வெளிநாட்டு சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிநாட்டு சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 அக்டோபர், 2011

வெளிநாடு செல்ல (Departure) நடைமுறைகள்


சென்னை விமான நிலையத்தில் நான்கு வழிகள் இருக்கின்றன.

1.   வெளிநாடு செல்பவர்கள் விமான நிலையம் உள்ளே செல்லும் வழி.

2.   வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வெளியே வரும் வழி.

3.   உள்நாட்டுப் பயணிகள் உள்ளே செல்லும் வழி.

4.   உள்நாட்டுப் பயணிகள் வெளியே வரும் வழி.

ஏன் இப்படித் தனித்தனியாக வைத்திருக்கிறார்கள் என்றால் பயணிகளுக்கு குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவே.

நாங்கள், நானும் என் மனைவியும், வெளிநாடு செல்பவர்கள் உள்ளே செல்லும் வழிக்குப் போய் சேர்ந்தோம். டாக்சியை விட்டு இறங்கினோம். அங்கு இருக்கும் ஒரு தள்ளு வண்டியைப் பிடித்து அதில் எங்கள் சாமான்களை ஏற்றினோம். எல்லா ஊர் விமான நிலையங்களிலும் இந்த மாதிரி தள்ளு வண்டிகள் உண்டு. கட்டணம் எதுவுமில்லை. அவரவர்கள் உபயோகித்துவிட்டு ஆங்காங்கே விட்டு விடலாம்.

எங்கள் டூர் ஏஜென்ட் எங்களை அங்கேயே இருக்கச் சொல்லியிருந்தார். அவர் 7.30 மணிக்கு அங்கு வந்து சேர்ந்தார். அவரவர்களுக்குரிய பாஸ்போர்ட்டுகளையும் பிளேன் டிக்கட்டுகளையும் கொடுத்தார். எல்லோரையும் ஏர்போர்ட் உள்ளே சென்று வெய்ட்டிங்க் ஹாலில் ஒரு குழுவாக இருக்கச்சொன்னார். எல்லோரும் வந்து சேர்ந்த பின் வெளிநாடு செல்லும் நடைமுறையை ஏஜென்ட் உதவியுடன் அனுசரிக்க ஆரம்பித்தோம்.

நீங்கள் விமான நிலையத்திற்குள் புகுந்த பிறகு விமானத்தில் ஏறி உட்கார நான்கு படிகள் தாண்ட வேண்டும்.
   
  1. உங்கள் பாஸ்போர்ட், விமான டிக்கட் இவைகளைச் சரி பார்த்து உங்களுக்கு இருக்கைச் சீட்டு தருவார்கள். இதற்கு போர்டிங் கார்ட் என்று பெயர். இவர்களே உங்கள் செக்-இன் பேக்கேஜையும் எடை போட்டு வாங்கிக் கொள்வார்கள்.

அதாவது நீங்கள் கொண்டு செல்லும் உடமைகளை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். கொஞ்சம் பெரிதாக இருப்பவைகளை அவர்களே வாங்கிக்கொண்டு பிளேனில் சாமான்கள் கொண்டுபோகும் பகுதியில் எடுத்துச்சென்று நீங்கள் பிளேனை விட்டு இறங்கும்போது கொடுப்பார்கள். இதற்கு “செக்-இன்” லக்கேஜ் என்று பெயர். கொஞ்சம் சிறியதாக இருக்கும் உடமைகளை (ஒன்று மட்டும்) நீங்களே கையோடு எடுத்துக் கொண்டு பிளேனுக்குள் உங்கள் சீட்டுக்கு மேலே இருக்கும் சாமான் வைக்கும் பகுதியில் வைத்துக் கொள்ளலாம். இறங்கும்பொது மறக்காமல் இந்த சாமானை எடுத்துக்கொண்டு இறங்கவேண்டும். இதற்கு கேபின் பேக்கேஜ் என்று பெயர்.

