வைத்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைத்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜனவரி, 2014

எலும்பு முறிவு வைத்தியம்.

டிஸ்கி; இந்தப் பதிவை டாக்டர்கள் குறிப்பாக எலும்பு வைத்திய டாக்டர்கள் படிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஒரு சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும். இந்தப் பதிவைப் படித்து விட்டு யாருக்காவது ஏதாவது ஆட்சேபணை இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். தரக்குறைவான பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.



சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் யாருக்காவது எலும்பு முறிந்து போனால் ஆங்காங்கே இருக்கும் நாட்டு வைத்தியரிடம் போவார்கள். அவர்கள் எலும்பு முறிந்த இடத்தை கையால் தொட்டுப் பார்த்தே அந்த முறிவு எப்படிப்பட்டது என்று கண்டுபிடித்து அதற்குத் தக்கவாறு மூங்கில் தப்பைகளை வைத்து துணியினால் இறுகக் கட்டி அதன் மீது அவர்கள் கொடுக்கும் அவர்களுடைய ஸ்பெஷல் எண்ணை ஒன்றை அடிக்கடி ஊற்றச்சொல்வார்கள்.

வாரத்திற்கு ஒரு முறை நோயாளியை வந்து போகச் சொல்லுவார்கள். கட்டுப்போட்ட இடம் மிகவும் வீங்கியிருந்தால் கட்டை அவிழ்த்து விட்டு மறுகட்டு போடுவார்கள். எப்படிப்பட்ட எலும்பு முறிவாக இருந்தாலும் இந்த வைத்தியத்தில் எலும்பு கூடிவிடும். பெரிய காயங்கள் இருந்தால்தான் கொஞ்சம் சிரமம். முதலில் காயம் ஆறவேண்டும். பிறகுதான் எலும்பைக் கவனிக்க முடியும். அதற்குள் எலும்பு எசகு பிசகாக ஒட்டிவிடும் வாய்ப்பு உண்டு. அப்போது அந்த எலும்பு ஓரளவு சரியாகச் சேர்ந்திருந்தால் அப்படியே விட்டு விடுவார்கள். இல்லையென்றால் அப்படி சேர்ந்த எலும்பை மறுபடியும் உடைத்து, பிறகு அதை நேராக வைத்து கட்டுப்போடுவார்கள்.

எல்லாம் நாட்டு வைத்தியம்தான். கோவையில் தெலுங்குபாளையம் உடையார் வைத்தியசாலை மிகப்பிரசித்தம். இங்கு சரியாகாத உடைந்த எலும்பு எங்கு போனாலும் சரியாகாது என்று சொல்வார்கள். இப்படி ஊர் ஊருக்கு ஒரு வைத்தியசாலை இருக்கும். சென்னைவாசிகள் புத்தூர் வைத்தியத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்திருப்பார்கள்.

இந்த வைத்தியம் மிகவும் எளிமையானது. ஏழைகளுக்கும் கட்டுப்படியாகக் கூடியது. என்ன, வீட்டில்  மற்றும் துணிமணிகளில் எண்ணை நாற்றம் போக ஓரிரு வருடங்கள் ஆகலாம். அவ்வளவுதான். இந்த மாதிரி வைத்தியங்கள்
வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்ததற்கு காரணம் எலும்புகளின் தன்மைதான்.

மனித உடம்பு மற்றும் சகல உயிருள்ள ஜீவராசிகளின் தனித்தன்மை என்னவென்றால் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ள முடிவது. எந்த வியாதியாய் இருந்தாலும் சும்மா விட்டு விட்டால் தானாகவே சரியாய் விடும். என்ன, கொஞ்ச நாள் பிடிக்கும். ஆனால் மனிதனுக்கு மட்டும் ஆத்திரம். நோய் சீக்கிரம் குணமாக வேண்டும். இதற்காகத்தான் வைத்தியர்கள் பிறந்தார்கள்.

பல விதமான வைத்திய முறைகள் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி வளர்ந்தன. இதில் நம் நாட்டு ஆயுர்வேத முறை சிறந்து விளங்கியது. உணவே மருந்து என்ற முறையில் வளர்ந்தது. பண்டைக்காலத்தில் நாவிதர்கள்தான் மருத்துவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் அப்படித்தான் நாவிதர்கள்தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இந்த முறைகளே பிற்காலத்தில் மாறி பல வித வைத்திய முறைகள் உருவாக வழி வகுத்தது.

