போன வாரத்திலிருந்தே என் கம்ப்யூட்டருடைய மானிட்டர் உயிரை விடுவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. மானிட்டர் லைட் விட்டு விட்டு எரிந்தது. பிறகு ஒரேயடியாக அணைந்து விட்டது.
எனக்குத் தெரிந்த கை வைத்தியம் ஒன்றே ஒன்றுதான். அது கேபிள்களை கழட்டி மாட்டுவதுதான். அதை செய்தேன். மானிட்டரும் சாதுவாக வேலை செய்தது. இப்படி இரண்டு நாள் செய்தது. மூன்றாம் நாள் திரும்பவும் மக்கர் செய்தது.
கூகுளில் தேடினேன். சிபியுவில் குப்பைகள் இருந்தாலும் இப்படி செய்யும் என்று போட்டிருந்தது. சிபியூ புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று. சரி, அதையும் செய்து பார்த்து விடலாமென்று ஒரு மாலைப்பொழுதில் சிபியுவை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.
சிபியுவை சுத்தம் செய்வது ஒரு பெரிய இந்திர ஜால வேலை என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் அதில் செருகியிருக்கும் ஒரு டஜன் கேபிள்களை பிடுங்க வேண்டும். பிடுங்குவது சுலபம். மாட்டும்போதுதான் அதில் உள்ள வம்பு புரியும். எந்த கேபிளை எங்கு மாட்டுவது என்பதில் குழப்பம் ஏற்படும்.
முன் அனுபவம் காரணமாக கேபிள்களை கழட்டும்போதே அவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும் லேபிள் எழுதி அது அதில் சொருகி வைத்து விட்டேன்.
பிறகு வேகுவம் கிளீனரை எடுத்து வைத்துக் கொண்டேன். சிபியுவில் உள்ள சைடு கதவைத் திறந்தேன். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. இரண்டே ஸ்க்ரூதான். திறந்தால் உள்ளே ஏகப்பட்ட தூசு, குப்பைகள் மண்டிக்கிடந்தன.
நல்ல காலம் இந்த வேலையை வீட்டு வாசலில் வைத்து செய்தேன். வீட்டிற்குள் இந்த வேலையைச் செய்திருந்தால் வீட்டு அம்மாள் சிபியுவை அப்படியே தூக்கி எறிந்திருப்பார்கள். முதலில் ஒரு பழைய துணியைக் கொண்டு முடிந்த வரை துடைத்தேன். பிறகு வேகுவம் கிளீனரில் புளோயரை ஆன் செய்து புளோயர் நாசிலை சிபியுவின் உள்ளே எல்லா இடங்களிலும் காண்பித்தேன்.
உள்ளேயிருந்து அவ்வளவு தூசிகள் வெளியேறின. வீட்டுக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டருக்குள் இவ்வளவு தூசிகள் எப்படி புகுந்தன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே. அவைகளை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு மறுபடியும் புளோயரால் கிளீன் செய்தேன். இப்படி நாலைந்து முறை செய்த பின் உள்ளேயிருந்து தூசிகள் வருவது நின்று விட்டது.
பிறகு உள்ளேயிருக்கும் விசிறிகளைக் கவனித்தேன். அதில் இறக்கைகளுக்குப் பின்னால் தூசிகள் அடை அடையாய் ஒட்டிக்கொண்டு இருந்தன. அவைகளை எல்லாம் நைசாக ஒரு குச்சியின் மூலம் அகற்றி வெளியே எடுத்தேன். பிறகு அந்த விசிறிகளுக்கு புளோயர் மூலம் காற்று அடித்தேன். மேலும் தூசிகள் வெளியே வந்தன.
இந்த விசிறிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் சிபியுவில் காற்றோட்டம் சரியாக ஏற்பட்டு டெம்பரேச்சர் கன்ட்ரோலில் இருக்கும். இல்லையென்றால் டெம்பரேச்சர் அதிகமானால் சிபியு ஸ்ட்ரைக் செய்து விடும். இப்படி சிபியுவை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்வது அவசியம்.
இப்படி சிபியூவை சுத்தம் செய்த பிறகு எல்லா கேபிள்களையும் சிபியுவில் மாட்டினேன். ஒரு கேபிளும் அநாமத்தாக கிடக்கவில்லை என்று சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டேன். பிறகு சிபியுவிற்கு கரண்ட் கனெக்ஷன் கொடுத்தேன். பழைய குருடி கதவைத்திறடி என்ற கதையாக மறுபடியும் மானிடர் வம்பு செய்தது.
ஓஹோ, இது கொஞ்சம் சீரியசான விவகாரம் போல இருக்கிறது என்று அப்போதுதான் ஞானோதயம் ஏற்பட்டது. இனி ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தேன்.
எனக்கு என்று ஒரு ஆஸ்தான வித்வான் இருக்கிறார். அவரைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். நான் வந்து பார்க்கிறேன் என்று சொன்னார். இரண்டு மணி நேரத்தில் வந்து பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். வந்தது வம்பென்று நினைத்துக் கொண்டு என்னவென்று கேட்டேன். அவர் ஒன்றுமில்லை, இதை இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் (வொர்க் ஷாப்பில்) சேர்த்து ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாய்ப்போகும் என்றார்.
சரி, அப்படியே செய்யுங்கள் என்றேன். அவர் மானிட்டரை எடுத்துச்சென்று விட்டார். எனக்கு ஒரு கை ஒடிந்தது போல் ஆயிற்று. விடிந்ததும் கம்ப்யூட்டர் முகத்தில் விழித்தே பழக்கமாகிப் போனதால் இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறைதான்.
எப்படியோ மூன்று நாட்களுக்குப் பிறகு மானிட்டர் நேற்று மாலை வந்து சேர்ந்தது. கம்ப்யூட்டர் மெக்கானிக் எல்லாவற்றையும் இணைத்து பவர் ஆன் செய்தார். கம்ப்யூட்டர் பழையபடி வேலை செய்ய ஆரம்பித்தது. போயிருந்த என் உயிர் திரும்ப வந்தது.