இவைகளுக்கு அதிக பட்ச எடை அளவு உண்டு. செக்-இன் லக்கேஜ் 20 கிலோவுக்குள்ளும் கேபின் பேக்கேஜ் 7 கிலோ அளவுக்குள்ளும் இருக்கவேண்டும். எடை அதிகமானால் பணம் வசூலிப்பார்கள். சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்கிற ரீதியில் இந்த கட்டணம் இருக்கும்.

செக்-இன் லக்கேஜ் ஒவ்வொன்றிற்கும் ஒரு அடையாள “டேக்” உங்கள் லக்கேஜில் ஒட்டி அதன் ஒரு சிறிய பகுதியை உங்கள் போர்டிங் பாசில் ஒட்டுக் கொடுப்பார்கள்.

2.   அடுத்தது எமிக்ரேஷன்/இமிக்ரேஷன் பகுதி. இங்கு உங்கள் பாஸ்போர்ட்டையும் விசாவையும் செக் செய்து அதில் ஒரு முத்திரையைக் குத்துவார்கள். அதாவது நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக அர்த்தம். இதற்குப் பிறகு நீங்கள் பிளேனுக்கு செல்லாமல் இருக்கமுடியாது.

3.   அடுத்து கஸ்டம்ஸ் பரிசோதனை. நீங்கள் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்கிறீர்களா என்று உங்கள் உடமைகளை எக்ஸ்-ரே மிஷின் மூலம் பார்ப்பார்கள். நீங்கள் கையில் எடுத்துச் செல்லும் சாமான்களில் கத்தி, மற்றும் ஏதாவது கூர்மையான முனை கொண்ட பொருட்கள் இருக்கக் கூடாது. அவைகளை செக்-இன் லக்கேஜில்தான் வைக்க வேண்டும். செல்போன், கேமரா, லேப்டாப் போன்றவைகளை செக்-இன் லக்கேஜில் வைக்கக் கூடாது.

4.   அடுத்தது செக்யூரிடி பரிசோதனை. நீங்கள் உங்கள் உடம்பில் ஏதாவது ஆயுதம் மறைத்து எடுத்துப் போகிறீர்களா என்று பரிசோதிப்பார்கள்.
இவை முடிந்தவுடன் நீங்கள் ஒரு பெரிய ஹாலில் இருப்பீர்கள். நிறைய சேர்கள் போட்டிருப்பார்கள். உங்களைப் போன்று பலர் மனதில் ஒரு விதமான எதிர்பார்ப்புடன் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.

விமானம் ரெடியானவுடன் இன்ன ஊருக்குப் போகும் விமானம் தயாராக உள்ளது, அதில் பயணம் செய்பவர்கள் விமானத்திற்குச் செல்லவும் என்று ஒரு அறிவிப்பு செய்வார்கள். காத்திருப்பவர்கள் எல்லோரும் சத்திரப்பட்டி பஸ் வந்தவுடன் ஓடுவார்களே அந்த மாதிரி ஓடுவார்கள். எல்லாருக்கும் அவரவர்கள் சீட் நெம்பர் போட்டு டோகன் கொடுக்கப் பட்டிருந்தாலும் ஏதோ நம் சீட்டை வேறு யாராவது பிடித்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் தள்ளுமுள்ளு செய்வார்கள். கண்றாவியாக இருக்கும். விமானத்தை விட்டு இறங்கும்போதும் இவ்வாறுதான் தள்ளுமுள்ளு செய்வார்கள். என்ன செய்வது, ரத்தத்தில் ஊறிப்போன வழக்கம். மாற்ற முடிவதில்லை.


