நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் தாத்தா காலத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்து கோயமுத்தூருக்கு குடியேறினவர்கள். அப்போது கோயமுத்தூரில் புதிதாக லேஅவுட் போட்ட ஆர்எஆஃபுரம் பகுதியில் ஒரு இடம் வாங்கி கிராமத்து பாணியில் ஒரு ஓட்டு வீடு கட்டி குடியிருந்தார்கள். நான் அந்த வீட்டில்தான் பிறந்தேன்.
நான் ஏழாவது படிக்கும்போதுதான் வீட்டிற்கு மின்சார கனெக்ஷ்ன் வந்தது. மின்சாரம் லைட்டுகளுக்கு மட்டும்தான். மின் விசிறிகளெல்லாம் பெரிய பணக்காரர்கள் வீட்டில்தான் இருக்கும். அப்போதெல்லாம் கோவையில் மே மாதம் மட்டும்தான் பகலில் கொஞ்சம் புழுக்கமாக இருக்கும். ஒரு மூங்கில் விசிறியை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டினோம். இரவு வேளைகளில் புழுக்கமாக இருந்ததாக நினைவு இல்லை.
நான் படித்து முடித்து வேலைக்குப் போய் பாட்டியுடன் தனிக்குடித்தனம் வைத்தபோதுதான் ஒரு மேஜை விசிறி வாங்கினேன். பிறகு கல்யாணம் ஆகி குடும்பம் பெரிதான பிறகுதான் சீலிங்க் பேஃன் வாங்கினேன். அதாவது என்னுடைய 35 வது வயதில்.
பிறகுதான் வசதிகள் பெருகின. மாடர்ன் டாய்லெட், கட்டில், பஞ்சு மெத்தைகள், இத்தியாதி. இவைகளுக்குப் பழகிய பிறகு எங்காவது உறவினர்கள் வீட்டிற்குப் போனால் இந்த வசதிகள் இல்லாவிட்டால் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். பழக்கம் மனிதனை எப்படி மாற்றுகிறது பாருங்கள்.
என்னுடைய 75 வது வயதில் வீட்டை மாற்றிக் கட்டின பிறகுதான் ஏசி மெஷின் மாட்டினேன். இப்படியாக படிப்படியாக வளர்ந்து இப்போது வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் எல்லா வேலைகளும் முடங்கிப்போய்விடுகின்றன.
அப்படித்தான் நேற்று இரவு மின்சாரம் போய்விட்டது. விடியும் வரை வரவில்லை. அவ்வளவுதான். நேற்று ராத்திரி யம்மா என்று பாடவேண்டியதாய்ப் போயிற்று,