எலும்பு வைத்தியத்திற்கு வருவோம். நாட்டு வைத்தியர்கள் குறைந்த செலவில் வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். பிறகு இங்கிலீஷ் வைத்தியம் வந்தது. எக்ஸ்-ரே மிஷின் கண்டு பிடித்தார்கள். இந்த மிஷின்கள் எலும்புகளை துல்லியமாய் படம் எடுத்தன. எலும்பு உடைந்ததை சரியாக கண்டு பிடிக்க முடிந்தது. இதனால் எலும்பு வைத்தியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. தெலுங்குபாளையம் வைத்தியர் கூட எக்ஸ்-ரே மிஷின் வாங்கி வைத்தார்.

நாட்டு வைத்தியத்திற்கும் இங்கிலீஷ் வைத்தியத்திற்கும் ஒரே வித்தியாசம், இல்கிலீஷ் வைத்தியத்தில் மாவுக்கட்டு போட்டார்கள். எண்ணை வாசம் இல்லை. ஆகவே மக்கள் இந்த முறையை அதிகம் விரும்பலானார்கள். இப்படி எலும்பு வைத்தியம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மற்ற இங்கிலீஷ் வைத்தியத்துறைகளில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு டாக்டர்கள் புகழ் பெற்றார்கள். குறிப்பாக அறுவை சிகிச்சைகளில் நூதன உத்திகள் கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்களால் பின்பற்றப்பட்டன. அவர்களின் கல்லாவும் நிறைந்தது.

பாவம், எலும்பு வைத்தியர்கள்! வெறும் மாவுக்கட்டு மட்டும் போட்டுவிட்டு என்ன பில் போட முடியும்? ஏதோ ஓரிரு ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே பில் போட முடிந்தது. இந்த காலத்தில் மேலை நாடுகளில் சிக்கலான எலும்பு முறிவுகளுக்கு ஆபரேஷன் செய்து எலும்புகளுக்கு சப்போர்ட்டாக துருப்பிடிக்காத இரும்புத்துண்டுகளை வைத்து ஸ்குரூ ஆணி வைத்து முறுக்கி வைத்தியம் செய்தார்கள். இப்படி செய்யும்போது  நோயாளிக்கும் டாக்டர்களுக்கும் சேர்த்து நல்ல பலன் கிடைத்தது.

இங்கிலீஷ் வைத்தியத்தில் கத்தி வைத்தால்தான் மதிப்பு. வெறும் மருந்து மட்டும் கொடுக்கும் டாக்டர்களுக்கு மதிப்பு கொஞ்சம் குறைச்சல்தான். ஆகவே எலும்பு வைத்தியத்துறையிலும் கத்தியையும் புத்தியையும் உபயோகிக்கும் பல நூதன உத்திகளை கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ளார்கள். இவை நோயாளியை சீக்கிரம் குணப்படுத்தவும் அவனுடைய பர்சை சீக்கிரம் இளைக்க வைக்கவும் உதவின.

இன்று எலும்பு வைத்தியத்திற்கென்றே ஸ்பெஷலிஸ்ட்டுகளும் ஸ்பெஷல் ஆஸ்பத்திரிகளும் உருவாகி மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றன.
ஏறக்குறைய இருதய ஆபரேஷன் அளவிற்கு எலும்பு வைத்தியமும் முக்கியத்துவம் அடைந்துள்ளது எல்லோருக்கும் (குறிப்பாக எலும்பு வைத்திய டாக்டர்களுக்கும்) மகிழ்ச்சியளிக்கிறது.

திங்கள், 23 ஏப்ரல், 2012

நல்ல ஆஸ்பத்திரியை அடையாளம் காண்பது எப்படி?



மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ஆண்டவன் பல சோதனைகளைக் கொடுக்கிறான். அதில் ஒன்றுதான் உடல்நலக் குறைவு. சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற வியாதிகளென்றால் நாம் வழக்கமாகப் போகும் டாக்டரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ளலாம்.


ஆனால் சற்றுப் பெரிய, குறிப்பாக நெஞ்சுவலி போன்ற நோய்கள் வந்து விட்டால், வீட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடும். என்ன செய்வது, எந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்பது பற்றி ஆளாளுக்கு யோசனை சொல்வார்கள். வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்களானால் பிரச்சினை இல்லை. ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம். எவ்வளவு செலவானாலும் கொடுத்துவிட்டு வந்து விடலாம்.


ஏழைக்குடும்பங்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. நேராக கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார்கள். அங்கு என்ன ஆனாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவம் அவர்களுக்கு உண்டு.


