திங்கள், 29 ஆகஸ்ட், 2016
நெடுங்கதைகள் படிப்பதில் உள்ள சிரமங்கள்
சமீப காலமாக பொழுதைப் போக்குவதற்கு ஒரு வழியாக கதைகள் படிக்கலாம் என்று முயற்சித்தேன். என் நண்பர் ஒருவர் அன்பளித்த கைக் கணிணியில் (Tablet) நிறைய கதைகளைச் சேமித்து வைத்தேன்.
அதில் பல கதைகள் ஆங்கிலத்தில் இருந்தன. பரவாயில்லை, நமக்குத்தான் ஆங்கிலம் நன்றாகத் தெரியுமே என்று சில கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
இளம் வயதில் ஆங்கிலக் கதைகள் பல படித்திருக்கிறேன். அந்த ஆசிரியர்களைப் பற்றி இப்போதுள்ள இளைஞர்கள் அறிய மாட்டார்கள். கோனன் டாயில், மார்க் ட்வைன், ஆர். எல். ஸ்டீவன்சன், எச்.ஜி.வெல்ஸ், மாப்பசான், இப்படி பல ஆசிரியர்கள்.
இப்போது ஆங்கிலத்தில் பலர் நன்றாகவே எழுதுகிறார்கள். எனக்கு இப்போது, அதாவது வயதானபின் சேர்த்துள்ள பல சொத்துக்களில் ஒன்று "மறதி". குறிப்பாக மனிதர்களின் பெயர்கள். ஏதாவது ஒரு விசேஷத்தில் புதிதாகப் பலரை சந்திக்க நேரிடுகிறது. யாராவது சிலர் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அவர் பெயர் என்ன என்று எவ்வளவு யோசித்தாலும் நினைவிற்கு வருவதில்லை. சரி, போகட்டும் என்று விட்டு விடுவது வழக்கமாய் விட்டது.
அந்த மாதிரி பல கதாசிரியர்களின் பெயர்கள் நினைவிற்கு வருவதில்லை. அதுவாவது தொலையட்டும். கதைக்கு வருவோம். கதையில் கதாபாத்திரங்கள் பலர் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த இங்கிலீஷ்காரன்களின் பெயர்களே ஒரு பெரிய மர்மம். இத்தனை வயதிற்கு அப்புறமும் அந்த மர்மத்தை விடுவிக்க என்னால் முடியவில்லை.
உதாரணத்திற்கு ஒன்று: John Fitzgerald Kennedy என்று ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தது பலருக்கு நினைவிருக்கலாம். சாதாரண மக்கள் இவரை Mr.Kennedy கூப்பிடவேண்டும். பெயரை எழுதும்போது முழுசாக John Fitzgerald Kennedy என்று எழுத வேண்டுமாம். அதையே சுருகி எழுதும்போது John F. Kennedy என்று எழுதுகிறார்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை John என்று கூப்பிடலாமாம். பெண்டாட்டி இவரை "ஜோ" என்று செல்லமாகக் கூப்பிடுவாள்.
ஆங்கிலக் கதைகள் ஆரம்பிக்கும்போது ஒருவனை ஒரு பெயரில் அழைத்திருப்பார்கள். இரண்டு பக்கம் கழித்து அவனை இன்னொரு பெயரில் அழைப்பார்கள். இவன் யாருடா, புதிதாக இருக்கிறதே என்று யோசிப்பதற்குள் அவன் காதலி அவனை வேறு ஒரு செல்லப் பெயரில் கூப்பிடுவாள். இந்தக் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் மளமளவென்று பத்துப் பதினைந்து நபர்கள் கதைக்குள் புகுத்தப்பட்டிருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ஐந்து பெயர்கள்.
ஆச்சா, தலை சுற்ற ஆரம்பித்து விடும். சரி, முதலில் இருந்து வரலாம் என்று திரும்பவும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பித்தால், இரண்டு மூன்று பக்கத்திற்கு மேல் கவனம் நிலைப்பதில்லை. புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழித்துப் படிக்க ஆரம்பித்தால் கதையை எங்கே விட்டோமென்பது தெரியமாட்டேன் என்கிறது.
மறுபடியும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். இப்படி ஒரு கதையைப் படிப்பதற்கு முதல் பக்கத்தை மட்டும் ஒரு ஐம்பது தடவை படித்திருப்பேன்.
தமிழ்க்கதைகளில் இந்த மாதிரி குழப்பங்கள் கிடையாது. பத்துப் பேர் கதையில் இருந்தாலும் எல்லாம் சுப்பன், குப்பன் என்றிருப்பதால் குழப்பம் வருவதில்லை. ஆனால் என்ன கஷ்டம் என்றால் தமிழ்க் கதைகளை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. இப்போது வரும் கதைகள் மனதிற்கு உகந்ததாய் இல்லை.
ஆனால் எந்தக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த மூன்றாவது நிமிடம் தூக்கம் வந்து விடுகிறது. வயதான காலத்தில் அது ஒரு பெரிய சௌகரியமல்லவா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)