கொஞ்சும் சலங்கை என்ற சினிமா வந்த புதிதில், 1962 என்று ஞாபகம், சிங்கார வேலனே தேவா என்ற பாடல் பிரபலமாகி பட்டி தொட்டிகளிலெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது. திருமதி ஜானகி திரை உலகத்தில் பிரவேசித்த முதல் பாடல். ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல். திரு காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையோடு பின்னிப்பிணைந்த பாடல். அதற்கு முன்பும் அப்படி ஒரு பாடல் வந்ததில்லை. அதற்குப்பின்பும் அந்த பாடல் மாதிரி வரவில்லை.
நான் அப்போதுதான் முதுகலை படிப்பு முடித்துவிட்டு வேலையில் சேர்ந்திருந்தேன். படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்கவேண்டும். குடித்தனம் நடத்தவேண்டும். அப்போது நான் பிரம்மச்சாரிதான். இருந்தாலும் பாட்டியுடன் தனிக்குடித்தனம். என் அம்மாவிற்கும் பாட்டிக்கும் ஆகாது. ஆனால் நான் பாட்டி செல்லம். ஆகவே என்னை பாட்டியுடன் தனிக்குடித்தனம் அனுப்பி விட்டார்கள்.
இந்த சிங்கார வேலன் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு ஏக்கம் தோன்றும். ஆஹா, இந்தப் பாட்டை கிராமபோன் ரிக்கார்டில் வீட்டில் போட்டு கேட்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்று ஏங்கியிருக்கிறேன். கிராமபோன் வாங்கும் அளவிற்கு என்னுடைய அன்றைய பொருளாதார நிலை இல்லை. இந்த ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
பல வருடம் கழித்து டேப் ரிகார்டர் வாங்கினேன். அதில் இந்தப் பாடல் கேசட் வாங்கி என் மனம் திருப்தியடையும் வரையிலும் இந்தப் பாடலைக்கேட்டேன். இப்போது கம்ப்யூட்டர், சி.டி.ப்ளேயர், ஐபாட், டேப் ரிகார்டர் என்று பலவித உபகரணங்களும் வீட்டில் இருக்கின்றன. இந்தப் பாட்டு பல வடிவங்களில் இந்த உபகரணங்களில் இருக்கின்றன. ஆனால் அன்று டீக்கடைகளில் ஓரமாக நின்று கேட்டு ஆனந்தித்த அனுபவம் இப்போது வரவில்லை.
ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.