ஆனால் நடுத்தர வசதியுள்ள குடும்பங்களில் இந்த மாதிரி சமயங்களில் முடிவு எடுப்பது மிகவும் கடினம். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போவது அவர்களுக்கு கௌரவக்குறைச்சல். பெரிய ஆஸ்பத்திரிகளுக்குப் போய் அங்கு ஆகும் செலவுகளைத் தாக்குப் பிடிப்பதுவும் கடினம். இவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.


இவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களுக்கும் மெடிகல் இன்சூரன்ஸ் எடுப்பது மிக மிக அவசியம். அதுவும் ஆஸ்பத்திரிகளில் பணம் செலுத்த வேண்டியிராத பாலிசி எடுப்பது அவசியம். அது தவிர இந்த வசதிகளைச் செயல்படுத்தும் ஆஸ்பத்திரிகள் எவை என்று கண்டு பிடித்து, அவைகளுடன் தொடர்பு வைத்திருப்பது அவசியம். 


இவைகளையெல்லாம் தங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்போதே செய்து வைத்திருப்பது அவசியம். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போல் இருக்கக்கூடாது.


இந்தக் குறிப்புகளை நான் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. டாக்டர்கள் கண் கண்ட தெய்வங்கள்தான். அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரி என்று ஒன்று கட்டிவிட்டார்களேயானால் அவர்களே சாத்தான்களின் மறு அவதாரமாகி விடுகிறார்கள்.


உலகத்தில உசிரோட இருக்கிற நோயாளிகளுக்குத்தான் வைத்தியம் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனா எனக்குத் தெரிந்து இங்குள்ள பெரிய கார்பரேட் ஆஸ்பத்திரியில் செத்துப் போனவர்களுக்குக் கூட வைத்தியம் பார்ப்பார்கள். சினிமா இல்லைங்க. நிஜம்.


ஒருவர் சீரியஸ் நோயாளியாக இருந்தால் அவரை உடனடியாக ICU வில் வைத்து விடுவார்கள். இது எல்லாருக்கும் தெரியும். நெருங்கிய உறவினர்களை மட்டும் தினம் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பார்க்க விடுவார்கள். என்ன வைத்தியம் பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்ல மாட்டார்கள். தினம் காலையில் டாக்டர் வந்து விட்டுப் போனவுடன் ஒரு முழ நீளத்திற்கு மருந்து லிஸ்ட் கொடுப்பார்கள். அந்த மருந்துகளை அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் கடையில்தான் வாங்க வேண்டும்.


அதை ICU வாசலில் கொண்டு போய்க் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். நாம் என்ன நினைப்போமென்றால், இந்த மருந்துகளை எல்லாம் நம் உறவினருக்குக் கொடுப்பார்கள் என்றுதானே? உங்கள் நினைப்பு தவறு. அந்த மருந்துகள் அப்படியே மருந்துக் கடைக்குப் போய் விடும். தினந்தோறும் இப்படி லிஸ்ட் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாமும் வாங்கிக்கொடுத்துக்கொண்டே இருப்போம்.


இதை நம்புவது கடினம். பெரிய ஆஸ்பத்திரிகளில் இப்படியும் மனச்சாட்சி இல்லாமல் இருப்பார்களா என்ற சந்தேகம் வரும். இது நடக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன்.


ஆகவே நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் உங்கள் ஊரில் இருக்கும் ஆஸ்பத்திரிகளைப் பற்றி நன்கு விசாரித்து,ICU இல்லாத ஆஸ்பத்திரியைக் கண்டுபிடித்து அந்த ஆஸ்பத்திரியின் டாக்டரிடம் தொடர்ந்து தொடர்பில் இருங்கள். 


சில ஆஸ்பத்திரி டாக்டர்கள் நோயாளிகளிடம் அதீத அன்புடையவர்களாய் இருப்பார்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டால் நோய் குணமானபின்பும் உங்களை டிஸ்சார்ஜ் செய்யமாட்டார். நீங்களாக டாக்டரை நச்சரித்தால் ஒழிய உங்களை டிஸ்சார்ஜ் பண்ண மாட்டார். அப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில் போய் சிக்கிக் கொள்ளவேண்டாம்.


நீங்கள் எப்பேர்ப்பட்ட வியாதியிலிருந்தும் குணமாவது உங்கள் விதியைப் பொருத்துத்தான் அமையும் என்பதை மனதில் கொள்ளவும். அதனால் உங்களுடைய வசதிக்கு மீறீன வைத்தியத்திற்குத் தலைப்படாதீர்கள்.


உங்களுக்கு எப்போதும் நல்ல உடல் நலம் வாய்க்க ஆண்டவன் அருள் புரியட்டும்.