைநீர் அவைகளில் சேர்ந்து குடி நீராகவும், பாசனத்திற்கும் பயன்படுவது போக நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் மிகவும் உதவும்.

ஆனால் இன்று நடப்பது என்ன? எங்கள் ஊரில் ஒரு குளத்தை எங்கள் பஞ்சாயத்து தலைவர் பட்டா போட்டு விற்றுவிட்டார். ஏறக்குறைய தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குளக்கரைகளிலும் குடிசை போட்டிருக்கிறார்கள். இதற்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் ஆதரவு. அந்த வட்டாரத் தலைவரை அழைத்து ஒரு கூட்டம் போட்டு ஒரு கொடிக் கம்பத்தை நட்டுவிட்டால் அந்தக் குளக்கரை பட்டா போடாத குடியிருப்பு ஆகிவிடும்.

கொஞ்சம் கொஞ்சமாக குளத்திற்கு உள்ளேயும் குடிசைகள் போடுவார்கள். மழைகாலத்தில் குளத்தில் தண்ணீர் சேரும்போது குளக்கரையை வெட்டி தண்ணீரை வெளியேற்றுவார்கள். இவர்களை யாரும் கேட்கமுடியாது. இவர்களுக்கு ஒரு லோகல் தலைவன் இருப்பான். அவன் ஒரு பக்கா ரவுடியாகவும், ஆளும் கட்சித் தலைவனுக்கு அடியாளாகவும் இருப்பான். அவனை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்யமுடியாது.

6.   வீடுகளில் மழைநீர் சேகரித்தல்.


பழங்காலத்தில் வீடுகள் எல்லாம் ஓட்டு வீடுகளாக இருந்தன. அப்போது மழை பெய்தால் மழைநீரெல்லாம் சேர்ந்து ஒரு மூலையில் விழும். அந்த நீரைச்சேகரித்து குடிப்பதற்காக பதனப்படுத்துவது வழக்கம். இதற்காக தனியாகத் தொட்டிகள் கூட சில ஊர்களில் கட்டுவது உண்டு. இப்பொழுது எல்லா ஊர்களிலும் தண்ணீர் விநியோகம் பைப்புகள் மூலம் நடைபெறுவதால் இந்த முறை வழக்கொழிந்து போயிற்று. ஆனாலும் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டபிறகு இந்த நீரையும் ஏன் உபயோகப்படுத்தக்கூடாது என்கிற எண்ணம் வந்தது


போன தடவை (அம்மா) ஆட்சி இருந்தபோது மழைநீர் சேகரிப்புத்திட்டம் அமல் படுத்தப்பட்டது. என்ன கொடுமை என்றால் எங்கே (கிராமப்புறங்களில்) செய்ய வேண்டுமோ அங்கே விட்டுவிட்டு தேவையில்லாத இடங்களில் (நகர்ப்புறங்களில்) அதை அமல்படுத்தினார்கள். நகர்ப்புறங்களில் ஏற்கனவே நீர் மட்டம் உயர்ந்து கட்டிடங்களுக்கு அபாயம் விளைவிக்குமளவிற்கு இருக்கிறது. இந்த திட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தினால் கணிசமான பலனை அனுபவிக்கலாம்.

7.   ரிவர்ஸ் பம்ப்பிங்க்.

பம்ப்பிங்க்என்றால் நிரத்தடி நீரை நம் உபயோகத்திற்காக மேலேற்றுவது என்று பொருள். இதற்கு எதிராக, மேலே உள்ள நீரை நிலத்தடிக்கு அனுப்புவதைரிவர்ஸ் பம்ப்பிங்க்என்று கூறுகிறார்கள். நிலத்தில் சில இடங்கள் பள்ளமாக இருக்கும். அங்கிருக்கும் நீர் எவ்வழியிலும் வெளியேற முடியாமல் போகும். அதை அப்படியே விட்டால் கொஞ்சம் நீர்தான் நிலத்தடிக்குச் செல்லும். மீதி நீர் ஆவியாகி பலனில்லாமல் போகும்.

அப்படிப்பட்ட இடங்களில் இந்த உத்தியை பயன்படுத்தலாம். இது எப்படியென்றால், நீர் தேங்கும் இடங்களில் குறைந்த இடைவெளியில் 10 அல்லது 15 அடி ஆழத்திற்கு போர் போட வேண்டும். சுமார் 10 போர்கள் போடலாம். அந்த இடத்தில் தேங்கும் நீர் இந்த போர்களின் வழியே நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று அங்கிருந்து ஊடுருவி நிலத்தடி நீரோடு சேரும். என்னவோ கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிப்பது போல் தோன்றுகிறதல்லவா? இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தத்துவம் ஆகும்.
கோவை நகர்ப்புறத்தில் ஒரு சாலையில் தண்ணீர் வெளியில் போக வாட்டம் இல்லாததால் தேங்கிக்கொண்டு இருந்தது. அங்கே இந்த முறையை கடைப்பிடித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம்.

8.   நதி நீர் இணைப்புத்திட்டங்கள்.

இவைகளைப்பற்றி பல காலமாகப் பேசிக்கொண்டு இருக்கிறோம். சில தலைப்புகள் அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தவை. அவைகளில் இதுவும் ஒன்று. நம் அரசியல் வாதிகளுக்கு ஒரு பிரச்சினை பிடித்துப்போய்வுட்டது என்றால் அதைத் தீர்க்க மாட்டார்கள். அதைப்பற்றி பேசிப்பேசியே நாட்களை ஓட்டுவார்கள். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதற்கு இந்தப்பிரச்சினைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. குறிப்பாகத் தேர்தல் சமயங்களில் இந்தப் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வார்கள். வாய் கிழியப் பேசுவார்கள். தேர்தல் முடிந்ததும் பிரச்சினையை மறந்து விடுவார்கள். நம் நாட்டை ஆண்டவனாகப்பார்த்து காப்பாற்றினால்தான் விடிவு ஏற்படும் என்று எண்ணாமல் ஆழ்ந்த சிந்தனையும் தொலை நோக்குப் பார்வையும் கொண்டு செயல்பட்டால்தான் நம் நாட்டிற்கு நல்ல காலம் ஏற்படும்.

இனி நிலத்தடி நீரின் செலவைக்குறைப்பது அதாவது பயன்பாட்டில் எவ்வாறு சிக்கனமாக இருப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.
தனி நபர் வாழ்விலேயே செலவைக்குறைப்பது என்பது ஒரு கானல் நீராகவே இருக்கிறது. எல்லா மனிதர்களும் பணத்தை இருக்கும் வரை செலவு செய் என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அது மாதிரியே விவசாயிகளும் நீரைப்பயன்படுத்துவதில் இதே கொள்கையைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருவன் மட்டும் சிக்கனமாக இருந்து என்ன பயன்? எல்லோரையும் கட்டுப்படுத்துங்கள், நானும் கட்டுப்படுகிறேன் என்கிற மனப்பான்மையில் நடந்து கொள்கிறார்கள். இந்திய மக்களுக்கு தேசப்பற்று என்பது சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதுடன் முடிந்து போகிறது. தேசத்தின் வளங்களைக் காத்து, அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொடுக்கும் பெரும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று யாரும் நினைப்பதேயில்லை. இது காலம் காலமாக இந்தியப்பிரஜையின் இரத்தத்தில் ஊறிப்போன குணமாகும்.