நமது மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் பதவி ஏற்ற பிறகு பல வெளிநாட்டுகளுக்குப் போய் வருவது அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு நம் நாட்டிற்கும் வெளி நாட்டு முதல் மந்திரிகள் அல்லது பிரசிடெண்ட்டுகள் வருகிறார்கள். போகிறார்கள். இவர்களின் இந்த பயணங்களின் நோக்கம் என்னவென்று யாராவது யோசிக்கிறார்களா?
இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த வெளிநாட்டுப் பயணங்களின் முக்கிய நோக்கம் என்று சொல்லுகிறார்கள். இது சரியே. ஆனால் எப்படி இந்த இரு நாட்டு உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன?
எனக்கு இப்போது ஒரு வேலை வெட்டியும் இல்லாததால் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்தேன். நமது மாண்பு மிகு பிரதம மந்திரிதான் இந்த யோசனையைத் தூண்டிவிட்டார்.
இந்திய நாடு காலம் காலமாக அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பது உலகப் பிரசித்தம். அவ்வப்போது நம் செய்தித்தாள்களில் ஒரு மூலையில் இந்த விவகாரம், அதாவது நமது பிச்சைக்காரத்தனம் பற்றி ஏதாவது ஒரு அறிக்கை வெளியாகும்.. இந்தியாவின் அயல் நாட்டுக் கடன் இவ்வளவு ஆயிரம் அல்லது லட்சம் கோடி இருக்கிறது என்று செய்தி வெளியாகும்.
நமக்கு கோடிக்கு எத்தனை சைபர் என்பதே சந்தேகம். அப்புறம் எங்கே லட்சம் கோடி என்றால் என்ன என்று புரிந்து கொள்வது? ஏதோ வெளிநாட்டில் இந்தியாவிற்கு நிறைய சொத்து இருக்கிறது போல. அது நமக்கெதற்கு? அதையெல்லாம் மத்திய சர்க்கார் பார்த்துக்கொள்வார்கள். நமக்கு பஞ்சப்படி அதிகப்படுத்தியிருக்கிறார்களா? அதைப் பார் என்று அடுத்த பக்கத்திற்குப் போய் விடுவோம்.
நாமே அயல் நாட்டவரிடம் பிச்சையெடுத்துப் பிழைக்கிறோம். ஆனால் நமது பிரதம மந்திரி, தான் போகும் நாட்டில் எல்லாம் 10000 கோடி கொடுக்கிறேன், 20000 கோடி கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு வருகிறாரே, அது எப்படி என்று எனக்கு ஒரே குழப்பம்?
இதைப் பற்றி சில நண்பர்களிடம் விவாதித்தேன். அவர்கள் இப்படியும் ஒரு அடிமுட்டாள் இருப்பானா என்கிற மாதிரி ஒரு லுக் விட்டு விட்டு, என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு டீக்கடை வாசலில் உட்கார்த்தி வைத்து டீ வாங்கிக்கொடுத்து (செலவு என்னுடையது) எனக்கு ட்யூஷன் எடுத்தார்கள். டீக்கடை வாசல் எதற்காகவென்றால் அங்கிருந்துதான் ஒரு நாட்டின் பிரதம மந்திரிகள் உற்பத்தியாகிறார்களாம்.
அவர்கள் சொன்னதாவது. அட, மடப்பயலே, இப்போ நீ ஒரு டீக்கடை ஆரம்பிக்கறேன்னு வச்சுக்கோ. இன்னும் ஒரு இருபது முப்பது வருஷத்தில நீ இந்த நாட்டிற்குப் பிரதம மந்தி(ரி)யாய் ஆகி விடுவாய். அப்புறம் நாங்க எல்லாம் எங்கே போறது? உங்கூடத்தான் இருப்போம். அப்புறம் எங்களுக்கெல்லாம் ஒரு வழி காட்டவேண்டியது உன் பொறுப்பாகி விட்டதல்லவா?
அப்போ நீ என்ன பண்ணறே? வெளிநாட்டுக்கு டூர் போற. அப்படிப்போறப்ப எங்களையும் கூட்டீட்டுப் போற. அங்க போய் உங்களுக்கு என்னவேணும்னு கேக்கற. அவனுங்க எங்கூர்ல கரண்ட் பத்தல, கரன்ட் வேணும்கறாங்கன்னு வச்சுக்குவோம். உடனே நீ என்ன பண்ற, ஆஹா, இதோ இருக்காங்களே இவங்கதான் எங்க ஊர்ல கரன்ட் ஸ்பெஷலிஸ்ட்டுக, உங்க ஊருக்கு இவிங்க கரன்ட் மிசின் வச்சுக்கொடுப்பாங்க, சரியான்னு கேட்டுட்டு, அவங்க மண்டைய மண்டைய ஆட்டுன ஒடனே ஒரு ஒப்பந்தம் போடுவியாம்.
அந்த ஒப்பந்தத்தில நீ (அதாவது, பிரதம மந்திரியான நீ) உங்க நாட்டிற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுக்கிறேன். அந்தப் பணத்தில உங்களுக்கு வேண்டிய கரன்ட் மிசினையெல்லாம் வாங்கிக்கோங்க. அந்த மிசினை இவிய சப்ளை பண்ணுவாங்க. அவங்களே அதை எப்படி ஓட்டறதுன்னும் சொல்லிக்கொடுப்பாங்க. நீங்க கரன்ட்ல ஏசி மாட்டிட்டு அனுபவிச்சிட்டு இருக்கவேண்டியதுதான் அப்படீன்னு பேசி முடிச்சுடு. அவ்வளவுதான் மிச்சத்த நாங்க பாத்துக்குறோம். வர்ற லாபத்தை ஈக்வலா பகுந்துக்குவோம்.
இப்படியாக வருங்கால பிரதம மந்திரியாகிய எனக்கு என் தோஸ்த்துகள் யோசனை கூறினார்கள். எனக்கும் புரிபடாமல் இருந்த பல சந்தேகங்களுக்கு விடை தெரிந்தது.