ஒரு வழியாக பிளேனில் ஏறி உட்கார்ந்துவிட்டீர்களா? இனி நிச்சயமாக நீங்கள் டிக்கெட் வாங்கியுள்ள வெளி நாட்டுக்கு உங்களைக் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். அந்தக் காலத்தில், அதாவது சுமார் முப்பது வருடங்களுக்கு முன் விமானப் பயணம் என்பது பெரிய பணக்காரர்களுக்கும் உயர் அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே சாத்தியமான ஒன்றாய் இருந்தது. டிக்கட் விலை அதிகம். ஆனால் அதற்குத் தகுந்த மாதிரி சேவைகளும் இருந்தன. விமானம் பறக்க ஆரம்பித்ததிலிருந்து இறங்கும் வரை ஏதாவது உபசாரம் நடந்து கொண்டே இருக்கும். நல்ல உணவு வகைகள். நல்ல மதுவகைகளும் வெளிநாட்டு விமானங்களில் கொடுப்பார்கள்.

ஆனால் இன்று விமானப் பயணம் ரயிலில் ஜனதா வகுப்பு போல் ஆகிவிட்டது. பணம் கொடுத்தால்தான் உணவு வகைகள் கிடைக்கும் என்றாகி விட்டது. நம்ம ஆட்களுக்குத்தான் இதையெல்லாம் சமாளிக்கத் தெரியுமே. வீட்டிலிருந்து புளியோதரை கட்டிக்கொண்டு வந்து ஏர்போர்ட்டில் சாப்பிட்டுவிட்டு பிளேன் ஏறுகிறார்கள். எப்படியோ பிளேன் சவாரி செய்தாகிவிட்டது. அது போதும். நாங்கள் காலை 7.30 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்தோம். இங்குள்ள லோகல் டைம் இந்தியாவை விட 2.30 மணி அதிகம்.


கோலாலம்பூர் விமான நிலையம் மிகப் பெரிதாக இருக்கிறது. ஆனால் ஜனங்களையே காணவில்லை. மலேசியாவில் ஜனத்தொகை மிகவும் குறைவு. காலைக் கடன்களையெல்லாம் ஏர்போர்ட்டிலேயே முடித்துக் கொள்ளச்சொல்லி எங்கள் டூர் ஏஜென்ட் சொல்லிவிட்டார். ஏனென்றால் நாங்கள் அங்கிருந்து 150 கி.மீ. தூரத்திலுள்ள “ஜென்டிங் ஹைலேண்ட்” என்ற இடத்திற்குச் சென்று அங்குதான் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோலாலம்பூரில் காலைக் கடன்களுக்காக தனியாக ஓட்டல் ஏற்பாடு செய்ய நாங்கள் கொடுத்த பணம் போறாது. ஏர் போர்ட்டில் உள்ள பாத்ரூம்கள் வசதியாகவும் சுத்தமாகவும் இருக்கின்றன.

வெளிநாடுகளில் ஓட்டல் ரூம்களில் தங்குவதும் காலி செய்வதும் நம் ஊர் போல் இல்லை. நம் ஊர்களில் பெரும்பாலான ஓட்டல்களில் 24 மணி நேரம் ஒரு நாளாகக் கருதப்படுகிறது. அதாவது நாம் காலை 7 மணிக்கு ரூம் எடுத்தால் அடுத்த நாள் காலை 7 மணிக்கு காலி செய்தால் ஒரு நாள் வாடகைதான். ஆனால் வெளி நாட்டில் செக்-இன் டைம், அதாவது ரூம் எடுக்கும் நேரம் மாலை 3 மணி. செக்-அவுட் டைம் பகல் 12 மணி. நம் ஊர் போல் காலை 7 மணிக்கு ரூம் எடுத்து மறுநாள் காலை 7 மணிக்கு காலி செய்தால் இரண்டு நாள் வாடகை கொடுக்கவேண்டும். இன்னொன்று -  எல்லா ஓட்டல்களிலும் காலை உணவு இலவசம். அதற்கும் சேர்த்துத்தான் ரூம் வாடகை வாங்குகிறார்கள்.

ஆகவே இங்கிருந்து செல்லும் டூர் ஏஜென்ட்டுகள் இந்த நேரத்தை அனுசரித்தே புரொக்ராம் போடுவார்கள். டூர் செல்வோர் இதை மனதில் கொள்ளவேண்டும். குறைவான கட்டணத்தில் வெளிநாட்டு டூர் என்றால் இப்படி சில சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்.